Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia

Advertiesment
கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia
, திங்கள், 23 மார்ச் 2020 (23:30 IST)
கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia


மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500 கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 23)ஒரே நாளில் புதிதாக 212 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 1,518ஆக உள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மலேசியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.இதற்கு முன்பு கடந்த 15ஆம் தேதி 190 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே நேற்றும் இன்றுமாக நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 70 வயது ஆடவர்கள் இருவர், 49 வயது மலேசிய குடிமகன் மற்றும் 51 வயது மலேசியப் பெண்மணியும் அடங்குவர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இதுவரை 159 பேர் சிகிச்சைக்குப் பின்பு முழுமையாக குணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 57 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு என 33 மில்லியன் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் (personal protective equipment - PPE) வாங்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

இக்கருவிகள் அனைத்தும் இவ்வாரம் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு தரப்பினர் மூலம் இந்தக் கருவிகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்.

மலேசியாவில் பொது நடமாட்ட கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எத்தகைய பலன் கிடைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும், நோய்த் தொற்று குறைகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவே போதுமானதா? அல்லது பொது நடமாட்ட கட்டுப்பாடு அறிவிப்பை நீட்டிப்பதா என்பது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்கும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

"இதுவரை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அளித்துள்ள அறிக்கைகளின்படி, 90 விழுக்காட்டினர் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றுவது தெரிய வந்துள்ளது. இது நூறு விழுக்காட்டை எட்டிப் பிடிக்கும் என நம்புகிறோம்" என்றார் பிரதமர் மொகிதின் யாசின்.

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இம்மாதம் 18ஆம் தேதி முதல் மாத இறுதிவரை பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று மில்லியன் மக்கள் அரசு ஆணையை பின்பற்றவில்லை

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் பத்து விழுக்காட்டினர் அரசு அறிவித்துள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என தெரிய வந்துள்ளது. மொத்தம் மூன்று மில்லியன் பேர் இவ்வாறு இருப்பதாக மலேசிய ஆயுதப் படை தெரிவித்துள்ளது.

90 விழுக்காட்டினர் அரசின் ஆணைக்கேற்ப நடந்து கொள்வது நல்ல விஷயம் என்றாலும், மீதமுள்ள 10 விழுக்காட்டினர் அதைப் பின்பற்றவில்லை என்பது கவனத்துக்குரியது என ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 விழுக்காடு மக்கள் தானே எனக் குறைத்து எடைபோட முடியாது என்றும், மூன்று மில்லியன் மக்கள் என்பது பெரிய எண்ணிக்கை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை காக்கவும், கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவும், மக்கள் மத்தியில் ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் மலேசிய காவல்துறைக்கு மலேசிய ஆயுதப்படை உதவும்" என்றும் ஆயுதப்படை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என எச்சரிக்கும் மகாதீர்

நாம் அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் போன்ற ஒன்றை இதுவரைக் கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

"தற்போது மலேசியாவில் நடக்கக் கூடிய அனைத்தும் உலகின் இதர பகுதிகளிலும் நடக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது உற்பத்தி குறைக்கப்படலாம். ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப் படக்கூடும்.

"உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். இதனால் பணக்கார நாடுகள் கூட சிரமங்களைச் சந்திக்கும். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டமானது கடுமையாக இருக்கும். அன்றாடம் சம்பாதிக்கக் கூடியவர்கள் சிரமப்படுவார்கள். இவர்களால் சம்பாதிக்க முடியும் என்றாலும் தேவையை ஈடுகட்டும் வகையில் வருமானம் இருக்காது. எனவே அரசாங்கம் பொருளாதார ரீதியில் உதவ வேண்டியிருக்கும்.

"மலேசியாவை பொருத்தவரை சுற்றுலாத்துறை தான் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையாகும். இப்போது சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அதை சார்ந்துள்ளவர்கள் வேலையை, வருமானத்தை இழக்க நேரிடும். அரசாங்கத்துக்கும் வருமான இழப்பு ஏற்படும்.

"மொத்தத்தில் நாம் பயங்கரமான பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என்பதே உண்மை," என்று அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொன்ன... பிரபல தனியார் வங்கிகள்…