Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டு வாடகை கேட்டதற்கு பாலியல் துன்புறுத்தல் புகாரளித்த பெண் காவல் ஆய்வாளர்

வீட்டு வாடகை கேட்டதற்கு பாலியல் துன்புறுத்தல் புகாரளித்த பெண் காவல் ஆய்வாளர்
, ஞாயிறு, 14 நவம்பர் 2021 (12:52 IST)
(இன்று 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

கேரள மாநிலத்தில் வீட்டு வாடகை கேட்டுவந்த வீட்டு உரிமையாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த பெண் காவல் ஆய்வாளரை கோழிக்கோடு ஆணையர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காவல் உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண் ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் சுகுணாவல்லி (41). இவர் கல்லூரி அருகே உள்ள ஒரு தனியார் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த நான்கு மாதமாக அவர் வசிக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க அவர் முன்வரவில்லை. இதையொட்டி கடந்த இரு வாரமாக வீட்டின் உரிமையாளர் ரகு வாடகை கேட்டு பலமுறை பெண் ஆய்வாளரை நாடியுள்ளார். ஆனால் அவர் வாடகை கொடுக்காமல் ரகுவை ஏமாற்றி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தான் காவல்துறை அதிகாரி என்றும் கூறி மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் வாடகை கேட்க ரகு, பெண் ஆய்வாளர் வீட்டுக்குச் சென்றதால் கோபமடைந்த அவர், வீட்டு உரிமையாளர் மீது பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்றார் எனக்கூறி பனியன்கரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதை தொடர்ந்து போலீசார், வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இது தவிர ரகுவின் மருமகன் பெண் ஆய்வாளரிடம் வாடகை கேட்பதற்காக வந்துள்ளார். அவர் மீதும் பாலியல் தொல்லை செய்ததாக அதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது குறித்து காவல் துறை ஆணையர், கோழிக்கோடு உதவி ஆணையரை அழைத்து வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் நடத்திய விசாரணையில் வாடகை கேட்டு நச்சரித்தார் என்ற கோபத்தில் ரகு மீதும் ரகுவின் மருமகன் மீதும் பெண் ஆய்வாளர் பொய்ப் புகார் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்த முழு விசாரணையில் சுகுணாவல்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையொட்டி காவல் ஆணையர் சுகுணா வல்லியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்தார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கோமியம், சாணத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்': மத்திய பிரதேச முதல்வர்

மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாடு போபாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கலந்து கொண்டு பேசிய போது "மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை பயன்படுத்தி மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்" என்றார்.

மேலும், "சரியான முறையில் அவற்றைக் கையாண்டால் பொருளாதாரம் மேம்படும் என சிவராஜ் சிங் செளகான் பேசினார். "பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பல பொருட்களை தயாரிக்கலாம் எனவும் மத்தியப் பிரதேச அரசு தகன மேடைகளில் மரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார்.

மேலும் கால்நடைகளுக்கு விரைவான மருத்துவ சேவையை உறுதி செய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் வாகன வசதிகள் தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். மாநில முதல்வரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எதற்கெடுத்தாலும் விவசாயிகளைக் குறைகூறாதீர்கள்" உச்ச நீதிமன்ற நீதிபதி காட்டம்

நான் ஒரு விவசாயி, என்னுடைய சகோதரர் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா. ஏழை விவசாயிகளால் எவ்வாறு வேளாண் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை வாங்க முடியும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

ஹரியாணா, பஞ்சாப் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயல்களில் இருக்கும் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை வழங்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்யா துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமான் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி அரசு சார்பில் ராகுல் மேரா ஆகியோர் ஆஜராயினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், சொலிசிட்டர் ஜெனரலிடம் கூறுகையில், "நான் ஒரு விவசாயி. தலைமை நீதிபதி என்.வி.ரமணா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா. வேளாண் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை வடமாநிலங்களில் உள்ள ஏழை விவசாயிகளால் வாங்க முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

இரண்டு லட்சம் இயந்திரங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், ஏழை விவசாயிகளால் இந்த இயந்திரங்களை வாங்க முடியாதே. வேளாண் சட்டங்கள் வந்தபின், உத்தர பிரதேசம். பஞ்சாப், ஹரியாணாவில் வேளாண் நிலம் வைத்திருப்பது மூன்று ஏக்கருக்கும் கீழ் குறைந்துவிட்டது. இந்த இயந்திரங்களை எல்லாம் விவசாயிகள் வாங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

இந்த இயந்திரங்களை ஏன் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கிடக் கூடாது. வேளாண் கழிவுகளை எடுத்துக் காகித ஆலைக்கும், வேறு பயன்பாட்டுக்கும் ஏன் பயன்படுத்தக் கூடாது. குளிர்காலத்தில் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஏன் தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது" எனக் கேள்வி எழுப்பினார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், "வேளாண் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை 80 சதவீத மானியத்தில் அரசு தருகிறது" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி சூர்யகாந்த், "அப்படியென்றால் மானியத்தைத் தவிர்த்துப் பார்த்தால் இயந்திரத்தின் உண்மையான விலை என்ன என்று கணக்கிடுங்கள். விவசாயிகளால் அதை வாங்க முடியுமா எனக் கூறுகிறேன். நான் ஒரு விவசாயி, எனக்குத் தெரியும். தலைமை நீதிபதியும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கும் தெரியும், மற்றொரு நீதிபதி சகோதரருக்கும் தெரியும். எதற்கெடுத்தாலும் விவசாயிகளைக் குறைகூறுவதை ஃபேஷனாக வைத்திருக்கிறீர்கள்" என்று கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கும்! – மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்!