Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரலாகும் நெருக்கமான படங்களால் சர்ச்சை - பணிய மறுக்கும் கேரள ஜோடி பிபிசிக்கு பேட்டி

Advertiesment
வைரலாகும் நெருக்கமான படங்களால் சர்ச்சை - பணிய மறுக்கும் கேரள ஜோடி பிபிசிக்கு பேட்டி
, திங்கள், 2 நவம்பர் 2020 (10:25 IST)
திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பில் நெருக்கமாகத் தோன்றும் படங்களை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய கேரள இளம் ஜோடி, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது.

அந்த படங்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவது, மிரட்டல்களுக்கு அடிபணிவது போன்றதாகும் என்று அந்த இளம் ஜோடி, பிபிசிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளது.

இவர்களது நெருக்கமான படங்கள் சமூக ஊடகத்தில் வைரலானதோடு, இணைய அவதூறுகளுக்கும் இலக்கானது.

அந்த புகைப்படங்களில் லெக்ஷ்மியும் ஹ்ருஷி கார்த்திக்கும் பசுமையான தேயிலைத் தோட்டத்தில், வெள்ளை மென்பட்டுப் போர்வையில் சிரித்துக் கொண்டும், தழுவியபடியும், ஒருவரை ஒருவர் துரத்தியபடியும் காட்சியளிப்பார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முடியாததை ஈடுகட்டும் வகையில், திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பை நினைவில் நிற்கும் வகையில் சிறப்பாக நடத்திக்கொள்வது என்று முடிவு செய்தனர் இந்த இணையர்.

இவர்களின் திருமணம், மணமகள் ஊரான கொல்லத்தில் உள்ள ஒரு கோயிலில் செப்டம்பர் 16ம் தேதி நடந்தது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தங்கள் வீட்டில் இருந்து தொலைபேசி வழியாக பேசிய லெக்ஷ்மி "எங்களுடைய திருமணம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம். அதே நேரம் ஒரு வகையில் காதல் திருமணம் கூட. எங்களுடைய குடும்பத்தார் ஒருவரை ஒருவருக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு நாங்கள் சந்தித்து காதலில் விழுந்தோம்" என்கிறார்.

webdunia

கார்த்திக் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். லெக்ஷ்மி தற்போதுதான் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

"மகிழ்ச்சியாகவும், குறும்புகளோடும் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக 50 பேர் கலந்து கொள்வதற்கு மட்டுமே போலீஸ் அனுமதி அளித்தது. எனவே நெருக்கமான நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் பங்கேற்றனர்" என்று லெக்ஷ்மி கூறினார்.

விமரிசையாக திருமணம் நடத்த முடியாத குறையைப் போக்கும் வகையில் நினைவில் நிற்பது போல திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள் முடிவு செய்தனர். வழக்கமான படப்பிடிப்புகளுக்குப் பதில் இத்தகைய சிறப்பான வெளிப்புறப் படப்பிடிப்புகள் கேரளம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் ஒரு பாணியாக மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்கின் நண்பரும் புகைப்படக் கலைஞருமான அகில் கார்த்திகேயன்தான் இந்த சர்ச்சையாக மாறிய படங்களை எடுத்தவர்.

இந்தப் படப்பிடிப்பில் இந்த படங்களை எடுத்து முடிக்க சில மணி நேரங்களே ஆனதாக பிபிசியிடம் தெரிவித்தார் அகில்.

பசுமையான தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்த இந்த ஜோடி, இந்தப் புகைப்படங்களின் அடையாளமாக மாறிப்போன மென்பட்டுப் போர்வைகளை ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்து படப்பிடிப்புக்காக இரவல் வாங்கியது.

"இந்தப் படப்பிடிப்பே இன்பமயமாக இருந்தது. படிப்பிடிப்பு முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தோம். அது உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அது எங்கள் தேனிலவுப் பயணத்தின் ஒரு பகுதி. புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால் நாங்கள் சுதந்திரமாக உணர்ந்தோம். இந்தப் படப்பிடிப்பு இத்தனை சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கவில்லை" என்கிறார் லெக்ஷ்மி.

"படங்களை எடுத்த அகில், அவற்றை சில நாள்களில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியபோது சிக்கல் தொடங்கியது. படங்கள் அசிங்கமாக, வெட்கக் கேடாக இருந்ததாக, இணையத்தில் தொந்தரவு செய்தவர்கள் கூறினார்கள். அந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாகவும், ஆணுறை விளம்பரத்துக்குப் பொருத்தமானவை என்றும் அவர்கள் அவதூறு செய்தார்கள். சிலர் அறை அமர்த்திக்கொள்ளும்படி அறிவுரை செய்தார்கள். இரண்டு நாள்களுக்கு ஓயாமல் வெறுப்பை உமிழும் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. நாங்கள் அம்மணத்தைக் காட்டுவதாக குற்றம்சாட்டிய சிலர், இந்த போர்வைக்குப் பின்னே நாங்கள் ஆடை அணிந்திருக்கிறோமா என்றும் கேட்டனர். கவனத்தைக் கவருவதற்காகவும், பிரபலம் அடைவதற்கும் நாங்கள் இப்படிச் செய்வதாகவும் அவர்கள் அவதூறு செய்தார்கள்" என்று சொன்னார் லெக்ஷ்மி.

பெரும்பாலான வசைகள், தனது கணவரை விடவும் தன் மீதே பொழியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தம்மை ஆபாசப் படங்களில் நடிக்கும்படி சிலர் கூறினார்கள் என்று அவர் கூறுறார். இப்படி வசைபாடியவர்களில் பெண்ணும் ஒருவர் என்கிறார் அவர்.

"ஒப்பணை செய்துகொள்ளாத என் பழைய படங்களை ஒப்பிட்டு அந்தப் படங்களில் நான் அசிங்கமாக இருப்பதாக அவதூறு செய்தனர்" என்கிறார் லெக்ஷ்மி.

ஆனால், சில நாள்களுக்குப் பிறகு இணைய அவதூறு பேர்வழிகளை மக்கள் விமர்சிக்கத் தொடங்கினர். லெக்ஷ்மி - கார்த்திக் இணையருக்கும் ஆதரவைத் தெரிவித்தனர்.

படங்கள் அற்புதமாகவும், அழகாகவும் இருப்பதாக பலர் கருத்துத் தெரிவித்ததுடன் மோசமான விமர்சனங்களை புறக்கணிக்கும்படி இந்த இணையருக்கு அறிவுரை கூறினர்.

திருமணமான புதிதில் தம்பதி ஒருவரது கையை ஒருவர் பிடிப்பதற்கே கேலி செய்த காலம் இருந்தது என்பதை நினைவுகூர்ந்த ஒரு பெண், அவதூறு செய்கிறவர்களை புறக்கணித்து மகிழ்ச்சியோடு இருக்கும்படி அறிவுரை கூறினார்.

"ட்ரோல் எனப்படும் அவதூறுகளை செய்பவர்கள் யார் என்றோ, எங்களை விமர்சிப்பவர்கள் யார் என்றோ எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களையும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், ஆதரவான அந்த குரல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தன" என்கிறார் லெக்ஷ்மி.

கண்ணுக்குத் தெரியாமல் இணையத்தில் அவதூறு செய்கிறவர்களை மட்டுமல்ல, இது மாதிரி படப்பிடிப்பை ஏற்றுக்கொள்ளாத பழமைவாத உறவினர்களையும் இந்த இணையர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

"தொடக்கத்தில் எங்கள் பெற்றோர்கூட அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு நாங்கள் ஏன் இப்படி செய்ய விரும்பினோம் என்பதை அவர்களுக்கு விளக்கினோம். பிறகு அவர்கள் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், எங்கள் உறவினர்கள் பலர் நாங்கள் மேலை நாடுகளை காப்பி அடிப்பதாக குற்றம்சாட்டினார்கळ्ள்," என்கிறார் லெக்ஷ்மி.

"அவர்கள் போன் செய்து இதெல்லாம் தேவையா? என்று கேட்டார்கள். நமது பண்பாட்டை மறந்து விட்டீர்களா என்றும் கேட்டார்கள்". அந்தப் புகைப்படங்களை அகற்றும்படி பலர் வலியுறுத்தினார்கள். பலர் லெக்ஷ்மியையும், ஹ்ருஷி கார்த்திக்கையும் குடும்ப வாட்சாப் குழுக்களில் இருந்து நீக்கினார்கள். ஆனாலும், அந்தப் படங்களை அகற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக இந்த இணையர் கூறுகின்றனர்.

"அப்படி நாங்கள் அகற்றினால், நாங்கள் குற்றம் செய்ததாக நாங்களே ஒப்புக்கொண்டதாக அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை. படப்பிடிப்பின்போது மென்பட்டுப் போர்வைக்குள்ளே நாங்கள் ஆடை அணிந்தே இருந்தோம்" என்கிறார் லெக்ஷ்மி.

"ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்கொள்வது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது பழகிவிட்டது. சமுதாயம் அப்படித்தான் இருக்கிறது. அதில் நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்," என்று கூறுகிறார் லெக்ஷ்மி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அனுமதி கேட்டப்போ தரலை; பாஜகவுக்கு தராங்க! – சீமான் சாடல்