Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

BBC
, திங்கள், 27 பிப்ரவரி 2023 (14:33 IST)
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியின் அருகே சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக - அதிமுகவினர் சர்ச்சையாகி வாக்குவாதம் எழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ராணுவ படை உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து அனுமதி இன்றி கூடியிருந்த அரசியல் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோட்டில் 80% மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி சின்னமான கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க முடிவு செய்துவிட்டனர். வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக உள்ளது. 21 மாத கால திமுக ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி அமையும். ராகுல் காந்தி மேற்கொண்ட பாத யாத்திரைக்கு ஆதரவாகவும் இந்த முடிவு அமையும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மக்கள் வெற்றியை தீர்மானித்து விட்டார்கள். எதிர்க்கட்சியினர் சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அனுமதியில்லாமல் இயங்கிய இரு கட்சிகளின் பணிமனைகளையும் மூடியுள்ளது. தேர்தல் நல்லபடியாக, நேர்மையாகவே நடைபெற்று வருகிறது" என்றார்.

21 மாத கால திமுக ஆட்சி மற்றும் ஓராண்டு கால உள்ளாட்சி அமைப்புகளின் மீதான மதிப்பீடாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிற நிலையில் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இரு கூட்டணிக்கும் இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணயில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில் இம்முறை அதிமுக நேரடியாக களம் கண்டது.

அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் தேர்தல் களம் காண்கின்றனர்.

மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி நாளன்று பிரச்சாரம் செய்தனர்.

திமுக ஆட்சியின் மீதான எடைத்தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதியம் 1 மணிக்குள் 45% வாக்குப்பதிவு.. மாலைக்குள் 60%ஐ தாண்டும் என எதிர்பார்ப்பு..