அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் மூன்றாவது நாடாக உள்ள இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.
மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவுக்கு வேண்டுமானால் இது வியப்பளிப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குறைந்த மக்கள்தொகையை கொண்ட அதன் அண்டை நாடுகள் கோவிட்-19 நோய்த்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தோம்.
பெருந்தொற்றின் புதிய மையம்
20 நாட்களுக்கு ஒருமுறை நோய்த்தொற்று எண்ணிக்கை இரு மடங்காகும் இந்தியாதான் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலின் மையாக விளங்குகிறது. இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இருப்பினும், கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்து அதிக கொரோனா தொற்றுகளை கொண்ட பாகிஸ்தானில் ஜூன் மாதத்தின் மத்தியப் பகுதியில் ஒரு நாளைக்கு 6,000 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில், அங்கு தற்போது தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைந்துள்ளது.
இருப்பினும், இந்த குறுகியகால போக்கை அடிப்படையாக கொண்டு நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறவியலாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போன்று, ஜூன் மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஜூலை மாதத்தின் தொடக்கம் வரை கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் தினமும் புதிய உச்சத்தை கண்டு வந்த வங்கதேசத்தில் சமீப வாரங்களாக புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. மேலும், அங்கு நோய்த்தொற்று பாதிப்பு இருமடங்காகும் காலம் 28 நாட்களாக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நோய்த்தொற்று இருமடங்காகும் காலம் அதன் அண்டை நாடுகளிலேயே குறைந்த அளவாக, 41 நாட்களாக உள்ளது. ஆனால், அரசின் அதிகாரபூர்வ தரவின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் முன்வைக்கப்படுகின்றன.
மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நேபாளம் மற்றும் இலங்கையில் மிகவும் குறைந்த அளவில் ஒட்டுமொத்த நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. நேபாளத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முடக்க நிலை கட்டுப்பாடுகள் சுமார் 100 நாட்கள் நீடித்தன. அந்த காலகட்டத்தில், இந்தியாவுடனான எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களிலேயே அதிகளவில் நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், நேபாளத்தில் சமீப நாட்களாக நோய்த்தொற்று பரவல் குறைவாகப் பதிவாவதற்கு அங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாதது காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.