Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தியோப்பியா பஞ்சம்: போர் நடந்த டீக்ரே பிராந்தியத்தில் பாதிப்பு - ஐநா அதிகாரி தகவல்

Advertiesment
எத்தியோப்பியா பஞ்சம்: போர் நடந்த டீக்ரே பிராந்தியத்தில் பாதிப்பு - ஐநா அதிகாரி தகவல்
, வெள்ளி, 11 ஜூன் 2021 (13:51 IST)
ஐ.நா. ஆதரவு பகுப்பாய்வு ஒன்று வெளியான பிறகு, வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா.மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

"இப்போது பஞ்சம் உள்ளது," "இது மிகவும் மோசமாகிவிடும்." என அவர் கூறினார்

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட டீக்ரே பிராந்தியத்திலும், அம்ஹாரா மற்றும் அஃபார் போன்ற பகுதிகளையும் சேர்த்து 3.5 லட்சம் மக்கள் "கடுமையான நெருக்கடியில்" வாழ்ந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் டீக்ரே பேரழிவிற்கு உள்ளாகி இருக்கிறது. 17 லட்சம் பேர் தங்கள் சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

உணவுத் தேவை மற்றும் உணவு கிடைப்பது மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்வதாக அம்மதிப்பீடுகள் அங்கு நிலவும் பசிப் பிரச்சனையை வரையறுக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமையான யுனிசெஃப் உட்பட பல்வேறு அமைப்புகளும் இப்பிரச்சனையைக் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

மரண வாசலில் மனிதர்கள்

டீக்ரேவின் மேற்குப் பகுதியில் இருக்கும் கஃப்தா ஹுமேரா மாவட்டத்தில் வாழும் மக்கள், தாங்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக பிபிசியிடம் கூறினர்.

நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை" என ஒருவர் தொலைபேசி வழியாக கூறினார். தங்களது பயிர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் எல்லாம் கடந்த ஏழு மாதமாக நடந்த போரில் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

"நாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பயிர்களை உண்டோம். ஆனால் இப்போது எங்களிடம் எதுவும் இல்லை" என 40 வயதான விவசாயி ஒருவர் கூறுகிறார்.

"யாரும் எங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. நாங்கள் எல்லோரும் கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருக்கிறோம். எங்கள் கண்களிலேயே பசி தெரிகிறது. சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. மரணம் எங்கள் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறது. எங்கள் அனைவரின் முகத்திலும் நீங்கள் பசியைப் பார்க்க முடியும்"

உதவிகள் தங்களைக் கடந்து சென்றதை கண்டதாகவும், ஆனால் யாரும் அங்கு நிலவும் சூழலைக் குறித்து கவலைப்படவில்லை என அப்பகுதியில் வாழும் மக்கள் கூறுகிறார்கள்.
1984ல் ஏற்பட்ட எத்தியோப்பியப் பஞ்சம் உலகின் மனசாட்சியை உலுக்கியது.

வறட்சியாலும், போராலும் ஏற்பட்ட அந்தப் பஞ்சமும் டீக்ரே மற்றும் வூலோ பகுதிகளில்தான் மையம் கொண்டிருந்தன. அப்பஞ்சத்தில் ஆறு முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

போர் விளைவுகள்

ஒருங்கிணைந்த கட்ட வகைப்பாடு (Integrated Phase Classification - IPC) என்பது உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடும் ஓர் அளவுகோள். இதை ஐநா உட்பட பல்வேறு அமைப்புகளும் கணக்கிட்டு இருக்கின்றன.

டீக்ரே, அம்ஹாரா, அஃபார் போன்ற பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஐபிசி பகுப்பாய்வின் படி, கடந்த மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் 3.5 லட்சம் பேர் மிக மோசமான நிலையில் (ஐபிசி நிலை 5) இருக்கின்றனர்.

"போரின் விளைவுகளால் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் மக்கள் வேறு இடங்களுக்குப் பெயர்ந்தது, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது, மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது, பயிர்கள் சேதமடைந்தது மற்றும் கால்நடைகள் கொள்ளை போனது, சந்தைகள் இயங்காதது போன்றவைகளும் அடங்கும்" என அவ்வறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

மே மாதம் வரை, அப்பகுதியில் வாழும் மக்களில் 55 லட்சம் பேருக்கு மேல் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த சூழல் மேலும் செப்டம்பர் மாதம் வரை மோசமடைய வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக பஞ்சம் நிலவுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

எப்போது பஞ்சம் என அறிவிக்கப்படும்?

இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, பசி போன்ற பிரச்சனைகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தலை தூக்கும் போதுதான் பஞ்சம் அறிவிக்கப்படுகிறது. அவை:

1. ஒரு பகுதியில் குறைந்தது 20% குடும்பங்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டும்

2. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு விகிதங்கள் 30 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.

3.இறப்பு விகிதம் 10,000 நபர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு நபர்களை விட அதிகமாக இருக்க வேண்டும்

பஞ்சம் நிலவுகிறது என அறிவிப்பதால் ஐ.நா அல்லது உறுப்பு நாடுகள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என எதுவும் இல்லை. ஆனால் அப்பிரச்சனை குறித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்க்க உதவுகிறது.

டீக்ரே சிக்கலின் பின்னணி

2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

2019ம் ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களின் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார் அவர். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என டீக்ரே நிர்வாகம் கருதுகிறது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு எல்லையைக் கடந்துவிட்டது என்று கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.

டீக்ரே பிராந்தியத்தின் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது எத்தியோப்பிய அரசு.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!