Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் ஊரடங்கு: உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து அனுப்பும் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

Advertiesment
கொரோனா வைரஸ் ஊரடங்கு: உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து அனுப்பும் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
, புதன், 20 மே 2020 (14:56 IST)
உத்தரப்பிரதேசத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை காங்கிரஸ் சார்பில் தருவதாக பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன. ஒரு கட்டத்தில் கோபமான பிரியங்கா காந்தி, “நாங்கள் அனுப்பும் பேருந்துகளில் உங்கள் கட்சியின் கொடியை வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகளை அனுமதியுங்கள்" என கூறி இருந்தார்.

பின்னர், உத்தர பிரதேச அரசு காங்கிரஸின் உதவியை ஏற்றுக் கொண்டது. சரி. இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? பிபிசி இருதரப்பிலும் பேசியது.

பேருந்துகள் ஏற்பாடு

உத்தரப்பிரதேசத்தில் ஆங்காங்கே சிக்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது ஊர்களுக்குக் கொண்டுசேர்க்க ஆயிரம் பேருந்துகளைத் தருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உ.பி. அரசு, ஆயிரம் பேருந்துகள் பற்றிய விவரங்களைத் தரும்படி சொன்னது. பிறகு, அந்தத் தகவலை காங்கிரஸ் தங்களுக்குத் தரவில்லை என அரசு குற்றம்சாட்டியது. ஆனால், பேருந்து, அதன் ஓட்டுனர் உள்ளிட்ட விவரங்கள் திங்கட்கிழமை இரவே உ.பி. அரசிடம் தரப்பட்டுவிட்டதாக பிரியங்காவின் செயலர் சந்தீப் சிங் தெரிவித்தார்.

“எல்லாப் பேருந்துகளைப் பற்றிய விவரங்கள், ஃபிட்னஸ் சான்றிதழ், ஓட்டுனர்களின் விவரம், அவர்களது டிரைவிங் லைசன்ஸ் விவரம் ஆகியவற்றோடு தர வேண்டுமென திங்கட்கிழமை சொன்னார்கள். திங்கட்கிழமை இரவு 11.40 மணிக்கே இந்த விவரங்களை அளித்துவிட்டோம். எங்களுக்கு வந்த பதில் மின்னஞ்சலில், அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் இந்த விவரங்களை லக்னோவின் ஆட்சியரிடம் அளித்து, பேருந்துகளையும் அவரிடம் கையளிக்க வேண்டுமெனச் சொல்லப்பட்டிருந்தது" என்கிறார் பிரியங்காவின் செயலர்.

பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் மிஸ்ரா, “நாங்கள் பேருந்துகளை அனுப்பிவிட்டோம். பேருந்துகள் அனுமதிக்காக ஆக்ராவில் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஆக்ரா நிர்வாகம் மேலிடத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்கிறது,” என்றார்.

லக்னோவுக்கு அனுப்புங்கள்

இந்த நிலையில்தான் பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்பும்படி உத்தரப் பிரதேச அரசு கூறியது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்ப காங்கிரஸ் மறுத்துவிட்டது. மேலும், தேவையில்லாமல் பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்பச் சொல்லாதீர்கள் என கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றும் மாநில கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டது.
webdunia
அனுமதிபாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, காஸியாபாதுக்கும் நோய்டாவுக்கும் 500 பேருந்துகளை அனுமதிப்பதாக கூடுதல் தலைமைச் செயலர் அவினேஷ் அவஸ்திகூறினார்.
பேருந்துகளை சோதனை செய்தே பிறகே, அதாவது பேருந்தில் ஆர்.சி, இன்சுரன்ஸ் ஆகிய அனைத்தையும் சோதனை செய்த பிறகே அனுமதிப்போம் எனக் கூறியது.

குற்றச்சாட்டு

இந்த சூழலில், காங்கிரஸ் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தியது பாரதிய ஜனதா கட்சி. பேருந்தின் எண்கள் போலியானவை. சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களுடையவை என்று கூறியது.

அமைச்சர் சித்தார்த்நாத் சிங், “ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். காங்கிரஸ் அனுப்பிய பல வாகனங்களின் எண்கள் போலியானவை,” என்றார்.

சில பேருந்துகளில் இதுபோல மாறுபாடுகள் இருக்கலாம் என்பதால்தான் ஆயிரம் பேருந்துகளுக்குப் பதிலாக 1,100 பேருந்துகளை தாங்கள் அனுப்புவதாகவும் வேண்டுமென்றே பா.ஜ.க. இதில் அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
நேற்று இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் குறிப்பில், "காங்கிரஸ் ஏற்பாடு செய்த 1049 பேருந்துகளில் 879 பேருந்துகளின் சான்றிதழ்கள் சரியானவை எனத் தெரியவந்துள்ளது. இருந்தபோதும் உ.பி. நிர்வாகம் ஐநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளை ஆக்ரா எல்லையில் நிறுத்தியுள்ளது. சான்றிதழ் சரியாக உள்ள 879 பேருந்துகளை உள்ளே அனுமதியுங்கள். மேலும் 200 பேருந்துகளையும் சான்றிதழ்களையும் நாளை அனுப்புகிறோம்" என்று கூறியிருந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு !