Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டன்" – ஐபிஎல் அனுபவங்களை பகிரும் கிரிக்கெட் வீரர் ஜெகதீசன்

Advertiesment
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (15:08 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், முதல்முறையாக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன் ஐபிஎல் மற்றும் கேப்டன் தோனியுடனான தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஜெகதீசன், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் அறிமுகமானவர்.

'நான் கோவையில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தேன். சிறுவயது முதலே எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். அதற்கு காரணம் எனது தந்தை தான். அவரும் ஒரு கிரிக்கெட் வீரர். மும்பையில் டாடா எலெக்ட்ரிக்கல்ஸ் அணிக்காக விளையாடியவர். நாங்கள் இருவருமே விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். எனது தந்தையின் மூலமாகத் தான் கிரிக்கெட் விளையாட்டு எனக்கு அறிமுகமானது. இரண்டாம் வகுப்பு முதலே கிரிக்கெட் பயிற்சிகளை தொடங்கினேன். 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், கிளப்புகளுக்கான போட்டிகளிலும் விளையாடினேன். 2015ஆம் ஆண்டு 19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான டிவிஷன் போட்டிகளில் ஆடினேன். அதன் மூலம் தான் ரஞ்சி கோப்பை விளையாடுவதற்கான வாய்பு கிடைத்தது' என தான் கடந்து வந்த பாதையை விவரிகிறார் ஜெகதீசன்.

அறிமுகமான முதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், அதில் ஆட்ட நாயனாகவும் தேர்வு செய்யப்பாட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற இன்டர்ஸ்டேட் டி20 மற்றும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டிகளிலும் தமிழக அணியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். மேலும், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இவர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

'2018ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டேன். இருந்தும் களத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நாம் பார்த்து வியந்த கிரிக்கெட் வீரர்களை மிகவும் நெருக்கமாக பார்க்கவும், அவர்களிடம் இருந்து விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஐபிஎல் மூலமாக எனக்கு கிடைத்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விளையாட வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டி என்பதால் மைதானத்திற்குள் செல்லும் முன்னர் பயமும், பதட்டமும் அதிகமாகவே இருந்தது. மனஉறுதியோடு பேட்டிங்கை தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பதட்டம் குறைந்தது, சாதாரண போட்டிகளில் விளையாடுவதைப் போல் எண்ணிக்கொண்டு பேட்டிங் செய்தேன். நல்ல ரன்களை பெற்றேன். சென்ற ஆண்டுகளில் கிடைத்த அனுபவமும், அனுபவம் மிக்க கிரிக்கெட் வீரர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடமும் எனது பேட்டிங்கை சிறப்பாக்க உதவியது'

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 24 வயது ஜெகதீசன், நான்கு பவுண்டரிகளோடு, 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இந்த ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே அணியில் இருந்த இவருக்கு, பேட்டிங்கிற்கான வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

முதல் போட்டியில் கிடைத்த பேட்டிங் வாய்ப்பு அடுத்த நான்கு போட்டிகளிலும் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், அணியின் வலிமையே வெற்றிக்கு முக்கியம். அதற்கு ஏற்பத்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அணியின் வெற்றி மட்டுமே முதன்மையாக இருக்குமே தவிர, வாய்ப்பு கிடைக்கவில்லையே என வருத்தப்படத் தேவையில்லை' என கூறுகிறார் இவர்.

சக வீரர்களுடனான தனது நட்பு குறித்து பகிர்ந்து கொண்ட இளம் வீரர் ஜெகதீசன், தோனியின் கேப்டன்ஷிப்பை வெகுவாக புகழ்கிறார்.

'அனைவரும் சொல்வதுபோல் தோனி ஒரு சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விளையாட்டு குறித்த எந்த சந்தேகங்களையும், எந்த நேரத்திலும் அவரிடம் நாங்கள் கேட்கலாம். கிரிக்கெட் விளையாட்டில் அனுபவமிக்கவர், அனைவரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். நானும் விக்கெட்கீப்பர் என்பதால் அதில் உள்ள பல யுக்திகளை அவரிடமிருந்து நான் கேட்டு தெரிந்துகொண்டேன். போட்டியின் இடையில் அவர் கூறும் கணிப்புகளும், வெற்றிக்கான முன்னெடுப்புகளும் சிறப்பாக இருக்கும். அதனால் தான் அவரை சிறந்த கேப்டன் என்கிறோம். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எங்களால் ஹோட்டலைவிட்டு வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. இதனால், அணியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக மாறினோம். எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கிரிக்கெட் வீரர் மைக்கல் ஹஸ்ஸி. கிரிக்கெட் குறித்து நானும் அவரும் அதிகமாக பேசிக்கொள்வோம்' என்கிறார் ஜெகதீசன்.

இந்த ஆண்டு ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்போடு விளையாடத் துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சில வெற்றிகளுக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து போட்டியில் இருந்து வெளியேறியதால் கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது.

'ரசிகர்களின் விமர்சனங்கள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப் பெரிய பலம் அதன் ரசிகர்கள் தான். எனது முதல் ஆட்டத்திற்காக பல ரசிகர்கள் என்னைப் பாராட்டினர். விளையாடி முடித்து வந்ததும் சக வீரர்கள் என்னை பாராட்டி உற்சாகப்படுத்தினர். அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்ததால் ரசிகர்களைப் போலவே நாங்களும் வருத்தமடைந்தோம். ஆனால், தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் இருப்பவர்களே சிறந்த விளையாட்டு வீரர்கள். அடுத்த ஆண்டு சிறப்பாக விளையாடுவோம். எப்போதும் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த எனது தந்தை, என்னை உருவாக்கிய எனது பயிற்ச்சியாளர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கான பயிற்சியும் முயற்சியையும் தீவிரப்படுத்தியுள்ளேன்' என தெரிவிக்கிறார் இளம் கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்னைக்கு கேலி செய்த ட்ரம்ப்பை இன்னைக்கு கலாய்த்த சிறுமி க்ரேட்டா! – வைரலாகும் ட்வீட்