கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் மரணிப்போரின் உடல்கள் தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிற கட்டளைச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 222ஆம் அத்தியாயமான தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டம்' எனும் தலைப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த வர்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும். இதற்கு முந்தைய அறிவிப்பில், இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் அல்லது மரணித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல் வேண்டுமென கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்டது.