Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன?

ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன?
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:38 IST)
புதன்கிழமை ஏற்பட்ட வெடிப்பால் சேதமடைந்த ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டது என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
மோஸ்க்வா என்றப் பெயருள்ள இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் உள்ள ரஷ்யக் கடற்படைக் கப்பல் தொகுப்பின் கொடிதாங்கிக் கப்பல். சேதமடைந்த நிலையில் இந்தக் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்து வந்தபோது கடல் கொந்தளிப்பாக இருந்த காரணத்தால் அது மூழ்கிவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ரஷ்யாவின் ராணுவ பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கப்பல் யுக்ரேன் மீதான கடற்படைத் தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தது. 510 பணியாளர்களோடு இயங்கிவந்த கப்பல் இது.
 
யுக்ரேன் தாக்குதலா?
 
தங்களுடைய ஏவுகணையே இந்தக் கப்பலைத் தாக்கியதாக யுக்ரேன் கூறுகிறது. ஆனால், தாக்குதல் ஏதும் நடக்கவில்லை என்றும், தீப்பற்றி எரிந்தே கப்பல் மூழ்கியதாகவும் கூறுகிறது ரஷ்யா.
 
இந்த தீ பரவியதால்தான் கப்பலில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததாகவும், உடனடியாக அருகில் இருந்த ரஷ்ய கப்பல்கள் உதவியோடு சேதமடைந்த கப்பலின் பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ரஷ்யா குறிப்பிடுகிறது. மேற்கொண்டு வேறு தகவல்கள் எதையும் ரஷ்யா கூறவில்லை.
 
"வெடிபொருள்கள் வெடித்ததால் கப்பலின் வெளிக்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தாலும், கடல் கொந்தளிப்பாலும், துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்படும்போது சமநிலை தவறி கப்பல் மூழ்கியது," என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனமான டாஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஆனால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெப்டியூன் ஏவுகணைகளைக் கொண்டு தாங்கள்தான் மோஸ்க்வா கப்பலைத் தாக்கியதாக யுக்ரேன் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

2014ல் கிரைமியாவை ரஷ்யா பலவந்தமாக இணைந்துக்கொண்ட பிறகு கருங்கடல் பகுதியில் யுக்ரேனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில் இந்த ஏவுகணையை உருவாக்கியது யுக்ரேன். தாக்குதல் நடந்தபோது இந்த கப்பலில் 510 பேர் இருந்திருக்கலாம் என்று மூத்த யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்தக் கப்பலின் பலம் என்ன?
 
பிப்ரவரி 24ம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியபோது கருங்கடலில் உள்ள பாம்புத் தீவில் இருந்த சிறிய யுக்ரேனிய எல்லைப் பாதுகாப்பு வீரர்களை சரணடையுமாறு உத்தரவிட்டது இந்தக் கப்பல்தான். அதற்கு மறுத்து அவர்கள் அனுப்பிய செய்தி பிரபலமாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
 
சோவியத் யூனியன் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1980களில் கடற்படைப் பணியில் சேர்ந்தது. யுக்ரேனின் தெற்கத்திய நகரமான மைகோலைவ் நகருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாள்களில் இந்த நகரம் மிக மோசமான ரஷ்ய குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.
 
வழிநடத்தவல்ல ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்த இந்தக்கப்பல் சிரியாவில் நடந்த மோதலில் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் இருந்த ரஷ்யப் படையினருக்கு கடல் சார்ந்த பாதுகாப்பை இந்தக் கப்பல் வழங்கிவந்ததது.
 
கப்பல்களைத் தாக்குதல் வல்கன் ஏவுகணைகள் பதினாறும், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் ஆயுதங்களும், நீருக்கடியில் வெடிக்கும் ஆயுதங்களும் இந்தக் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்தக் கப்பலின் எடை 12,490 டன். யுக்ரேன் தாக்குதலில்தான் இது மூழ்கியது என்பது உண்மையாக இருக்குமானால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரியின் நடவடிக்கையால் மூழ்கடிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலாக இது இருக்கும்.
 
யுக்ரேன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா பெரிய கப்பல் ஒன்றை இழப்பது இது இரண்டாவது முறை. அசோவ் கடலில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட யுக்ரேனின் பெர்ட்யான்ஸ்க் துறைமுகத்தில் மார்ச் மாதம் யுக்ரேன் நடத்திய தாக்குதலில் ரஷ்யக் கப்பலான சாரடோவ் அழிக்கப்பட்டது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த கல்வியாண்டு முதல் CBSE-க்கு ஒரே கட்டமாகத் தேர்வு!