Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ்: தென் கொரியாவை அச்சுறுத்தும் இரண்டாம் அலை நோய்த்தொற்று

கொரோனா வைரஸ்: தென் கொரியாவை அச்சுறுத்தும் இரண்டாம் அலை நோய்த்தொற்று
, திங்கள், 22 ஜூன் 2020 (23:15 IST)
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்து வந்தாலும், கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தென் கொரியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது அதை திறம்பட எதிர்கொண்டதாக தென் கொரியா பாராட்டப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸின் பரவல் அடுத்து வரும் மாதங்களிலும் தொடருமென்று அந்த நாட்டு அரசு கருதுகிறது.

கொரோனா வைரஸின் முதல் அலை ஏப்ரல் வரை நீடித்ததாக கொரிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (கேசிடிசி) தலைவரான ஜங் யூன்-கியோங் தெரிவித்தார்.

இருப்பினும், தென் கொரியாவின் தலைநகரான சோல் நகரத்திலுள்ள இரவு விடுதிகள் உள்பட பல நோய்த்தொற்று மூலங்களின் காரணமாக மே மாதம் முதல் மீண்டும் அங்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

தென் கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பெரும்பாலும் பெரிய அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் பணிபுரிபவர்கள் என்றும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை இன்று விளக்கம் அளித்தது.

தென் கொரியாவில் சமீபத்திய வாரங்களாக கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்துள்ளது என்றும் இது நாடு கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் உள்ளது என்ற முடிவுக்கு தன்னை இட்டுச் சென்றதாகவும், அது தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர் ஜியாங் கூறினார்.
இதற்கு முன்புவரை, தென் கொரியாவில் கொரோனா வைரஸின் முதல் அலையே இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கொரிய நோய் கட்டுப்பாட்டு மையம் கூறி வந்தது.

விடுமுறை காலமான மே மாதத்தின் தொடக்கத்தில் வாரயிறுதி ஒன்றின்போது கொரோனா வைரஸ் பரவலின் புதிய அலை தொடங்கியது என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக மருத்துவர் ஜியாங் கூறுகிறார்.

முன்னதாக திங்களன்று, சோல் நகரத்தின் தெற்கே உள்ள டீஜியோன் என்னும் பகுதியில், பல சிறிய வைரஸ் பரவல் மூலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அங்குள்ள அருங்காட்சியகங்கள், நூலகங்கள் போன்ற பொது இடங்களில் கூட்டங்களை தடை செய்வதாக உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.

சோல் நகரத்தில் அடுத்த மூன்று நாட்களில் புதிய நோய்த்தொற்று தினசரி 30 என்ற எண்ணிக்கையையும் நகர மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவீதத்தையும் தாண்டினால் மீண்டும் கடுமையான சமூக விலகல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று அந்த நகரத்தின் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் சுயவிருப்பதுடன் சமூக விலகலை கடைபிடிப்பது, நோய்த்தொற்று பரவலின் மூலத்தை தீவிரமாக கண்டறிந்து அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வது உள்ளிட்ட திட்டங்களின் காரணமாக இதுவரை தென் கொரியாவில் நாடு தழுவிய முடக்க நிலை அமல்படுத்தப்படவில்லை.

தென் கொரியாவில் முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட ஜனவரி 20ஆம் தேதி முதல் இன்றுவரை அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் இதுவரை 12,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,277 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரும் நிலப்பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்த மன்மோகன் சிங் – ஜே.பி. நட்டா