Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானில் ஒருபாலுறவு சமூகத்தினர் தாலிபன்கள் குறித்து அச்சம்

ஆப்கானில் ஒருபாலுறவு சமூகத்தினர் தாலிபன்கள் குறித்து அச்சம்
, சனி, 21 ஆகஸ்ட் 2021 (12:40 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் எழுச்சிக்கு முன்பு கூட, ஒருபாலுறவினரான அப்துலின் வாழ்க்கை (அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆபத்தாகத்தான் இருந்தது.
 
அவர் தனது பாலியல் சம்பந்தமாக தவறான நபரிடம் பேசியிருந்தால், அப்துல் ஆப்கானிஸ்தான் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
 
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் முக்கிய நகரங்களின் கட்டுப்பாட்டை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். தனது பாலியல் தேர்வு வெளிப்படுத்தப்பட்டால், தான் காணப்படும் "அந்த இடத்திலேயே கொல்லப்படுவேன்" என அப்துல் பிபிசியின் ரேடியோ 1 நியூஸ்பீட்டிடம் கூறினார்.
 
தாலிபன்கள் ஒரு ராணுவக் குழு, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர், மேலும் தீவிர இஸ்லாமியவாத கொள்கைகளை அமல்படுத்துகின்றனர். தாலிபன்கள் பின்பற்றும் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ், ஒருபாலுறவு தடைசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, 21 வயதாகும் அப்துல் பிறந்திருக்கவில்லை. என் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் தாலிபன்களைப் பற்றி பேசுவதை நான் கேள்விப்பட்டேன்," என்று அவர் கூறுகிறார்.
 
"நாங்கள் சில திரைப்படங்களைப் பார்த்தோம். ஆனால் இப்போது, ​​ஒரு திரைப்படத்திற்குள் வாழ்வது போல் இருக்கிறது." இந்த வாரம், அப்துல் தனது பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்க வேண்டும், நண்பர்களுடன் மதிய உணவுக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன் நீச்சல் குளத்தில் சந்தித்த தனது காதலனைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும்.
 
அதற்கு பதிலாக, தொடர்ந்து நான்காவது நாளாக அவரது வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவரது வீட்டு வாசலுக்கு வெளியே தாலிபன்கள் உள்ளனர். "நான் ஜன்னல்கள் வழியாக தாலிபன்களைப் பார்க்கும்போது கூட மிகவும் பயப்படுகிறேன். அவர்களைப் பார்க்கும்போது என் உடல் நடுங்கத் தொடங்குகிறது," என்று அவர் கூறுகிறார்.
 
பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். நான் அவர்கள் முன் பேசுவேன் என்று எனக்குத் தோன்றவில்லை." அப்துலின் பாலுணர்வை பற்றி கண்டுபிடிக்க முடியாதது அந்நாட்டின் புதிய தலைவர்கள் மட்டுமல்ல.
 
"ஆப்கானிஸ்தானில் ஒருபாலுறவினராக இருந்து கொண்டு, உங்களது குடும்பத்தினரிடமோ, உங்கள் நண்பர்களிடமோ கூட உங்கள் பாலுணர்வு குறித்து உங்களை வெளிப்படுத்த முடியாது." என்கிறார் அப்துல்.
 
என் பாலுணர்வு குறித்து என் குடும்பத்துக்கு என்னை வெளிப்படுத்தினால், ஒருவேளை அவர்கள் என்னை அடிக்கலாம், ஏன் ஒருவேளை அவர்கள் என்னைக் கொலை கூட செய்யலாம்." அவர் தனது பாலியல் தேர்வை மறைத்திருந்தாலும், அப்துல் ஆப்கானிஸ்தான் நாட்டின் நகர மையத்தில் தனது வாழ்க்கையை அனுபவித்து வந்தார்.
 
"என் படிப்பு கச்சிதமாக சென்று கொண்டிருந்தது. நகரத்தில் வாழ்க்கை இருந்தது, நகரத்தில் கூட்டம் இருந்தது." ஒரு வார காலத்தில், தன் வாழ்கை தன் கண் முன்னாலேயே காணாமல் போனதாக உணர்கிறார் அப்துல். "எங்களுக்கு எதிர்காலம் இல்லை," என்கிறார் அவர்.
 
நான் என் கல்வியைத் தொடர்வேன் என எனக்குத் தோன்றவில்லை. என் நண்பர்களுடனான தொடர்பை இழந்துவிட்டேன். அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று கூட எனக்குத் தெரியாது. "என் கூட்டாளி, தனது குடும்பத்துடன் வேறு நகரத்தில் சிக்கியுள்ளார். என்னால் அங்கு செல்ல முடியாது, அவரால் இங்கு வர முடியாது."
 
அரசாங்கத்தில் பணிபுரிந்த அவரது தந்தை தாலிபன்களுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார். அப்துலுக்குத் தெரிந்த பெரும்பாலான பெண்கள் தங்கள் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். சிலர் அபாயத்தைத் தாண்டி வெளியே சென்றாலும் ஆண் துணையோடு மட்டுமே வெளியே செல்ல முடியும்.
 
"நான் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன். இந்த விஷயத்திலிருந்து வெளியே வர விருன்புகிறேன். நான் இந்த மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை." என்கிறார் அப்துல். "நான் சுதந்திரமாக வாழும் ஓர் எதிர்காலத்தைத்தான் விரும்புகிறேன், நீங்கள் இங்கே ஒருபாலுறவினராக இருக்கக் கூடாது என்று மக்கள் சுட்டிக்காட்டும் இடத்தில் வாழ விரும்பவில்லை."
 
வித்தியாசமாக ஆட்சி செய்வோம், பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்கிற தாலிபன்களின் வாக்குறுதிகளை அப்துல் நம்பவில்லை. "அரசாங்கத்தில், பள்ளியில் தாலிபன்கள் ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் ஒருபாலுறவினர்கள் அல்லது எல்ஜிபிடி சமூக மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனைவரையும் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவார்கள்."
 
ஆப்கானியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் விமானங்களை நாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் தொங்கிக் காட்சிகளைப் பற்றி பேசுகையில், "அவர்களுக்கு பைத்தியம் இல்லை." என அப்துல் கூறுகிறார்: அவர்களுக்கு இங்கு வணிக வியாபாரங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இங்கே பணிகள் இருக்கின்றன, அவர்கள் இங்கே ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.
 
"ஆனால் அவர்கள் விமான டயர்களை பிடித்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்." நாட்டை விட்டு வெளியேற ஒரு வழியைக் கண்டு பிடிக்க காத்திருக்கிறேன்" என்கிறார் அப்துல். அவரைப் போன்ற ஆப்கானியர்களின் பாதுகாப்புக்கு உதவ சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரசாரகர்கள் முயற்சி செய்கிறார்கள்.
 
அப்துல் கூறுகையில், இங்கிலாந்து தனது நாட்டிலிருந்து 20,000 பேரை குடியேறிகளாக அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கேள்விப்பட்டேன், ஆனால் தங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.
 
இங்கிலாந்து தொண்டு நிறுவனமான ஸ்டோன்வால், LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் உயிர்வாழவும், மீள் குடியேறவும், செழித்து வளரவும் உதவ பிரிட்டன் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. என் செய்தியை யாராவது கேட்டால், ஓர் இளைஞனாக, சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ எனக்கு உரிமை உண்டு என்பதை நான் சொல்ல விரும்புகிறேன், " என்று அப்துல் கூறுகிறார்.
 
"எனக்கு 21 வயதாகிறது. என் வாழ்நாள் முழுவதும், நான் போரிலும், குண்டு வெடிப்புகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழந்து வருகிறேன். "எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எங்கள் உயிருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்."

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவலி மன்னரை வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளே - முதல்வரின் ஓணம் வாழ்த்து!