அந்த யுவதி தன் சகோதரியின் கதையை விவரிக்க தொடங்கியபோது குழப்பமாக காணப்பட்டார். அந்த யுவதியின் சகோதரி பொறியியலில் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால், திருமணத்திற்காக தனது கனவுகள் அனைத்தையும் கைவிட்டு இருக்கிறார். அது குறித்துதான் அந்த யுவதி விவரித்து கொண்டிருந்தார்.
"என் சகோதரிக்கு இப்போது இரண்டு குழந்தைகள். அவளுக்கு தன் திருமணம் குறித்து எந்த வருத்தங்களும் இல்லை. மகிழ்வாகதான் இருக்கிறாள். ஆனால், அவளுக்கு தன் வாழ்க்கை குறித்து பல கனவுகள் இருந்தன. அதை எட்டுவதற்கு அவளுக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது." - இது தன் சகோதரி குறித்து அந்த யுவதியின் வார்த்தைகள்.
கனவுகளை கைவிடுதல்
விசாகப்பட்டிணத்தில் ஒரு கடலோர நகரத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் #BBCShe - க்காக மாணவிகளுடன் உரையாடிய போது இதே கருத்தைதான் பலர் எதிரொலித்தார்கள்.அவர்களுக்கு தங்கள் திருமணம் குறித்த அச்சம் இருந்தது. அவர்கள் தங்கள் கனவுகளை, பணி சார்ந்த தங்கள் எதிர்கால திட்டத்தை கைவிட்டுவிட்டு, திருமணத்திற்காக தள்ளபடுகிறோம் என்ற தங்கள் அச்சத்தை பதிவு செய்தனர்.
தாங்கள் உரையாடிய அறையில் இருந்த மாணவிகள் அனைவரும் மரபியல், மருந்தியல், சட்டம், நிர்வாகவியல் படிப்பவர்கள். அதில் பலர் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்; சிலர் ஆய்வாளர்கள்.
#BBCShe-க்காக கடந்த வாரம் பீகார் சென்றிந்தோம். அங்கு பெண்கள் மேல்நிலைபள்ளி செல்லவே சிரமப்பட்டு கொண்டிருப்பதை பதிவு செய்திருந்தோம். அதனுடன் ஒப்பிடுகையில், ஆந்திர பெண்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கிறது.
தேசிய உயர்நிலை கல்வி ஆய்வறிக்கை (2015 - 16), பெரும் மாநிலங்களில் உயர்நிலை கல்வியில் பெண்கள் சேரும் விகிதத்தில் ஆந்திரம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது.தேசிய சராசரி 23.5 சதவீதமாக உள்ளது.
தமிழக சராசரி 42.4 சதவீதமாக உச்சத்தில் இருக்கும் போது, பீகாரில் உயர்நிலை கல்வியில் பெண்கள் சேரும் விகிதம் 12.6 சதவீதமாக உள்ளது.
ஆந்திராவில் இது 26.9 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரியை விட இது அதிகம்.
கல்வியை அணுகவதில் சிரமங்கள் இல்லாத போது, பணியில் பெண்கள் சேர்வதும் அதிகமாகதானே இருக்க வேண்டும். இது தானே இயல்பு. ஆனால், ஆந்திராவில் அவ்வாறாக இல்லை என்பது அந்திர பல்கலைக்கழகத்தில் பெண்களுடன் உரையாடும் போது புரிந்தது.
வரதட்சணை பேரம் பேச
எங்களை கல்வி கற்க அனுப்புவதே திருமணத்திற்காகதான் என்கிறார் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர். அவர் சொல்கிறார், "நாங்கள் பல்கலைக்கழகம் சென்று படித்து பட்டம் பெறுவது எங்களது எதிர்கால தொழில் வாழ்க்கைக்காகவெல்லாம் இல்லை. நாங்கள் பட்டம் பெறுவது திருமணத்திற்காக. ஆம், மாப்பிள்ளை வீட்டிற்கு எங்களது பயோடேட்டாவை அனுப்பும் போது, அதில் எங்கள் கல்வி இடம்பெற்றிருக்க வேண்டும்தானே. அப்போதுதானே, அந்த பயோடேட்டா சிறப்பாக இருக்கும்." என்கிறார் கவலை தொய்ந்த குரலில்.
அனைவரும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். அந்த பெண் சொல்வது உண்மை என்பது அரங்கத்தினர் எழுப்பிய கரவொலியிலேயே தெரிந்தது; புரிந்தது.
வேலைக்கு செல்லும் பெண்கள், பணிக்கு செல்ல விரும்பும் மற்றும் இயலும் பெண்களின் சராசரி சர்வதேச அளவில் 39 சதவீதமாக இருக்கும் போது, இந்தியாவில் இது 24 சதவீதமாக இருக்கிறது.ஆனால், இது 1990ஆம் ஆண்டு 28 சதவீதமாக இருந்திருக்கிறது.
இந்த விஷயத்தில், உலக வங்கியின் தரவுகளின்படி, 185 நாடுகளில் இந்தியா 172 வது இடத்தில் உள்ளது. இது 2016 ஆம் ஆண்டு கணக்கு.
ஆந்திர பல்கலைக்கழகத்தில் நாங்கள் உரையாடிய பெண்கள் பலதரப்பை சேர்ந்தவர்கள், கிராம்ப்புற பெண்கள், நகர்புற பெண்கள் என அனைத்து தரப்பினரும் அங்கு இருந்தனர்.
நகர்புறத்திலிருந்து வந்த பெண்கள் வரதட்சணையை குறைக்க பெண்களின் கல்விதகுதி ஒரு வழியாக இருக்கிறது என்கிறார்கள்.
இரு பெண் விளக்குகிறார், "நல்ல கல்வித்தகுதி, நல்ல ஊதியத்தில் ஒரு பணியை பெற பயன்படும். இது பொதுவான கருத்து. ஆனால், இங்கு நீங்கள் நல்ல கல்வி தகுதி உடையவராக இருப்பது வரதட்சணையை பேரம் பேச மட்டும்தான் பயன்படும்." என்கிறார்.