Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ.

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:06 IST)
புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.


தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. அதிபராக இருந்த போது நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையுடன் இந்தச் சோதனை தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், "இது நாட்டின் இருண்ட காலம்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு, இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை," என்று தெரிவித்துள்ளார். எனினும் இந்தச் சோனை குறித்து எஃப்.பி.ஐ. அமைப்போ, அமெரிக்காவின் நீதித்துறையோ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அமெரிக்காவின் மைய அரசின் சட்டங்களும் ரகசிய ஆவணங்களை கையாள்வது குறித்து விவரிக்கின்றன.

இந்தச் சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ட்ரம்பின் வழக்கறிஞர் கிறிஸ்டினா என்பிசி நியூஸிடம் கூறியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், ட்ரம்ப் வீட்டில் நடைபெற்றிருக்கும் சோதனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அனைத்து அரசு அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகவும், அதனால் "அறிவிக்கப்படாத இந்தச் சோதனை அவசியமில்லை, ஏற்புடையதில்லை" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"இத்தகைய தாக்குதல்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே நடக்கும் சாத்தியம் உண்டு. கெடுவாய்ப்பாக, இதுவரை காணாத ஊழலில் திழைக்கும் அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். புளோரிடாவில் சோதனை நடந்தபோது நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்ப் இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.

ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய ட்ரம்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப், "இந்தச் சோதனை தேசிய ஆவணக் காப்பகப் பதிவுகளைக் கையாள்வது குறித்த விசாரணையுடன் தொடர்புடையது" என்று கூறினார்.

பின்னணி என்ன?

அதிபராக இருந்தபோது அரசு ஆவணங்களைக் கையாண்டது தொடர்பாக ட்ரம்பை விசாரிக்க வேண்டும் என்று தேசிய ஆவணக் காப்பகம் நீதித்துறையைக் கேட்டுக் கொண்டுது.

அதிபராக இருந்த காலத்தில் பல ஆவணங்களை ட்ரம்ப் கிழித்து எறிந்ததாகவும் அவற்றை ஒட்டவைக்க வேண்டியிருந்தது எனவும் தேசிய ஆவணக் காப்பக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை 'போலிச் செய்திகள்' என்று கூறி நிராகரித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாகவே இப்போது ட்ரம்பின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

எஃப்.பி.ஐ.யின் தேடுதல் வாரண்டில் நீதிபதி ஒருவர் கையெழுத்திட வேண்டும். தேடுதல் வேட்டைக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்த பிறகே நீதிபதி அதில் கையெழுத்திடுவார்.

அந்த வகையில் நீதிபதி கையெழுத்திட்ட வாரண்ட் குறித்த தகவல் திங்கள்கிழமை காலை பத்து மணிக்கு எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக பெயர்கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ட்ரம்பின் இல்லத்தில் இருந்து பல பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவம் எந்தக் கதவும் உடைக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனிடையே வெள்ளை மாளிகையின் கழிவறைப் பேழையில் சில காகிதங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை பத்திரிகையாளர் மேகி ஹேபர்மன் வெளியிட்டுள்ளார். இது ட்ரம்பின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வெள்ளை மாளிக்கைக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையின்போது, நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்று பைடன் கூறியிருந்தார். வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் பைடனின் மகன் ஹன்டர் பைடனும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments