Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

கொரோனா வைரஸ் ஊரடங்கு: தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி கோயில்கள் திறக்கப்படுமா?

Advertiesment
BBC Tamil
, வியாழன், 21 மே 2020 (14:59 IST)
இன்று தமிழக செய்தித்தாள்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - "தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி கோயில்களை திறக்க திட்டம்"

ஊரடங்கால் மூடிக் கிடக்கும் கோயில்களில் சாமி தரிசனத்துக்காக பக்தர்களை வருகிற 1ஆம் தேதி முதல் அனுமதிப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“ஊரடங்கால் மூடிக்கிடக்கும் கோயில்களை திறக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையில் அறநிலையத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இணை-ஆணையர், துணை-ஆணையர், உதவி-ஆணையர் அந்தஸ்தில் உள்ள கோயில் நிர்வாகிகளிடம் கோயில்களை வரும் 1ஆம் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கோயில்கள் திறக்கப்பட்டால் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமி நாசினி மூலம் கையை சுத்தம் செய்ய வைப்பது, தினசரி 500 பேரை மட்டும் அனுமதிப்பது, அதுவும் சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது, கோயில் குருக்கள், பட்டாச்சாரியார்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பது, அன்னதான கூடத்தை திறக்கலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "தமிழகத்துக்கு ரூ. 2,223.81 கோடி மத்திய அரசு நிதி"

மாநிலங்களுக்கான மத்திய வரி பகிர்வில் நடப்பு மே மாத தவணையாக ரூ.1,928.56 கோடி, சிறிய நகர்ப்புறங்களில் வளர்ச்சி மானியமாக ரூ.295.25 கோடி என மொத்தம் ரூ.2,223.81 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

“மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு சுமார் 23 சதவீதம் வரை வரி பங்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த வரிப் பகிர்வை 40 சதவீதத்துக்கும் அதிகமாக மத்திய அரசு உயர்த்தியது. கடந்த நிதிநிலை அறிக்கையிலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைக் குறிப்பிட்டு, ரூ.26 லட்சம் கோடிக்கு அதிகமாக கிடைக்கப் போகும் வரி வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவித்தார். கொரோனா நோய்த் தொற்று பொது முடக்கத்தினால் கடுமையான நிதி நெருக்கடியை மாநிலங்கள் சந்தித்து வரும்நிலையில், தற்போது இந்த நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு மே மாத தவணையாக மத்திய வரி பகிர்வில் ரூ. 46,038.70 கோடியை புதன்கிழமை ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதில் தமிழகத்தின் பங்காக ரூ.1,928.56 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ. 8,255.19 கோடியும், கேரளத்துக்கு ரூ.894.53 கோடியும், பிகாருக்கு ரூ. 4,631.96 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ. 3,461.65 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து: "200 சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று தொடக்கம்"

ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 10 மணிமுதல் தொடங்கவுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 சிறப்பு ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட, வசதியற்ற என இரண்டு வகை ரயில்களும் இருக்குமென்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

எனினும், மக்கள் இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டை இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை தாயகம் அழைத்து செல்ல, மே மாதம் இரண்டாம் வாரம் முதல் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபானங்களை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி…