Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் குரங்குகளுக்கு கோவிட் 19 தடுப்பு மருத்துவ பரிசோதனை - நம்பிக்கை தரும் ஆய்வு

Webdunia
சனி, 16 மே 2020 (15:31 IST)
கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஒன்று ஆறு செம்முகக் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது பயனுள்ள விதத்தில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

சார்ஸ் கோவிட் 2 வகை வைரஸ் பாதிப்பைக் குரங்குகளுக்கு ஏற்படுத்தி, அவற்றிற்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசியால் அந்தக் குரங்குகளின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவது குறைவதைக் காண முடிந்தது. இது கொரோனா தடுப்பூசிக்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

தற்போது மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த மருந்து விரைவில் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தயாராகும் என்ற நம்பிக்கையைப் பலருக்கும் அளித்துள்ளது.

ஆனால், இது மனிதர்கள் மீதும் அதே பலனை அளிக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த பரிசோதனையை செய்தனர்.

இந்த தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளுக்கு, நிமோனியா ஏற்படுவது தடுக்கப்பட்டது.

ரீஸஸ் மகாக்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செம்முகக் குரங்குகள், மனிதர்களைப் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்பைக் கொண்டவை.

நல்ல வேலையாக நோய் எதிர்ப்பு மேம்படுவதால் ஏற்படும் எந்த நோயையும் இந்தத் தடுப்பூசி தூண்டவில்லை.

அப்படி ஏற்பட்டால் அது "கோட்பாட்டு ரீதியான அபாயமாகும்" என்று விவரிக்கிறார் பிபிசியின் மருத்துவ செய்தியாளர் பெர்கஸ் வால்ஷ். அதாவது உடலில் ஒரு நோய்க்கு எதிராகப் போராட செலுத்தப்படும் தடுப்பூசி, மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.இதனால் வேறு சில நோய்களும் உடலில் ஏற்படலாம்.

இதுபோன்ற விளைவுகள் இதற்கு முன் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக சார்ஸ் வைரசிற்கான தடுப்பூசி பரிசோதனைகளை விலங்குகளுக்கு செய்தபோது இவ்வாறான விளைவுகள் ஏற்பட்டது. அது சார்ஸ் தடுப்பூசியை உருவாக்குவதில் ஒரு பெரும் தடுமாற்றமாகப் பார்க்கப்பட்டது.

தற்போது பரிசோதிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசிக்கான ஆய்வின் முடிவுகள் வேறு ஆராய்ச்சியாளர்களால் இன்னும் மறு ஆய்வு செய்யப்படவோ, அறிவியல் சஞ்சிகைகளில் முறையாகப் பதிப்பிக்கப்படவோ இல்லை.

எனினும் இது "உயர்ந்த தரத்திலான ஆய்வாகவும், மிகவும் நம்பிக்கை தருவதாகவும்" இருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராப்பிகல் மெடிசனின் பேராசிரியர் ஸ்டீஃபன் ஈவான்ஸ் கூறுகிறார்.

இதனிடையே பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு மனிதர்களிடத்திலும், இந்த ஆய்வு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குரங்குகளின் உடலில் மோசமான நோய் எதிர்வினைகள் எதுவும் இருக்கவில்லை என்பதும் நிமோனியா ஏற்படவில்லை என்பதும் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் வருகைதரு பேராசிரியர் மருத்துவர் பென்னி வார்டு கூறுகிறார்.

கொரோனா வைரஸுக்கு என்றே தனித்துவமாக இருக்கும் முள் போன்ற வெளிப்புற பாகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசி செயல்படுகிறது.

அதாவது வைரஸ் தொற்று உண்டான பின்பு அந்த குறிப்பிட்ட பாகத்தை உடல் அடையாளம் காணும். அடையாளம் கண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர் பொருட்களை (antibodies) உடல் உருவாக்கத் தொடங்கும்.

இவ்வாறான நிகழ்வு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட குரங்குகளின் உடலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments