Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக வேட்பாளர் பட்டியல் சுவாரசியங்கள்: படித்தவர்கள், வாரிசுகள் அதிகம், பெண்கள் குறைவு

திமுக வேட்பாளர் பட்டியல் சுவாரசியங்கள்: படித்தவர்கள், வாரிசுகள் அதிகம், பெண்கள் குறைவு
, சனி, 13 மார்ச் 2021 (11:18 IST)
திமுக வேட்பாளர் பட்டியல்: மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு
 
தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் ஒன்பது பேர் மருத்துவர்கள்.
 
மற்ற வேட்பாளர்களின் பின்னணித் தகவல்கள் உள்ளிட்ட சுவாரஸ்யமான பிற தகவல்கள் இதோ:
 
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமையன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 61 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றுவிட 173 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுகிறது.
 
தி.மு.க. கடைசியாகப் பதவிவகித்த 2006ஆம் ஆண்டில் அமைச்சர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களில் மு. கருணாநிதி, க. அன்பழகன், கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், என். செல்வராஜ், கே.பி.பி. சாமி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
 
முன்னாள் அமைச்சர்கள்
அந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துரைமுருகன், கே. பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, என். சுரேஷ் ராஜன், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே. ராமச்சந்திரன், வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
 
தி.மு.கவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் 97 பேரில் 82 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்னையைப் பொறுத்தவரை, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம், வில்லிவாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், எழும்பூர் தொகுதியின் உறுப்பினர் ரவிச்சந்திரன், வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
ஆயிரம் விளக்கு தொகுதியை தன்னிடமிருந்து பறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்போவதாகக் குற்றம்சாட்டிய தற்போதைய உறுப்பினர் கு.க. செல்வம் கட்சியை எதிர்த்து குரல் எழுப்பி வெளியேறிவிட்டார். தற்போது அந்தத் தொகுதி மருத்துவர் நா. எழிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதியைப் பொறுத்தவரை அந்தத் தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
 
இதேபோல, மதுராந்தகம், செய்யூர், கீழ்வேளூர், திருப்போரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதால் தற்போதைய தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மதுராந்தகம் ம.தி.மு.க.வுக்கும் செய்யூர், திருப்போரூர் தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், கீழ்வேளூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுவிட்டன. மதுராந்தகம் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் போனதால் வாய்ப்பிழந்தவர்கள் ஒருபக்கமிருக்க, குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமர், கூடலூர் தொகுதியின் உறுப்பினர் திராவிடமணி, ஓசூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, புதுக்கோட்டையின் உறுப்பினர் பெரியண்ணன் அரசு, பாளையங்கோட்டை தொகுதியின் உறுப்பினர் மைதீன்கான் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
 
குறைவான எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் இந்த முறை வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம். இருந்தபோதும் தி.மு.கவின் சார்பில் ஒட்டுமொத்தமாக 12 பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். தி.மு.கவோடு ஒப்பிட்டால் அ.தி.மு.கவில் சற்று அதிகமான எண்ணிக்கையில், அதாவது 15 பெண் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
 
நான்கு இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐந்து இடங்களையும் சேர்த்தால், கணிசமான இஸ்லாமிய வேட்பாளர்கள் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது தவிர, காங்கிரஸ், வி.சி.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும்போது இஸ்லாமியர்களுக்கு இன்னும் சில இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மருத்துவர்கள்
2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மருத்துவர்களான டாக்டர் கலாநிதி வீராசாமி, டாக்டர் செந்தில் ஆகியோருக்கு தி.மு.க. வாய்ப்பு வழங்கி, அவர்கள் வெற்றிபெற்றது பெரும் கவனத்தைக் கவர்ந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறது தி.மு.க.
 
ஆலங்குளம் தொகுதியில் டாக்டர் பூங்கோதை, புதுக்கோட்டை தொகுதியில் டாக்டர் முத்துராஜா, பொள்ளாச்சியில் டாக்டர் கே. வரதராஜன், ராசிபுரம் தனித் தொகுதியில் டாக்டர் மா. மதிவேந்தன், வீரபாண்டி தொகுதியில் டாக்டர் ஆ.கா. தருண், விழுப்புரம் தொகுதியில் டாக்டர் ஆர். லட்சுமணன், மயிலம் தொகுதியில் டாக்டர் மாசிலாமணி, பாப்பிரெட்டிப்பட்டியில் டாக்டர் எம். பிரபு ராஜசேகர், ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் நா. எழிலன் என மொத்தம் ஒன்பது மருத்துவர்கள் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
 
6 முனைவர்கள்
 
பல்கலைக்கழகங்களில் ஆய்வை முடித்து முனைவர் பட்டம் பெற்ற ஆறு பேர் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுகின்றனர். மதுரை மத்தியத் தொகுதியில் பழனிவேல் தியாகராஜன், திருவிடைமருதூர் தனித் தொகுதியில் போட்டியிடும் கோவி. செழியன், மன்னார்குடியில் போட்டியிடும் டி.ஆர்.பி. ராஜா, திருச்சி கிழக்கில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ், கெங்கவல்லி தனித்தொகுதியில் போட்டியிடும் ரேகா பிரியதர்ஷிணி, திருக்கோவிலூரில் போட்டியிடும் க. பொன்முடி ஆகியோர் பி.எச்டி முடித்து முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
 
சுமார் 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர்கள். மொத்தமுள்ள 173 வேட்பாளர்களில் சுமார் 110 பேர் ஏதோ ஒரு பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றிருக்கின்றனர்.
 
யாரோடு யார் மோதல்
 
தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளில் 129 தொகுதிகளில் அ.தி.மு.கவும் தி.மு.கவும் மோதுகின்றன. 14 தொகுதிகளில் தி.மு.கவும் பா.ஜ.கவும் மோதுகின்றன. 18 தொகுதிகளில் தி.மு.கவும் பா.ம.கவும் மோதுகின்றன. தி.மு.கவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் 4 தொகுதிகளில் மோதுகின்றன.
 
தற்போதைய அமைச்சர்களின் தொகுதிகளைப் பொறுத்தவரை, அவர்களை எதிர்த்து சில இடங்களில் வலுவானவர்களும் சில இடங்களில் எதிர்பாராத வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்களில் ஒருவரான பிரபு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகமான 37 வயதே ஆன சம்பத் முதலமைச்சரை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ளார்.
 
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதியில் அ.ம.மு.கவிலிருந்து தி.மு.கவிற்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் வலுவான தலைவர்கள் இல்லாமல் இருந்த நிலையில், தங்க தமிழ்செல்வனின் வருகை கட்சிக்கு அந்தப் பகுதியில் தெம்பூட்டியிருக்கிறது. ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தின் பணபலத்தை தங்க தமிழ்ச்செல்வனால் எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் இந்தத் தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அ.தி.மு.க.வில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து, பிறகு டிடிவி தினகரனுடன் சென்று, பிறகு தி.மு.கவில் இணைந்த செந்தில்பாலாஜி தற்போது அரவக் குறிச்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரை தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக கரூரில் களமிறக்கியுள்ளது தி.மு.க.
 
விழுப்புரம் தொகுதியில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு எதிராக அ.தி.மு.க.விலிருந்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர். லட்சுமணன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
 
தி.மு.க. தனது பிரச்சாரங்களில் தவறாமல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. அவர் அ.தி.மு.கவின் சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து தி.மு.கவின் சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார்.
 
சுவாரஸ்யமான வேறு சில மோதல்கள்
சென்னை நகர மேயராக இருந்த இரண்டு பேர் சைதாப்பேட்டை தொகுதியில் மோதுகின்றனர். தி.மு.கவின் சார்பில் மா. சுப்பிரமணியனும் அ.தி.மு.கவின் சார்பில் சைதை துரைசாமியும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
 
தற்போது சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் இமையத்தின் சகோதரர் சி.வி. கணேசனுக்கு திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
நாமக்கல் தொகுதியைப் பொறுத்தவரை நீண்ட காலமாக அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுவந்தது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொகுதியில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுகிறது.
 
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து அ.தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆதி ராஜாராம் களமிறக்கப்பட்டிருக்கிறார். மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலி திருவல்லிக்கணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
வாரிசுகளுக்கு வாய்ப்பு
 
தி.மு.கவின் சார்பில் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி, திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் மகன் பெ. செந்தில்குமார், டி.ஆர். பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் பொதுச் செயலாளர் க. அன்பழகனின் பேரன் அ. வெற்றியழகன், அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழி, பூங்கோதை ஆலடி அருணா, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பூண்டி கலைவாணன், சபா ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த முறை போட்டியிடுகிறார்.
 
இவர்களில் உதயநிதி, செந்தில்குமார், அ. வெற்றியழகனைத் தவிர்த்த மற்றவர்கள் ஏற்கனவே தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டவர்கள், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்.
 
ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லோகிராஜன் என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது சகோதரர் மகாராஜன் என்பவர் போட்டியிடுகிறார். சகோதரர்கள் இருவர் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதற்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக தாமரைக்கனியும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் அவரது மகன் இன்பத் தமிழனும் போட்டியிட்டனர்.
 
இந்தத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக முறை போட்டியிட்ட வேட்பாளர் அக்கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகன்தான். ஏற்கனவே 9 முறை காட்பாடி தொகுதியிலும் இரண்டு முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்ட அவர், இந்த முறை பத்தாவது தடவையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
சலசலப்பை ஏற்படுத்திய விருகம்பாக்கம் தொகுதி
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா என்பவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன். விருகம்பாக்கம் என்ற தொகுதி 2011ல் உருவாக்கப்பட்ட பிறகு நடந்த இரண்டு தேர்தல்களிலும் தி.மு.கவின் சார்பில் முன்னாள் பகுதிச் செயலாளர் தனசேகரன் போட்டியிட்டார். இரண்டு தடவையும் அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில், பிரபாகர்ராஜாவுக்கு கட்சித் தலைமை வாய்ப்பளித்தது.
 
இதையடுத்து பிற்பகலின் அறிவாலயம் வந்த தனசேகரன், பிரபாகர்ராஜாவை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து தான் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்திருப்பதாகத் தெரிவித்தார். பிரபாகர்ராஜாவின் குடும்பத்தினர் அ.தி.மு.கவிலும் பா.ஜ.கவிலும் பணியாற்றிவரும் நிலையில் அவரை எப்படி தி.மு.கவின் வேட்பாளராக அறிவிக்கலாம் என தனசேகரன் கேள்வியெழுப்பினார். விரைவில் மு.க. ஸ்டாலின் வேட்பாளரை மாற்றி அறிவிப்பார் என தான் நம்புவதாகவும் தனசேகரன் கூறினார்.
 
2020ஆம் ஆண்டில் தனசேகரனின் வீட்டில் அமைந்திருந்த அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு சச்சரவு அரிவாள் வெட்டுவரை சென்றது. இது அந்தத் தருணத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர் தோல்வி, இதுபோன்ற சர்ச்சைகள் காரணமாக தனசேகரனுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லையென சொல்லப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங். கட்சியில் உட்பூசல்? வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்!