Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உள்ள மருந்து நிறுவனத்தின் கண் மருந்தில் கலப்படமா? - நள்ளிரவில் நடந்த சோதனை

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (15:48 IST)
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் என்ற மருந்தில் கலப்படம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதால்” யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று நுகர்வோருக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடந்துள்ளது.

இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படவில்லை.

அந்தச் செய்தியின்படி, மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு இணைந்து, அந்த மருந்து நிறுவனத்தின் கண்களுக்கான சொட்டு மருந்து குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளன.

இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு, சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மருந்து நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவில் சோதனை நடத்தச் செல்வதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவில் சோதனை நடந்துள்ளது. இரவு 2 மணி வரை சோதனை நடைபெற்றுள்ளது.

நள்ளிரவில் நடந்த சோதனை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாட்டின் சுகாதாரத்துறைச் செயலர் செந்தில் குமார், தமிழ்நாடு அரசு மூலமாகச் சோதனை நடைபெறுவதற்கு முன்பாகவே குளோபல் ஃபார்மா நிறுவனம் தனது தயாரிப்புப் பணிகளை நிறுத்தி வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

''அமெரிக்க அரசின் தகவல் கிடைத்ததும், குளோபல் ஃபார்மா நிறுவனம் ஏற்கெனவே தங்களது மருந்துகளை யாராவது வைத்திருந்தால் அதை உடனே திருப்பி அனுப்புமாறு அறிவித்துவிட்டார்கள். எங்கள் அதிகாரிகள் சோதனை செய்யச் சென்ற நேரத்தில் அங்கு எந்தத் தயாரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. ஏற்கெனவே தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத மாதிரிகளை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மருந்து தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதே மருந்துகளிலிருந்து மாதிரிகளைச் சோதனை செய்ய எடுத்துள்ளோம்,'' என்று செந்தில்குமார் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அரசின் ஆய்வறிக்கையின் இறுதி முடிவுகளை வைத்துத்தான் குளோபல் ஃபார்மா நிறுவனத்தின் மருந்தில் கோளாறுகள் இருந்ததா என்று உறுதி செய்யமுடியும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் மாதிரிகளைச் சோதனை செய்யும் என்றும் செந்தில் குமார் தெரிவித்தார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, குலோபல் ஃபார்மா பிரைவேட் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.

அதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மருந்துகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை இது தடுத்து நிறுத்தும். உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, நுகர்வோரையும் மருத்துவர்களையும் எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் அல்லது டெல்சாம் ஃபார்மாவின் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் பொருளை வாங்க வேண்டாமென்று எச்சரிக்கிறது.

அதில் பாக்டீரியல் கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கலப்படமான சொட்டு மருந்தைப் பயன்படுத்துவது கண் பார்வையை இழப்பது முதல் இறப்பு வரை கொண்டு செல்லக்கூடும்,” என்று தெரிவித்துள்ளது.

குலோபல் ஃபார்மா நிறுவனம், நிறுவனம் தாமாக முன்வந்து சந்தையிலுள்ள மருந்துகளையும் நுகர்வோர்களிடம் இருக்கும் மருந்துகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

மேலும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “அந்த நிறுவனத்தின் தற்போதைய நல்ல உற்பத்தி நடைமுறை மீறல்கள், பொருத்தமான நுண்ணுயிர் சோதனைகள் இல்லாமை, உற்பத்தியில் சிக்கல்கள்(நிறுவனம் போதுமான பாதுகாப்பு இல்லாமல் பலமுறை பயன்படுத்தும் பாட்டில்களில் கண் மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்கிறது) உள்ளிட்ட காரணங்களால் இந்த மருந்தை திரும்பப் பெறுமாறு“ கூறியதாக தனது அறிக்கையில் தெரிவித்தது.

நேற்று நள்ளிரவில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள், குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னைக்கு தெற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த மருந்து நிறுவனம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் குறைந்தது 55 நோயாளிகளுக்கு நோய்த்தொற்றுகள், கண் பார்வைக் குறைபாடு மற்றும் பாதகமான நிகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதிகாலை 2 மணி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் உற்பத்தியாளரின் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் உற்பத்தி ஆலைக்கு, தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம், புதன்கிழமையன்று எஸ்ரிகேர் எல்.எல்.சி மற்றும் டெல்சாம் ஃபார்மா ஆகியவற்றால் அமெரிக்காவில் விநியோகிக்கப்பட்ட காலாவதியாகாத கண் சொட்டு மருந்துகளை நுகர்வோர் மட்டத்தில் தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

எஸ்ரிகேர் ஃபார்மா புதன்கிழமையன்று ஓர் அறிக்கையில், கண் சொட்டு மருந்தின் விநியோகம் மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் அதன் உற்பத்தியோடு பாக்டீரியல் கலப்படத்தை “உறுதியாகத் தொடர்புபடுத்தும்” எந்தச் சோதனை குறித்தும் தனக்குத் தெரியாது என்றும் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

டெல்சாம் ஃபார்மாவின் செய்தித் தொடர்பாளர், “இந்த மருந்து தயாரிப்புகளை கேட்டுக்கொண்டபடி நிறுவனம் அகற்றியுள்ளது. அந்த மருந்துகளில் பாதுகாப்பு முத்திரை உள்ளதாகவும் அவற்றுக்கும் வாடிக்கையாளர்களின் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படுவதில்லை.

குளோபல் ஃபார்மா நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தின் பயன்பாடு என்ன என்றும் அதுபோன்ற கண்சொட்டு மருந்தில் கலப்படம் இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் மருத்துவர் பிரகாஷிடம் பிபிசி கேட்டது.

''குளோபல் ஃபர்மா நிறுவனம் குறித்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு மட்டும் மருந்துகளை அனுப்பியுள்ளது என்பதால் நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. குறிப்பாக 'artificial tears lubricant' என்ற மருந்தை கண்களில் வறட்சி உள்ள நபர்களுக்குத்தான் பரிந்துரை செய்வோம்.

முதியவர்களுக்குத்தான் இந்த மருந்து அதிகம் பரிந்துரைக்கப்படும். கண்ணீர் சுரக்கும் சுரப்பியில் பிரச்னைகள் இருந்தால் இந்த மருந்து தேவைப்படும். இதை பல மாதங்கள் பயன்படுத்தவேண்டியிருக்கும். ஒருவேளை இந்த மருந்தில் கலப்படம் இருந்தால், 'கார்னியா' என்று சொல்லப்படும் விழியின் வெண்படலத்தில் புண் ஏற்படும்,''என்கிறார் பிரகாஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments