Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: இந்த வேகத்தில் சென்றால் எப்போது முடியும்?

Webdunia
சனி, 8 மே 2021 (11:45 IST)
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவின் நம்பிக்கை, இப்போது தடுப்பூசியின் மீதே உள்ளது.
 
ஒன்றிய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பலருக்குத் தடுப்பூசி போடுவது கடினமாகி வருகிறது.
 
பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 20 அன்று, மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது பெரிய அலையுடன் போராடும் இந்திய மக்களுக்கு இந்த அறிவிப்பு ஓர் ஆறுதலை அளித்தது.
 
ஆனால் மே 1க்கு முன்பே, இந்தத் தடுப்பூசித் திட்டத்துக்கான முழுமையான ஏற்பாடுகள் நிறைவடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், போதுமான அளவு தடுப்பூசிகள் இன்னும் கிடைக்காததால் மே 1 முதல் மருத்துவமனைகளுக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
டெல்லி அரசு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யவில்லை என்று கூறியிருந்த நிலையில், ஏப்ரல் 30 அன்று, டெல்லியில் உள்ள ஒரு சில பெரிய தனியார் மருத்துவமனைகள், தங்களிடம் தடுப்பூசி கையிருப்பு கிடைத்துள்ளதாகவும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கலைத் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தன.
 
மே 1ஆம் தேதி காலையில், டெல்லியின் முக்கிய தனியார் மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால் முதல் நாளின் இறுதியில், நாடு முழுவதிலும் 18 முதல் 44 வயது வரையிலானவர்கள் 84,599 பேருக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி கிடைத்தது.
 
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநில அரசுகள், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் அளவிற்குக்கு போதுமான தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளன.
 
கோவின் தளத்தில், தடுப்பூசிக்குப் பதிவு செய்த பிறகும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி பெற நேரம் ஒதுக்கப்படவில்லை.
 
மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு 900 முதல் 1250 ரூபாய் வரை மக்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன, ஆனால் கையிருப்பு இல்லாததால், இந்தத் தனியார் மருத்துவமனைகளும் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளையே வழங்க முடிகிறது.
 
தடுப்பூசி விஷயத்தில், திறந்த சந்தைக் கொள்கையைக் கடைபிடிப்பது சரியானதல்ல என்று புகழ்பெற்ற இதயநோய் நிபுணரும் மேதாந்தா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் நரேஷ் த்ரேஹன் கூறுகிறார்.
 
டாக்டர் த்ரேஹன் மேலும் கூறுகையில், "விலையை நிர்ணயித்து அரசாங்கம் தடுப்பூசியை வாங்குகிறது. தனியார் மருத்துவமனைகள் அதை அரசாங்கத்திடமிருந்து வாங்குகின்றன. மக்கள் தடுப்பூசியைத் தங்களுக்குத் தெரிந்தவர்களின் மூலமோ அதிக பணம் கொடுத்தோ தாங்களே வாங்கிக் கொள்ளும் நிலை வரும். இது நல்லதல்ல," என்று தெரிவிக்கிறார்.
 
தனியார் துறையை இதில் அனுமதிப்பதை வரவேற்கிறார். ஆனால் தனியார் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒன்றிய அரசு வாங்கித் தனியார் துறைக்கு அந்த விலையில் கொடுக்க வேண்டும் என்றும் அதுதான் நியாயமாக இருக்கும் என்றும் அனைவருக்கும் ஒரே விலையில் தடுப்பூசி கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
 
எத்தனை தடுப்பூசி மருந்துகள் தேவை?
இந்தியாவில், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை 16 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இந்த வரையறையில் வரும் இந்த 44 கோடி மக்களுக்கு, 72 கோடி தடுப்பூசிகள் இன்னும் தேவைப்படுகின்றன, ஏனெனில் 44 கோடி மக்களுக்கு 88 கோடி டோஸ் மொத்தத்தில் தேவைப்படும்.
 
18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடிக்கு அருகில் உள்ளது, இதற்காக 124 கோடி டோஸ் தேவைப்படும்.
 
18 வயதுக்குட்பட்டவர்களைத் தவிர்த்து மொத்தம் 106 கோடி பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். அடுத்த ஒரு வருடத்தில் இந்த 106 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்தாலும் கூட, ஒவ்வொரு நாளும் சுமார் 54 லட்சம் தடுப்பூசிகளைப் போட்டாக வேண்டியிருக்கும்.
 
தற்சமயம், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 முதல் 25 லட்சம் தடுப்பூசிகள்தான் போடப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் குறைகிறது. உதாரணமாக, மே 2 ஞாயிற்றுக்கிழமை. அன்று நாடு முழுவதிலும் 12.10 லட்சம் தடுப்பூசிகளே போடப்பட்டன. வார இறுதி நாட்களில், தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு பல வாரங்களாகவே காணப்படுகிறது.
 
70 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் `ஹெர்ட் இம்யூனிட்டி` பெறுவார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இந்த 106 கோடி பேரில் குறைந்தது 74 கோடி பேருக்கும் ஒரு வருடத்தில் இரண்டு டோஸ்களும் போட, ஒவ்வொரு நாளும் குறைந்தது, 40 லட்சம் பேருக்கு நிச்சயமாகத் தடுப்பூசி போடப்பட வேண்டும். இதன்படி, ஒவ்வொரு மாதமும் 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட வேண்டியிருக்கும்.
 
தடுப்பூசி இயக்கம் எப்படி இயங்குகிறது ? 
 
இந்தியாவில் ஜனவரியில் தடுப்பூசித் திட்டம் தொடங்கியதிலிருந்து மே 4 காலை வரை மொத்தம் 15.89 கோடி அளவு தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.
 
இவற்றில் 12.92 கோடி முதல் டோஸ் மற்றும் 2.97 கோடி இரண்டாவது டோஸ் ஆகும். பல மாநிலங்களில், முதல் டோஸ் பெற்றவர்கள் இரண்டாவது டோஸுக்காக காத்திருக்கிறார்கள், ஆனால் தடுப்பூசி இல்லாததால், இரண்டாவது டோஸ் தாமதமாகிறது.
 
முன்பு இயங்கி வந்த தடுப்பூசி விநியோக முறையை மாற்றியிருக்க வேண்டியதில்லை என்று டாக்டர் நரேஷ் த்ரேஹன் கூறுகிறார். "தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும், அரசாங்கத்தின் சுமையை குறைக்க வேண்டும் என்றால், இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் வெளிச் சந்தையில் கிடைப்பதால், புறவாசல் வழியாக மருந்து பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள், அடுத்த டோஸுக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு ஒரு தீர்வு காணப்படவேண்டியது மிகவும் அவசியம்." என்பது அவர் கருத்து.
 
நாட்டில் தடுப்பூசித் தட்டுப்பாடு இல்லை என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடர்ந்து பல முறை கூறிவிட்டார். இதுவரை மாநிலங்களுக்கு எத்தனை இலவச தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, மாநிலங்களிடம் எத்தனை டோஸ் மிச்சம் உள்ளது என்பதை ஒன்றிய அரசு அன்றாடம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
 
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட 10 கோடி டோஸ்களுக்கான ஆர்டரில், மே 3 வரை, 8.74 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிடைத்து விட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இதேபோல், பாரத் பயோடெக்கிற்கு வழங்கப்பட்ட இரண்டு கோடி கோவாக்சின் ஆர்டரில், 88.13 லட்சம் டோஸ் மே 3 வரை வந்திருக்கிறது.
 
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு 11 கோடி கோவிஷீல்ட் மற்றும் ஐந்து கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது.
 
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு 16 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்று வைத்துக்கொண்டாலும், இந்த மூன்று மாதங்களுக்கு மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூட்டாக 200 மில்லியன் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டியிருக்கும்.
 
ஒவ்வொரு நாளும் 40 லட்சம் தடுப்பூசிகள், ஒவ்வொரு மாதமும் 12 கோடி தடுப்பூசிகள் அல்லது அடுத்த மூன்று மாதங்களில் 36 கோடி தடுப்பூசிகளை வழங்குவது என்று இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி வழங்கும் பணி முடிவடையும்.
 
உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளதா?
சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை மே மாதத்தில் மொத்தம் ஒன்பது கோடி தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்படும், மீதமுள்ளவை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படும்.
 
சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை மத்திய அரசுக்கு ஒரு டோஸ் ரூ .150 என்ற அளவில் வழங்கி வருகின்றன. மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளன.
 
சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ .300 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ .600 என்ற விலையிலும் விற்பனை செய்கிறது.
 
அதே நேரத்தில், பாரத் பயோடெக் இந்தத் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு 1200 ரூபாய்க்கும் விற்க முடிவு செய்துள்ளது.
 
இந்த இரண்டு நிறுவனங்களும் இது வரை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் எத்தனை டோஸ்களை வழங்கியுள்ளன என்று பிபிசி அறிய விரும்பியது. தினசரி அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் எத்தனை தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறார்கள் என்றும் அவர்களிடம் கேட்கப்பட்டது. எந்தெந்த மாநில அரசுகள் மற்றும் எந்த தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் வழங்கியுள்ளன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இந்த கேள்விகளுக்கு சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றிலிருந்து எந்த பதிலும் இல்லை.
 
டாக்டர் த்ரேஹன் இன்னமும் காலம் கடந்துவிடவில்லை என்றே நம்புகிறார். "இந்த விஷயத்தில் சற்று நிதானித்து, மறுபரிசீலனை செய்வது நல்லது என்பது ஒன்றிய அரசுக்கு எனது கோரிக்கையாகும். பிறகு ஒரு வாரத்தில் மீண்டும் இதை வேகப்படுத்தலாம். மக்களிடையே இப்போது தங்களுக்குத் தடுப்பூசி கிடைக்குமா கிடைக்காதா? எப்போது கிடைக்கும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன. இந்தப் பெருந்தொற்று சூறாவளியாகப் பரவி வரும் இத்தருணத்தில் இந்த அச்சம் ஏற்படுவது நல்லதல்ல." என்கிறார் அவர்.
 
கடந்த சில நாட்களாக, இந்தியாவில் கோவிட்டின் புதிய தொற்றுகளின் பதிவுகள், தொடர்ந்து 3-4 லட்சத்தை எட்டி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 
மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் இல்லாததால் பாதிக்கப்பட்டு வரும் மக்களின் ஒரே நம்பிக்கை இப்போது தடுப்பூசியாகத் தான் உள்ளது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி வழங்கல் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தைப் பார்த்தால், சாதாரண மக்களுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments