இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்த ஆயுதமோதலில் ஏராளமான தமிழ்ப் பெண்கள் தமது கணவன், சகோதரன், மகன்களை இழந்துள்ளனர்.
தமது குடும்பத்து ஆண்களையெல்லாம் போருக்கு பலிகொடுத்த பெண்கள் முன்னின்று நடத்திச் செல்லும் "பெண்-தலைமைக் குடும்பங்கள்" இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன.
அத்தகைய பெண்களும் அவர்களின் குடும்பங்களும் இன்றளவும் தமது அன்றாட வாழ்வையே பெரும் போராட்டமாக நடத்துவதாக அவர்களில் பலர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
தங்களுக்கான குறைந்தபட்ச நிவாரணங்களும் அடிப்படை வாழ்வாதார உதவிகளும் உரிய அளவுக்கு கிடைக்காததே இதற்குக் காரணம் என்று இத்தகைய பெண்களில் பலர் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் பெ மாணிக்கவாசகத்திடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான இடப்பெயர்வு, சொத்துக்கள் இழப்பு, போதிய வருமானமின்மையால் உருவாகும் பொருளாதார நெருக்கடிகள் போன்றவை ஆண் துணையின்றி குடும்பத்தை நடத்தும் பெண்களை பெருமளவு துன்புறுத்துகின்றன. இவற்றுக்கு மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இவர்களின் பெருங்கவலைகளில் ஒன்றாக நீடிக்கிறது.
போரினால் ஏற்பட்ட காயங்களை உடலிலும், அதன் உளவியல் பாதிப்புக்களை மனதிலும் சுமக்கும் இந்தப் பெண்களுக்கு, தம் குடும்பங்களை நடத்திச் செல்லத்தேவையான பொருளாதாரத்தைத் தேடுவதே அன்றாட வாழ்வின் பெரும் போராட்டமாக நீடிக்கிறது.
போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும், தமக்குத் தெரியாமல் காணாமல் போன அல்லது தம் கண் முன்னே அரச படைகளிடம் சரணடைந்தவர்களின் நிலைமை என்ன ஆனது என்கிற கேள்விக்கு உறுதியான ஏற்கத்தக்க பதில் கிடைக்காத நிலையில் அவர்களைத் தேடி அலைவதே இந்த பெண்கள் பலரின் அன்றாட வாழ்வாகி விட்டதாக கூறுகிறார் மாணிக்கவாசகம்.
இலங்கை இனப்பிரச்சனையைப் போலவே இவர்களின் சொந்த வாழ்வும் கையறு நிலையை எட்டியிருப்பதாக இவர்களில் பலரும் குமுறுகிறார்கள். இலங்கை அரசும், தமிழ் அரசியல் கட்சிகளும் தமக்கு உதவவில்லை என்பது இவர்களின் ஆற்றாமையாக இருக்கிறது.
இருபத்தைந்தாண்டுகால ஆயுதமோதலில் பலவந்தமாக பறிக்கப்பட்டது போக இன்னமும் தம்மிடம் எஞ்சியிருக்கும் சிதறுண்ட தம் சிறு குடும்பங்களை நடத்திச் செல்லத் தேவையான அன்றாட பொருளாதார நெருக்கடி குறித்த கவலையைவிட, காணாமல் போன உறவுகள் குறித்த கவலையே இவர்கள் பலரின் மனதில் மட்டுமல்ல வாழ்விலும் அதிக இடத்தை இன்னமும் ஆக்கிரமித்துள்ளது.
ஏராளமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இத்தகைய பெண்களுக்கு, கடந்த ஆண்டு நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும் பெரிய
மாற்றத்தையோ, முன்னேற்றத்தையோ, நம்பிக்கையையோ இதுவரை ஏற்படுத்தவில்லை.
அடுத்தடுத்து இரண்டு தேர்தல் முடிவுகள் தந்த ஏமாற்றத்தையும் மீறி, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத் தேர்தலும், அதன் முடிவுகளும் தமக்கு ஏதாவது ஒருவிதத் தீர்வைப் பெற்றுத் தருமா என்பதே அவர்களில் பலரும் மீண்டும் மீண்டும் எழுப்பிய ஒரே கேள்வி.
அது வெறும் கேள்வியல்ல. எற்கனவே சந்தித்த ஏமாற்றங்களையெல்லாம் மீறிய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதற்குள் ஏதோ ஒரு மூலையில் இன்னும் எட்டிப்பார்க்கின்றன.