Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் என்னென்ன ஸ்பெஷல்?

கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் என்னென்ன ஸ்பெஷல்?
, வியாழன், 10 டிசம்பர் 2020 (15:15 IST)
இந்திய நாடாளுமன்றத்துக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா டெல்லியில்  நடைபெறவுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவிருக்கிறார். பிரதமர் மோதியின் முழக்கமான ஆத்மநிர்பார் பாரத் எனும் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின்கீழ் இந்த புதிய கட்டுமானம் உருப்பெறவுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் 2022ஆம் ஆண்டில் கொண்டாடப்படும்போது அப்போதைய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் என்று மோதி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
நவீன கலைநயம், எரிசக்தி சேமிப்பு, சமரசத்துக்கு இடமில்லாத பாதுகாப்பு வசதிகள் என முக்கோண வடிவில் இந்த கட்டுமானம், தற்போதைய நாடாளுமன்றத்துக்கு பக்கத்தில் உள்ள இடத்தில் எழுப்பப்படவிருக்கிறது. அளவில் இது தற்போதைய மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
 
தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தின் வயது 93 ஆண்டுகள். அந்த வகையில், புதிய கட்டடம் 130 கோடி இந்தியர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழும் என்று இந்த அடிக்கல் நாட்டு விழா குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தெரிவித்துள்ளார்.
 
புதிய கட்டடத்தில் மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் இருக்கும். தற்போதைய நிலையில் மக்களவையின் இருக்கைகள் எண்ணிக்கை 543, மாநிலங்களவை இருக்கை இடங்கள் 245 ஆகும். இதேபோல, இரு அவை கூட்டத்தொடரின்போது மக்களவையில் 1,224 பேர்வரை அமர்ந்து அவை நிகழ்வில் பங்கெடுக்க முடியும். இந்த புதிய கட்டடத்தில் மைய மண்டபமும் இருக்கும்.
 
சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் அளவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்தின் கட்டுமானச்செலவு, ரூ. 971 கோடி ரூபாய் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
தற்போது மின்துறை அமைச்சகம் அமைந்துள்ள ஷ்ரம் சக்தி பவன் பகுதியில் புதிய கட்டடம் எழுப்பப்படவிருக்கிறது. அதில் எம்.பி.க்களுக்கான ஓய்வறைகள் இருக்கும். நாடாளுமன்ற புதிய கட்டடத்தையும் இந்த கட்டடத்தையும் சுரங்கப்பாதை இணைக்கும். இது தவிர அனைத்து அரசுத்துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு என பிரத்யேக அலுவலகங்கள், செயலக அறைகள் புதிய கட்டடத்தில் இடம்பெறும்.
 
இந்த கட்டுமானத்தின் வடிவமைப்புப் பணி ஹெச்சிபி டிசைன், பிளானிங், மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற மறு நிர்மாண கட்டுமான திட்டத்தின்படி நாடாளுமன்ற கட்டடங்கள் மட்டுமின்றி, சென்டரல் செக்ரட்டேரியட் எனப்படும் மத்திய அரசு பொது கட்டடங்களும் மறுநிர்மாணம் செய்யப்படவிருக்கின்றன. புதிய நாடாளுமன்றம் செயல்பாட்டுக்கு வந்ததும் பழைய நாடாளுமன்ற கட்டடம், நாட்டின் பெருமை மிகு தொல்பொருள் சொத்தாக பராமரிக்கப்படும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஸ் விட்டா போதுமா, பப்ளிக் வர வேண்டாமா? போக்குவரத்து கழகம் குமுறல்!