Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: ஆசிய நாடுகள் சொல்லும் 7 பாடங்கள்

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: ஆசிய நாடுகள் சொல்லும் 7 பாடங்கள்
, செவ்வாய், 9 ஜூன் 2020 (11:34 IST)
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பாதிக்கப்பட்டது. முதன் முதலில் கொரோனா வைரசை எதிர்கொண்டது ஆசிய நாடுகள்தான். முடக்கத்தை ஆசிய நாடுகள்தான் முதலில் அமல்படுத்தின. பின்னர் உலக நாடுகள் இதை ஏற்றுக்கொண்டன. 


இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு ஆசிய நாடுகள் தரும் 7 பாடங்கள் என்ன என்று காண்போம்.
 
அலை, பாதிப்பு உச்சம், தொற்று திரள்: தவிர்க்க முடியாதவை
 
கொரோனாவின் இரண்டாம் அலை பற்றி தற்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. முதலில் பரவிய தொற்று குறைந்த பிறகு, மீண்டும் மக்களுக்குத் தொற்று பரவுவது இரண்டாம் அலை எனப்படுகிறது. கொரோனா வைரஸ் பல மாதங்களுக்கு வீரியமாகப் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது.
 
பரிசோதனை, முடக்கம் போன்றவற்றின் மூலம் கொரோனாவை சிறப்பாகச் சமாளித்த தென் கொரியா போன்ற நாடுகளில் கூட புதிதாக அதிக அளவிலான தொற்றுகள் ஏற்பட்டுவருகின்றன.
 
வைரஸ் உடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்டநிலையில், புதிய தொற்றுகள் நிச்சயம் வரும் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். அதை எப்படிக் கணித்து, சமாளிப்பது என்பதுதான் சவால்.
 
கட்டுப்பாடுகள் மீண்டும் வரலாம்
 
''பொது முடக்கத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினால், குறிப்பிட்ட பகுதியில் கொரோனாவே இல்லை என்று பொருள் அல்ல'' என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப்  எகனாமிக்ஸ் என்ற புகழ் பெற்ற ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கைத் துறையின் சுகாதாரப் பொருளியல் துறையின் ஆய்விருக்கைத் தலைவர் அலிஸ்டர் மெகுவேர். அதீத நன்னம்பிக்கை வேண்டாம் என்கிறார் அவர்.
 
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் கொரோனாவ கட்டுப்படுத்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மார்ச் மாத மத்தியில் அங்கு ஒவ்வொரு நாளும் 1 அல்லது 2 புதிய தொற்றுகள் மட்டுமே ஏற்பட்டன. முடக்கம் நல்ல பலன் அளித்ததால், ஏப்ரல் மாதம் முடக்கம் நீக்கப்பட்டது. பள்ளிகள்  மிண்டும் திறக்கப்பட்டன.
 
ஆனால், இந்த தீவில் மீண்டும் இரண்டாம் அலை ஏற்பட்டதால் ஒரு மாதத்துக்குள் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
 
அங்கு இரண்டாம் முடக்கமும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது . ஆனால், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் முடக்கம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
சீனாவிலும் தொற்று எண்ணிக்கை குறைந்ததால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ஆனால், மே மாத மத்தியில் வைரஸ் முதன் முதலில் பரவிய வுஹான் நகரில் மீண்டும் தொற்று பரவியது.
 
தென் கொரியாவில் முடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு தலைநகர் சோலில் மீண்டும் வைரஸ் பரவியதால், திறக்கப்பட்ட சில நாட்களிலே 200க்கும் மேற்பட்ட பள்ளிகள்  மூடப்பட்டன.
 
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துதல்
 
சீனாவின் ஜிலின் மற்றும் ஹிலோங்ஜியாங் மாகாணங்களில், ரஷ்யாவிலிருந்து வந்தவர்களால் மீண்டும் வைரஸ் பரவியது.
 
அப்போது ரஷ்யாவிலிருந்து வந்த 8 சீனர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், அவர்கள் வந்த நேரத்தில் வந்த மேலும் 300 பேர்  தனிமைப்படுத்தப்பட்டனர்.
 
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைக் கண்காணிக்க, அவர்களை கைகளில் மின்னணு சாதனங்களை ஹாங்காங் பொருத்தியுள்ளது. இது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 
பரிசோதனை மற்றும் கண்காணிப்பு
 
பிப்ரவரி மாத தொடக்கத்தில் தினமும் 10 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை தென் கொரியா இலவசமாக செய்தது. பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இதன் மூலம் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியது.
 
மே மாத தொடக்கத்தில் புதிய தொற்றுகள் எதுவும் இல்லாத நிலையில், மே 12-ம் தேதி தலைநகர் சோலில் உள்ள இரவு கேளிக்கை விடுதிகள் மூலம் மீண்டும்  வைரஸ் பரவியது. தொற்று உறுதியான இரவு விடுதிகளுடன் தொடர்புடைய 90 ஆயிரம் பேரை உடனடியாக கண்காணித்தனர். அதில் 300 பேருக்கு தொற்று  உறுதியானது.
 
''கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரால் இரண்டு நாட்களில் 100 பேருக்குத் தொற்றைப் பரப்ப முடியும் என்பதால் மிக விரைவாகப் பரிசோதனை மற்றும் கண்காணிப்புகளைச் செய்தார்கள்'' என்கிறார் பேராசிரியர் அலிஸ்டர் மெகுவேர்.

webdunia
ஒரு முறையல்ல இரண்டு முறை பரிசோதனை
 
''கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதற்கான பரிசோதனை மட்டுமல்ல, அது கடந்த காலத்தில் யாருக்கு இருந்தது என்பதைக் காட்டும் ஆண்டிபாடி (எதிர்ப்பான்) பரிசோதனையும் தேவை'' என்கிறார் பேராசிரியர் அலிஸ்டர் மெகுவேர்.
 
''கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொண்டவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்  குறைவு'' என்கிறார் சிங்கப்பூரின் டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆஷ்லி ஜான்.
 
எனவே சிங்கப்பூரில் தேசிய அளவில் நோயெதிர்ப்பு பரிசோதனை செய்யவில்லை என்றாலும், மழலையர்ப் பள்ளி ஆசிரியர்கள் போன்ற பலவீனமான திரள்களில்,  இந்த சோதனையை செய்து வருகின்றனர்.
 
ஏற்கனவே தொற்று இருந்து. தற்போது இல்லாதவர்களைக் கண்டறிவதன் மூலம் அவர்களைப் பணிக்குத் திரும்ப அனுமதிக்க முடியும் என்பதே இந்த நோயெதிர்ப்பான் பரிசோதனை செய்வதற்கான நோக்கம்.
 
மருத்துவத்துறையை மேம்படுத்துதல்
 
வுஹானில் வெறும் 8 நாட்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைச் சீனா கட்டியது. மருத்துவ அவசரக் காலத்தின்போது எப்படித் திட்டமிட்டு  மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும் என்பதை சீனா உணர்த்தியது.
 
''மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் மற்ற நாடுகளிடம் இருந்து மட்டுமின்றி, தங்களிடம் இருந்து கூட கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை இந்த உலகத் தொற்று தொட்டுக்காட்டுகிறது'' என்கிறார் பார்சிலோனா பொருளாதார கல்லூரி பேராசிரியர் ஜுடிட் வால்.
 
மற்ற துறைகளுடன் மருத்துவத்துறையிலும் அதிக முதலீடுகளை அரசுகள் செய்ய வேண்டும் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது.
 
ஒரே தீர்வு என்பது இல்லை
 
கொரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்றவல்ல ஒற்றைத் தீர்வு என எதுவும் இல்லை. பரிசோதனை, சமூக இடைவெளி எனப் பல நடவடிக்கைகளை ஆசிய நாடுகள் எடுத்து வருகின்றன.
 
''ஒரு தடுப்பு மருந்து வரும் வரை நாம் அனைவரும் ஆபத்தில்தான் இருப்போம்'' என்கிறார் மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் கோவிட் -19 தடுப்பு மேலாளர் மருத்துவர் நவோகோ இஷிகாவா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் அவங்களோட ஒட்டும் இல்ல, உறவும் இல்ல! – கடையை சாத்திய வட கொரியா!