Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

Prasanth Karthick
வியாழன், 31 அக்டோபர் 2024 (18:05 IST)

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் இன்று (அக்டோபர் 31) தீபாவளிக்காகத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

 

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் முகுந்தின் மனைவி, இந்து ரெபக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது இரண்டாவது தீபாவளி ரிலீஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இந்த வருட தீபாவளிக்கு ‘அமரனாக’ துப்பாக்கியைப் பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?

 

ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் கூறுவது என்ன?

 

‘அமரன்’ திரைப்படத்தின் கதை என்ன?
 

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்டார். இந்த மோதலில் அவருடன் மேலும் ஒரு ராணுவ வீரரும் மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

 

அவரது ‘பயோபிக்’ (வாழ்க்கை வரலாற்றுப் படம்) தான் அமரன் என்பது அனைவரும் அறிந்ததே.

 

“முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து, காஷ்மீரில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார்,” என ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம் கூறுகிறது.

 

“முன்னதாக தனது நீண்டநாள் காதலியான இந்துவை (சாய் பல்லவி) திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை,” என்கிறது இந்த விமர்சனம்.

 

‘அமரன்’ திரைப்படம் ஷிவ் ஆரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய ‘India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத் தொடரின் தழுவல் என ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

 

அமரன் திரைப்படத்தின் கதை நமது ராணுவ வீரர்களின் குடும்பங்கள் சந்திக்கும் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும், மோசமான செய்தி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயம் மனதில் இருந்தாலும், முகத்தில் புன்னகையுடன் தங்கள் வாழ்க்கையை அக்குடும்பத்தினர் நடத்துகிறார்கள் என்பதை உணர்த்துகிறது என்றும் ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

 

‘வழக்கமான போர் திரைப்படங்கள் போல அல்லாமல்…’
 

“வழக்கமான போர் சார்ந்த திரைப்படங்கள் போலல்லாமல், ‘அமரன்’ மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசத்தைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் உண்மையான, கடுமையான அனுபவங்களை சித்தரிக்கிறது,” என 'டைம்ஸ் நவ் நியூஸ்' விமர்சனம் கூறுகிறது.

 

மேஜர் முகுந்தின் ராணுவ வாழ்க்கையின் பரபரப்பைக் காட்டிய அதே வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் அம்சங்களையும் இக்கதை ஆராய்கிறது, நாட்டிற்கான கடமையையும் தனது குடும்ப வாழ்க்கையையும் சமமாகக் கொண்டு செல்ல அவர் முயற்சி செய்ததையும் இப்படம் பேசுகிறது, என 'டைம்ஸ் நவ் நியூஸ்' விமர்சனம் கூறுகிறது.

 

“முகுந்தின் வாழ்க்கையின் பல கட்டங்களை இப்படம் விவரிக்கிறது. அவர் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவராக இருந்ததிலிருந்து தொடங்கி, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற அவரது லட்சியம், அவரது காதல், சென்னை ‘அதிகாரிகள் பயிற்சி அகாடமியில்' பயிற்சி பெற்றது முதல் இந்திய ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு சென்றது வரை,” என 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.

 

படம் விறுவிறுப்பாக நகர்கிறதா?
 

‘அமரன்’ படத்தின் முடிவு பலருக்கும் தெரிந்திருந்தாலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் விறுவிறுப்பான திரைக்கதை அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது என ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

 

“படத்தின் முதல் பாதி முழுவதுமே முகுந்த்-இந்து இடையேயான காதல் காட்சிகளைக் கொண்டே நகர்கிறது. அவை எந்த இடத்திலும் ‘ஓவர் டோஸ்’ ஆகிவிடாதபடி சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கின்றன.” என ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம் கூறுகிறது.

 

ஆனால் அதே சமயம், “படத்தின் பிரச்னையே ராணுவம் தொடர்பான காட்சிகளில் தான் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் அவற்றில் எந்தவித டீட்டெய்லிங்-கும், நுணுக்கமும் இல்லை. காதல் காட்சிகளுக்காக மெனக்கெட்ட படக்குழு படத்தின் மையக்கருவான ராணுவம் தொடர்பான காட்சிகளில் கோட்டை விட்டு விட்டதோ என்று தோன்றுகிறது,” என்கிறது இந்த விமர்சனம்.

 

“தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளில் அவசியமே இல்லாமல் இருந்த விரிவான விளக்கங்கள், ராணுவம் தொடர்பான காட்சிகளில் இல்லாமல் போனது பெரும் குறை,” என திரைப்படத்தின் குறைகளைப் பட்டியலிடுகிறது ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம்.

 

படத்தின் ஒவ்வொரு அதிரடி சண்டைக் காட்சியும் விறுவிறுப்பாக உள்ளது, மற்றும் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கின்றன என ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

 

அதேபோல், ராணுவ அதிகாரிகளுக்கிடையேயான உரையாடல் காட்சிகள் முகுந்தை (சிவகார்த்திகேயன்) மட்டுமல்ல, அவரது சகாக்களையும் கவனிக்க வைக்கின்றன என்றும், புவன் அரோரா, ராகுல் போஸ் உட்பட ராணுவ அதிகாரிகளாக வரும் அனைத்து நடிகர்களும் கதையை நகர்த்துவதில் தங்கள் பங்கை அற்புதமாக செய்துள்ளார்கள் என்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

 

மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பொருந்தினாரா?
 

அமரனில், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் இதுவரை பார்த்திராத ஒரு பக்கத்தைக் காட்டுகிறார் என்றும், அவரது நடிப்பு மற்றும் உடல் மொழி அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது என்றும் ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

 

இந்து ரெபக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, படத்திலும் அவர் பேசும் மலையாள மொழியும், அவரது உச்சரிப்பும் நெருடலாக உள்ளதாகவும், முக்கியமான காட்சிகளில் உணர்ச்சிகரமாக அவர் நடிக்கும்போது, அவரது வசன உச்சரிப்புகள் தடையாக உள்ளதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் கூறுகிறது.

 

திரையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையேயான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக உள்ளதாகவும், அது ரசிகர்கள் இக்கதையுடன் ஒன்றுவதற்கு உதவுகிறது என்றும் ‘டைம்ஸ் நவ் நியூஸ்’ விமர்சனம் கூறுகிறது.

 

“ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது. சி.எச்.சாயின் ஒளிப்பதிவு காஷ்மீரின் ரம்மியத்தையும், ஆக்‌ஷன் காட்சிகளின் தீவிரத்தையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது,” என ‘இந்தியா டுடே’ விமர்சனம் கூறுகிறது.

 

“சொல்லப்படவேண்டிய ஒரு கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை முடிந்தளவு சமரசங்கள் செய்யாமல் திரையில் கொண்டு வந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். எனினும், முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த நேர்த்தியும் மெனக்கெடலும் இரண்டாம் பாதி ராணுவம் தொடர்பான காட்சிகளிலும் இருந்திருந்தால் இந்த ‘அமரன்’ இன்னும் கொண்டாடப்பட்டிருப்பார்,” என்றும் ‘தி இந்து தமிழ் திசை’யின் விமர்சனம் கூறுகிறது.

 

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கம், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறந்த நடிப்பு, அமரன் திரைப்படத்தை ‘தேசப்பற்று, காதல் மற்றும் தியாகம் பற்றிய கதைகளில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக ஆக்குகிறது’ என ‘டைம்ஸ் நவ் நியூஸ்’ விமர்சனம் கூறுகிறது.

 

ரசிகர்கள் சொல்வது என்ன?
 

திரையரங்குகளில் அமரன் படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

“படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் அருமையாக நடித்துள்ளனர். சண்டைக் காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் எதார்த்தமாக இருந்தன. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அமரன் படம் தான் சிறந்த படம்,” என சென்னையில் அமரன் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் கூறினார்.

 

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ரசிகை ஒருவர், “படம் விறுவிறுப்பாக இருந்தது, மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா இதுமாதிரியான சூழலை எப்படிச் சமாளித்தார் என்று யோசிக்க வைத்தது. திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது,” என்று தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 

கிளைமாக்ஸ் காட்சி தரமாக இருக்கிறது என்ற கூறிய மற்றொரு ரசிகை, “அமரனுக்கு முன்பு வரை காமெடியாக நடித்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். துப்பாக்கி தூக்கிய காட்சிகள் எல்லாம் வேற லெவல்,” என்றார்

 

‘மேஜர் முகுந்துக்கு அஞ்சலி’
 

இறுதிக் காட்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு அருமை என்று கூறிய மற்றொரு ரசிகர், “துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' படத்தில் இசையமைத்த அளவிற்கு அமரன் படத்தில் ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கவில்லை,” என்றார்.

 

தனது மகனுடன் திரைப்படம் பார்க்க வந்த தந்தை ஒருவர், “கதை நகர்வதே தெரியவில்லை, அந்த அளவு சுவாரஸ்யமாக இருந்தது. ராணுவ வீரர்களின் குடும்பங்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் படம் தெளிவாக காட்டுகிறது. சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

 

நண்பர்களோடு சேர்ந்து படம் பார்க்க வந்த இளைஞர்கள், “அமரன் திரைப்படம் மேஜர் முகுந்தின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மிகச்சிறப்பாக இருந்தது,” என்றனர்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்: ஆர்.எஸ்.பாரதி

மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கையா? சரத்குமார்

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments