Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபால் மூன்றாம் அலை ஏற்படுமா? அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?

கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபால் மூன்றாம் அலை ஏற்படுமா? அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (13:35 IST)
புனேவில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியில் இது ஒரு கலக்கமான நேரம். இங்கு இந்தியாவின் பழமையான மரபணு வரன்முறையிடல் (Genome sequencing) வசதி அமைந்துள்ளது.

கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபால் மக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த இந்தியா முயற்சித்து வரும் வேளையில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி போன்ற ஆய்வகங்கள் இந்த திரிபால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆராய்ந்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் தொண்டை மற்றும் மூக்கில் எடுக்கப்பட்ட ஸ்வாப் சோதனைகள் நிறைந்த சுமார் 100 சிறிய பெட்டிகள் அங்கு வருகின்றன.

இது தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் முதன்முறையாக கண்டறியப்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனை எண்ணிக்கையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம். தற்போது ஒமிக்ரான் திரிபு உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

காற்று புகாத ஓர் அறையில் பாதுகாப்பு உடைகள் அணிந்தபடி ஆராய்ச்சியாளர்கள் அந்த பெட்டிகளை திறந்து வைரஸை பிரித்தெடுக்கும் நடைமுறையை தொடங்குகின்றனர்.
மாதிரிகளுக்கு எண்கள் வழங்கப்பட்டிருக்கும் எனவே ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த மாதிரிகள் யாருடையது என்று தெரியாது.

"முடிவுகளை உடனடியாகக் கொடுக்க தற்போது எங்கள் மீது அதிக அழுத்தம் உள்ளது. அது உடனடியாக நடக்க கூடிய காரியமல்ல. ஆனால் நாங்கள் அதைச் சரியாகச் செய்ய வேண்டும்," என்கிறார் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியின் மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான வர்ஷா போட்தர் தெரிவிக்கிறார். அவரது தொலைபேசி அழைப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

மாதிரிகளை சீக்குவென்சிங் இயந்திரத்தில் செலுத்துவதற்கு முன் அதை பல மணிநேரங்களுக்கு தயார்படுத்த வேண்டும். இந்த சீகுவென்சிங் இயந்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெருந்தொற்று தொடங்கிய சமயத்தில் இங்கு கொண்டுவரப்பட்டது.

இந்த இயந்திரம் ஒரு தரவை உருவாக்கும். அதன் பின் சீனாவின் வூஹானில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா உடன் மென்பொருள் மூலம் ஒப்பிடப்படும். அதன்பின் அது எந்த திரிபு என்று விஞ்ஞானிகளுக்கு தெரியவரும்.

மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை

இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் அலையின் போது, முன்கூட்டியே டெல்டா திரிபு குறித்து போதிய தகவலை இந்தியா பிற நாடுகளுக்கு வழங்கவில்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. டெல்டா திரிபு உலகம் முழுவதும் வீரியமாகப் பரவியது. இந்தியாவில் அப்போதிலிருந்து நிலைமை எவ்வாறு மாறியுள்ளது?
webdunia

"அதிலிருந்து நாம் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்," என்கிறார் நேஷ்னல் இன்ஸ்டிட்யூடின் இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம். "நாம் வைரஸை அதிகமாகப் பரவ விட்டால், புதிய திரிபு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதை நாம் அறிவோம். தற்போது நாம் அதிக முனைப்போடும், அதிக முன் தயாரிப்புகளோடும் இருக்கிறோம் என கருதுகிறேன்" என்கிறார் பிரியா.

இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை ஒரு பெரும் சவால் என பிரியா கூறுகிறார்.

"பிரிட்டன் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அருகில் கூட நாம் இல்லை, இருப்பினும் நாம் நிறைய முன்னேறியுள்ளோம் என கருதுகிறேன். அதேபோன்று அரசு எடுக்கும் நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதும் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார் பிரியா.

"மூன்றாம் அலை என்பது மக்களின் செயல்பாடுகளை பொறுத்து வரும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில் தயக்கம் காட்டுவது அல்லது மூடிய இடங்களில் மக்கல் நெரிசலாக இருப்பது மூன்றாம் அலையை வரவேற்கும் செயலாக அமைந்துவிடும்."

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பாதியளவு மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் பல மில்லியன் பேர் இன்னும் ஆபத்தில் தான் உள்ளனர். ஒமிக்ரானால் மூன்றாம் அலை ஏற்படுமானால் மருத்துவமனைகள் வெகுவிரைவில் நிரம்பி வழியலாம்.

"இரண்டாம் அலையின்போது மருத்துவமனைகளின் கொள்ளளவை காட்டிலும் பல மடங்கு அதிக அளவிலான நோயாளிகள் வந்தனர் இது ஒருமுறை மட்டுமல்ல பலமுறை நடந்தது எனவே ஒரு சிறிய மூன்றாம் அலை தாக்கினாலும், அது நம் மருத்துவ கட்டமைப்புகளுக்கு சவால் விடுவதாக இருக்கலாம். சிறிய மூன்றாம் அலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என மும்பையில் உள்ள மருத்துவர் ஸ்வப்னேயில் பாரிக் கூறுகிறார்.

"எனவே மூன்றாம் அலை ஏற்படுமா? அல்லது எப்போது ஏற்படும் என்று கேட்பதற்கு பதிலாக நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

டெல்லியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அங்கு சுமார் ஒரு மாத காலமாக யாரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வராத நிலையில் தற்போது இந்த தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் அலையை போன்ற சூழல் ஏற்பட்டு விடுமோ என அச்சம் படர்ந்து வருகிறது என்கிறார் அம்மருத்துவமனையின் தலைவர் சுமித் ரே.

"தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், எனவே நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணமிது" என்கிறார் சுமித்.

ஏப்ரல் மாதத்தில் இந்த மருத்துவமனைக்கு பிபிசி சென்றபோது மூலை முடுக்கெல்லாம் சக்கர நாற்காலியில் நோயாளிகள் குவிந்திருந்தனர். முடிந்த அளவு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பலருக்கு சிகிச்சை அளிக்க இடமில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதேபோன்று டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து கொண்டே ஆக்சிஜன் விநியோகத்திற்காக ரே பல தொலைப்பேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

டெல்லி மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் பலர் ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திய அரசு தனது ஒருங்கிணைப்பு முறையை மேம்படுத்தி தேவைப்படும் நேரங்களில் ஆக்சிஜன் விநியோகத்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என ரே தெரிவித்திருந்தார்.
"மக்கள் சிகிச்சை பெற இடமில்லாமல் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கும் நிலை இருக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலான ஒருங்கிணைப்புப் பணிகள் தேவை. நாம் தயாராக நமக்கு போதுமான நேரம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் சுமித்.

"உங்களுக்கு உயிரை காப்பாற்றுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் ஆனால் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் உங்களால் அதை செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் தோற்றுவிட்டதைப் போல் ஒர் உணர்வு வரும். ஒரு மருத்துவராக எனக்கு அது ஒரு மோசமான தருணம்."

அரசு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் மும்பையை சேர்ந்த மருத்துவர் பரிக் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.
"எத்தனை மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்த முடியுமோ அத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதேபோல முதியவர்கள் மற்றும் மருத்துவ ரீதியில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு, குறிப்பாக நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு மூன்றாம் டோஸ் செலுத்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்" என்கிறார் அவர்.

"இந்தியாவில் இரண்டாம் அலையின் போது அதனோடு மோதி நாம் தோற்று போனோம் ஆனால் இந்த முறை அதை தடுக்க வேண்டும். எனவே கூடுதலாகத் தயாராவோம்" என்கிறார் அவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! – மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு!