Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலித் பணியாளர் கடையில் டீ குடித்த மராட்டிய மன்னர் ஷாகு: தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி

தலித் பணியாளர் கடையில் டீ குடித்த மராட்டிய மன்னர் ஷாகு: தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி
, வியாழன், 28 ஜூன் 2018 (13:32 IST)
(மராட்டியத்தின் கோலாப்பூரை ஆண்ட மன்னர் ராஜர்ஷி ஷாகு, தீண்டாமை ஒழிப்புக்கு பாடுபட்டவர் 1902 லேயே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர். அவரது பிறந்த நாள் நேற்று)



"நீ டீக்கடை ஆரம்பித்திருப்பதாக கேள்விப்பட்டேனே, உண்மையா?" கங்காராம் காம்ப்ளேயைப் பார்த்து கேட்டார் மன்னர் ராஜர்ஷி ஷாகு.

"ஆம் அரசே. சொந்தமாக தொழில் தொடங்கச் சொல்லி நீங்கள் சொன்ன அறிவுரையை ஏற்று டீக்கடை ஆரம்பித்துள்ளேன்".

"உங்கள் கடையில் எத்தனை பேர் டீ குடித்தனர்?"

"நிறைய பேர். எண்ணிக்கை தெரியவில்லை".

"சரி... உங்கள் கடை வழியாகச் செல்லும்போது, இறங்கி டீ குடிப்பேன்," தமது வாகனத்தில் இருந்தபடியே மன்னர் சொன்னார்.

கங்காராம் காம்ப்ளே ஷாகு மகாராஜாவிடம் வேலை செய்த தலித் பணியாளர். அவர் டீக்கடை தொடங்க மன்னர் ஷாகுவே உதவியும் செய்தார்.


இந்த செய்தி மராட்டியத்தின் கோலாப்பூரில் காட்டுத்தீ போலப் பரவியது.

அந்தக் கடையை வெளியில் இருந்து வேடிக்கைப் பார்க்க பலர் வந்தனர். அவர்கள் முன்னிலையில் கங்காராம் கடையில் மன்னர் டீ குடித்தார். அவரோடு வந்தவர்களுக்கும் கங்காராமிடம் டீ வாங்கிக் கொடுத்தார் மன்னர்.

டீ குடித்தபின் கங்காராமிடம் மன்னர் சொன்னார். "ஒரு சோடா தயாரிக்கும் இயந்திரமும் வாங்கித் தருகிறேன். கடையில் வைத்துக்கொள்."

webdunia


சொன்னபடியே சோடா தயாரிக்கும் இயந்திரத்தை மன்னர் வாங்கியும் தந்தார்.

கோலாப்பூரின் பாவுசிங்ஜி சாலையில் கங்காராம் காம்ப்ளே டீக்கடை தொடங்கி 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

ராஜர்ஷி ஷாகு மன்னர்தான் கங்காராமுக்கு ஊக்கமும் ஆதரவும் தந்தவர்.

செயல் வீரர்


webdunia



அந்தக் காலத்தில் சாதியமைப்பு வலுவாக இருந்தது. சடங்குகளும் பழக்கவழக்கங்களும் சமூகத்தை பிளவுபடுத்தி மானுடத்தையும் இழிவு செய்தன. இவற்றை ஒழிக்க எப்போதும் முயன்றார் ஷாகு மகாராஜா. இந்த முயற்சியை அவர் நுட்பமாகச் செய்தார். சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் நீக்குப் போக்காகவும் இதைச் செய்தார் அவர்.

சில நேரங்களில் மறுப்பவர்களை கண்டிப்பார். சில நேரங்களில் நகைச்சுவை மூலம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்.

தீண்டப்படாதார் என்று சொல்லப்பட்ட மக்கள் தொட்டால் ஆட்களுக்கும், கோயில், குளம் போன்ற இடங்களுக்கம் தீட்டுப்பட்டுவிடும் என்று மேல் சாதியினர் நினைத்தனர். இப்படி தீண்டப்படாதார் என்று சொல்லப்பட்ட தலித் மக்கள் தொடுவதும் குற்றம் என்று விதி வகுக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள், மராத்தாக்கள் மேல் சாதியினராக கருதப்பட்டனர்.

அப்படிப்பட்ட காலத்தில் தீண்டாமையை ஒழிக்க ஷாகு மன்னர் பொது இடத்தில் வெளிப்படுத்திய நடத்தைகள், சாதியமைப்பின் மீதான வலுவான அடியாக இருந்தன.

1920ல் நாக்பூரில் நடந்த அனைத்திந்திய தீண்டப்படாதார் மாநாட்டில் தலைமை வகித்தார் ஷாகு மகாராஜா. மாநாட்டில் தீண்டப்படாதார் தயாரித்த தேநீரைப் பருகினார். அதற்கு அடுத்த மாதம் நாசிக்கில் நடந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இங்கும் தாழ்த்தப்பட்டோர் தயாரித்த தேநீரைப் பருகினார். தஸ்காவுனில் நடந்த ஒரு நிகழ்விலும் இப்படியே செய்தார்.

சிவாஜியின் வம்சத்தில் வந்த ஒரு மன்னர், சாதியை உறுதியாக பிடித்துக்கொண்டிருந்த ஒரு சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் தயாரித்த உணவை அருந்தியது ஒரு உறுதியான செய்தியை சொன்னது. மராட்டியத்தில் தீண்டாமை ஒழிப்பு முயற்சியில் இது ஒரு மைல்கல்.

குளத்தைத் தொட்டதற்கு அடி உதை

webdunia


கோலாப்பூரில் பாவ்டா பகுதியில் இருந்த ஷாகு மன்னரின் அரண்மனையில் கங்காராம் குதிரை லாயத்தில் வேலை செய்துவந்தார்.

ஒரு நாள் பகல் உணவுக்குப் பிறகு ஊழியர்கள் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, குளக்கரையில் இருந்து திடீரென ஒரு கூச்சல். எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தபோது சாந்தாராம் என்ற மராத்தி சிப்பாயும் பிற மேல்சாதி ஊழியர்களும் கங்காராம் காம்ப்ளேயை அடித்துக் கொண்டிருந்தனர்.

மராத்தாக்கள் தண்ணீர் எடுக்கும் குளத்தில் அவர் கைவைத்துவிட்டார். இதுதான் அவர் செய்த குற்றம். இதனால் அவர்கள் தடியால் அடித்ததில் கங்காராமுக்கு ரத்தம் வந்தது.

1919லேயே தனது நாட்டில் யாரும் பொது இடங்களில் தீண்டாமை கடைபிடிக்கக் கூடாது என்று மன்னர் ஷாகு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், கங்காராம் மீதான தாக்குதல் நடந்தது. அது நடந்த சமயம் ஷாகு மன்னர் கோலாப்பூரில் இல்லை. அவர் டெல்லி சென்றிருந்தார்.

மன்னர் வரும் வரை காத்திருந்த கங்காராம், அவர் வந்தவுடன் தனது சமூகத்து மக்களுடன் அவரை சந்தித்து தனக்கு நேர்ந்ததை சொன்னார். தழும்புகளையும் காட்டினார். அதைப் பார்த்து ஆத்திரமடைந்த மன்னர் கங்காராமை அடித்தவர்களை அழைத்து, குதிரையை அடிக்கும் தடியால் அவர்களை தாமே அடித்தார்.

கங்காராமை அழைத்து ஆறுதல் சொன்ன மன்னர், அவரை அரண்மனைப் பணியில் இருந்து விடுவித்து சொந்தமாக தொழில் தொடங்கும்படியும், அதற்குத் தாம் உதவி செய்வதாகவும் கூறி அனுப்பிவைத்தார்.

மேல் சாதியினரைப் போல தாழ்த்தப்பட்ட மக்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவது சாத்தியமில்லாத காலம் அது. ஆனால் ஷாகு மகாராஜா அதற்கான வாய்ப்புகளை கங்காராம் காம்ப்ளேவுக்குத் திறந்துவிட்டார்.

டீக்கடை திறப்பு

சில நாள்களில் 'சத்யசூத்தரக்' என்ற பெயரில் கோலாப்பூரின் பாவுசிங்ஜி சாலையில் டீக்கடை திறந்தார் கங்காராம்.


அவரது கடையில் தூய்மையும், சுவையும் வேறெந்தக் கடைக்கும் சளைத்ததல்ல. ஆனால், தாழ்த்தப்பட்டவர் நடத்தும் கடைக்குச் செல்ல எவருக்கும் மனமில்லை. இதைக் கேள்விப்பட்டார் மன்னர். சமூகம் சட்டங்களால் மட்டும் திருந்துவதில்லை. செயல்களாலும், சில உத்திகளாலுமே அது திருந்தும் என்று உணர்ந்த அவர் நகர் உலாக்களின்போது தாம் கங்காராம் கடையில் டீ அருந்தியதுடன் தம்முடன் வருகிறவர்களுக்கும் டீ வாங்கித்தந்தார். மன்னரே அதைச் செய்யும்போது அவரை எதிர்த்துக் கேள்விகேட்க எவருக்கும் துணிச்சல் இல்லை. சமூக மாற்றத்துக்கான மன்னர் செய்த முயற்சிகளின் வரலாற்றில் இந்த சம்பவத்துக்கு முக்கிய இடம் உண்டு.

webdunia


மன்னரின் மரணத்துக்குப் பிறகு ஷாகு மன்னருக்கு நினைவிடம் அமைக்க கங்கராம் காம்ப்ளே ஒரு குழுவை அமைத்தார். கோலாப்பூர் நர்சரி பாக் பகுதியில் 1925ல் ஷாகு மன்னருக்கு நினைவிடம் அமைத்தது அக்குழு.

ஷாகு மகாராஜாவுக்கு அமைக்கப்பட்ட முதல் நினைவிடம் இதுதான். இதை அமைத்தது கங்காராம் தலைமையிலான தலித்துகள்.


மஞ்சுஸ்ரீ பவார்
வரலாற்றாசிரியர்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதுவுமில்லை என்ற இளைஞரை கத்தியால் கீறிய கொள்ளையர்கள்!