Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக ஆளுநரிடம் திமுக மனு: முதலமைச்சர் உள்பட 8 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் - முழு விவரம்

தமிழக ஆளுநரிடம் திமுக மனு: முதலமைச்சர் உள்பட 8 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் - முழு விவரம்
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (13:19 IST)
தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட எட்டு அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உட்பட பல்வேறு ஊழல் புகார்களைச் சுமத்தியுள்ள தி.மு.க, இது தொடர்பான ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து அளித்திருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்தனர். அப்போது, தமிழக அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்களையும் அதற்கு ஆதாரங்களாக கருதப்படும் ஆவணங்களையும் அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.

பின்வரும் குற்றச்சாட்டுகளை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது அளித்திருப்பதாக தி.மு.க தெரிவித்திருக்கிறது:

1. முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; வருமானத்திற்கு அதிகமாக 200.21 கோடி ரூபாய் அளவுக்கு தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார்.

2. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது "காக்னிஸன்ட்" கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் ஆகிய புகார்கள்.

3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்குகளை கொள்முதல் செய்து 875 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகப் புகார்.

4. மின்வாரியத் துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் புகார்.

5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் விலை கொடுத்து வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.

7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது 1,950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.

8. மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் புகார்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், முதல் கட்டமாக இந்தப் புகார்களை அளித்திருப்பதாகவும் விரைவில் இரண்டாம் கட்ட புகார்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

"எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு 4 ஆண்டுகளில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தோம். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத் துறை ஊழல், மத்திய அரசு அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துகள் குவித்த ஊழல் ஆகியவற்றை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்திருக்கிறோம். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.

எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை. ஆகவே ஆதாரங்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

முதல்வர் வருமானத்திற்கு மீறி சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம. 2018ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வர் மீது சொல்லப்படும் புகார்கள் குறித்த விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட முடியும். ஆகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை நடப்பதை ஆளுநர் உறுதிசெய்ய வேண்டும்.

இன்னும் பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவற்றை கழக வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்துள்ளோம். விரைவில் இந்தப் புகார்களின் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் அளிப்போம்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேட்ச் இல்ல.. க்ளப்பில் குத்தாட்டம்; சுரேஷ் ரெய்னா கைது!