Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி வெட்டிக் கொலை

15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி வெட்டிக் கொலை
, வெள்ளி, 29 ஜூலை 2016 (19:43 IST)
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
 


சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் போலீசார்
 
சில தினங்களுக்கு முன்பு தாங்கள் வாங்கிய மூன்று பிஸ்கெட் பாக்கெட்டுகளுக்கான 15 ரூபாயைத் திருப்பிச் செலுத்த இன்னும் சில தினங்கள் தேவைப்படுவதாக அந்தத் தம்பதியர் கூறியதை அடுத்து, உயர் சாதி மளிகைக் கடைக்காரரால் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மைன்புரி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றது.
 
தலித் தம்பதிகள், காலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மளிகைக் கடை உரிமையாளரான அசோக் மிஸ்ரா, மூன்று குழந்தைளுக்காக சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வாங்கிய மூன்று பிஸ்கெட் பாக்கெட்டுகளுக்கான தொகையைத் திருப்பித்தர வேண்டும் என வற்புறுத்தினார். மாலையில் தங்களுக்கு தினக்கூலி கிடைத்ததும் அதைக் கொடுப்பதாகத் தெரிவித்தனர்.
 
"பணம் கேட்டு மிஸ்ரா தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தபோது, அந்தத் தம்பதிகள் தங்களது பணிக்காக சென்று கொண்டிருந்தார்கள். ஆத்திரத்துடன் அருகிலுள்ள தனது வீட்டுக்கு ஓடிய மிஸ்ரா, அரிவாளுடன் திரும்பி வந்தார்.
 
பரத்தை அவர் சரமாரியாக வெட்டினார். அவரைத் தடுத்த மனைவி மம்தாவையும் தாக்கினார். அதில், தம்பதியர் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டார்கள்" என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த நதீம் என்பவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
 
இச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தில், இறந்த மாட்டின் தோலை உரித்து விற்க முயன்றதாக, நான்கு தலித் இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து பசு பாதுகாப்பு இயக்கம் என்று கூறப்படும் அமைப்பினரால் தாக்கப்பட்டனர். சமூக வலைத் தளங்களில் அந்த வீடியோ பரவியதை அடுத்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
 
தலித் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக சமூக நீதி அமைப்புக்கள் கூறுகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘வழக்குப் போடுங்கள்’ என்றதும் தலையாட்டும் தம்பிரான்கள் அரசு வழக்கறிஞர்கள் - கி,வீரமணி