Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

Advertiesment
Russia War

Prasanth Karthick

, திங்கள், 11 நவம்பர் 2024 (13:31 IST)

ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.

 

 

மாஸ்கோவை நோக்கி வந்த சில ட்ரோன்கள் உட்பட ஆறு பிராந்தியங்களில் 84 யுக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மூன்று முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

 

சனிக்கிழமை இரவு, யுக்ரேன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கி ரஷ்யா 145 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

‘மாஸ்கோ மீதான மிகப்பெரிய தாக்குதல்’
 

மாஸ்கோ மீது யுக்ரேன் நடத்திய இந்தத் தாக்குதல் முயற்சி என்பது போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய தலைநகர் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். மாஸ்கோ பிராந்திய ஆளுநரும் இதை ‘மிகப்பெரிய அளவிலான தாக்குதல்’ என்றே விவரித்தார்.

 

ரஷ்யாவின் ரமென்ஸ்கோய், கொலோம்னா மற்றும் டொமோடெடோவோ மாவட்டங்களில் பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள ரமென்ஸ்கோய் மாவட்டத்தில், ட்ரோன் பாகங்கள் விழுந்ததால் ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு வீடுகள் தீப்பிடித்தன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு 34 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

 

கடந்த செப்டம்பரில், ரமென்ஸ்கோய் மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம், மத்திய மாஸ்கோவில் கிரெம்ளின் அருகே இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.

 

யுக்ரேனில், ஒடேசா பிராந்தியத்தில் ட்ரோன் தாக்கியதில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்தனர். சில கட்டிடங்களில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதையும், அதனால் ஏற்பட்ட சேதங்களையும் புகைப்படங்கள் காட்டின.

 

இரானில் தயாரிக்கப்பட்ட 62 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் 10 ட்ரோன்கள், யுக்ரேன் வான்வெளியில் இருந்து ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளான பெலாரஸ் மற்றும் மால்டோவாவை நோக்கிச் சென்றன என்றும் யுக்ரேன் விமானப்படை கூறியுள்ளது.

 

‘இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார்’ என்ற அமைப்பின் தரவுகளை பகுப்பாய்வு செய்த ஏ.எஃப்.பி செய்தி முகமை, ‘மார்ச் 2022-க்குப் பிறகு, ரஷ்யப் படைகள் அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றியதாக கடந்த அக்டோபரில் தகவல்கள் வெளியான நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன’ என்று கூறியுள்ளது.

 

ஆனால் பிபிசியிடம் பேசிய, பிரிட்டிஷ் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி சர் டோனி ராடகின், ‘போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா அதன் மிக மோசமான உயிரிழப்புகளை சந்தித்தது கடந்த அக்டோபர் மாதத்தில் தான்’ என்றார்.

 

ரஷ்யப் படையில், அக்டோபர் மாதத்தில் ‘ஒவ்வொரு நாளும்’ சராசரியாக சுமார் 1,500 பேர் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

 

ரஷ்யா - யுக்ரேன் போரை டிரம்ப் எவ்வாறு அணுகுவார்?

 

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், ரஷ்யா - யுக்ரேன் போரை எவ்வாறு அணுகுவார் என்பது குறித்து தீவிரமான ஊகங்கள் எழுந்துள்ளன.

 

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தில் ‘ஒரே நாளில் தன்னால் ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் அவர் அதை எவ்வாறு செய்வார் என்பது குறித்த விவரங்களை வழங்கவில்லை.

 

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பிரையன் லான்சா பிபிசியிடம் கூறுகையில், “வரவிருக்கும் புதிய அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் பகுதிகளை திரும்பப் பெறுவதற்கு உதவுவதை விட, இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவதில் தான் கவனம் செலுத்தும்” என்றார்.

 

இதற்கு பதிலளித்த டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “பிரையன் லான்சா ‘டிரம்பின் பிரதிநிதி அல்ல’” என்று கூறி, இப்போதைக்கு இந்த விவகாரத்தில் டிரம்ப் ஏதும் கூறப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

 

ரஷ்ய அதிபர் அலுவலகத்தின் (கிரெம்ளின்) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஞாயிறன்று அரசு ஊடகங்களில் பேசிய போது, ‘புதிய அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து ரஷ்யாவிற்கு ‘சாதகமான’ சமிக்ஞைகள் வருவது’ குறித்து தெரிவித்தார்.

 

“டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமைதியை நிலைநாட்ட விரும்புவதைப் பற்றி தான் பேசினார், ரஷ்யா மீது தோல்வியைத் திணிக்க அவருக்கு விருப்பம் இல்லை” என்று டிமிட்ரி கூறினார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேசியுள்ளார். இந்த உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் உதவி இல்லையென்றால், யுக்ரேன் இந்தப் போரில் தோல்வியடையக் கூடும் என்று ஜெலன்ஸ்கி முன்பு கூறியிருந்தார். ரஷ்யாவுக்கு தங்களின் பிராந்தியத்தை விட்டுக்கொடுப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!