கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால், டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருந்த இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் குடிமக்களான இவர்கள் இருவரும் 80 வயதைக் கடந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே சூழ்நிலையில், புதன்கிழமை மட்டும் சீனாவில் கொரோனா பாதிப்பினால் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், சீனாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,121ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74,600க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"சீனாவிலும், மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இதன் தாக்கம் வேறு வகையில் உள்ளது" என்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 621 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. சீன பெருநிலப் பரப்புக்கு வெளியே ஒரே இடத்தில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது இங்குதான்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் முதல் முறையாக அந்த கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விவகாரத்தை ஜப்பான் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.