அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அந்நாட்டின் முக்கிய நகரமான ரோட்டர்டாமுக்கு பெஸோஸ் செல்லவிருக்கிறார்.அங்கு அவர் சொகுசு படகு மூலம் நகரத்தை சுற்றி மகிழத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வருகை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
ரோட்டர்டாம் நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க கோனிங்ஸ்ஹேவன் பாலத்தைத் தகர்க்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளதையடுத்தே சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெஃப் பெசோஸ் இந்த சொகுசு படகின் மூலம் ஆற்றில் வெகுதூரம் பயணிக்க வகை செய்யும் வகையில் இந்தப் பாலம் தகர்க்கப்படுவதாகவும் இதற்கான முழுச் செலவையும் பெஸோஸ் ஏற்பார் என்றும் நகர நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெசோஸின் இந்த பயணத்திற்காக கட்டப்பட்டிருக்கும் சொகுசு படகு அளவில் மிகப் பெரியது, இதன் காரணமாக அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலத்தின் கீழ் செல்ல முடியாது. இந்த சொகுசு விசைப்படகின் நீளம் 127 மீட்டர் மற்றும் உயரம் 40 மீட்டர். இதனை நெதர்லாந்தின் ஓஷன்கோ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தத் தகவலை நெதர்லாந்தின் ஊடகங்கள் இந்த வாரம் தெரிவித்தன.
40 மீட்டர் உயரம் கொண்ட இந்த சொகுசுப் படகு எளிதில் செல்லும் வகையில், உள்ளூரில் 'டி ஹெஃபே' என அழைக்கப்படும் இந்தப் பாலத்தின் நடுப்பகுதி தற்காலிகமாக அகற்றப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சை ஏன்?
எஃகினால் செய்யப்பட்ட இந்த கோனிங்ஸ்ஹெவன் பாலத்தின் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்பு தான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம். இது 145 ஆண்டுகளுக்கு முன்பு 1877 இல் கட்டப்பட்டது. இந்தப் பாலம் ரோட்டர்டாமின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
2014 மற்றும் 2017 க்கு இடையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இந்தப் பாலம், விரிவாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது இந்த பாலம் உடைக்கப்படாது என அதிகாரிகள் கூறினர்.
ரோட்டர்டாம் நகர சபையின் முடிவை பல தலைவர்கள் விமர்சிக்கின்றனர். உள்ளூர் தலைவர் ஸ்டீபன் லூயிஸ் ட்விட்டரில், 'எங்களின் அழகான தேசிய நினைவுச்சின்னத்தை இடிப்பது கண்டனத்துக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.
இந்த படகை உருவாக்குவதன் மூலம், பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதைக் கருத்தில் கொண்டே இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மீண்டும் இது பழையபடி அமைக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது என்று ஏ எஃப் பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
ரோட்டர்டாமின் அதிகாரியான மார்செல் வால்ராவென்ஸ், இந்த சொகுசு படகை வேறு எங்கும் உருவாக்குவது சாத்தியமில்லை என்று ஒரு செய்தி இணையதளத்தில் தெரிவித்தார். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
மேலும் ரோட்டர்டாம் "ஐரோப்பாவின் கடல்சார் தலைநகரம்" என்று அழைக்கப்படுவதை அவர் நினைவுபடுத்தினார்.
ரோட்டர்டாம் துறைமுகம் தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம். இது உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இதில் கப்பல் கட்டும் தொழில் மிகப் பிரசித்தம்.
கோடையில் பாலம் இடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மார்செல் வால்ராவென்ஸ் செய்தித்தாள் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். எனினும் இரண்டே வாரங்களில் இதன் நடுப்பகுதி அகற்றப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த சொகுசுப்படகு பற்றிய விரிவான தகவல்கள் கடந்த ஆண்டு முதன்முதலில் வெளியாயின. எனினும், இது யாருக்காக உருவாக்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டில், ஜெஃப் பெஸோஸ் குறித்து வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க்கின் வாழ்க்கை வரலாறு, இந்த கப்பல் அமேசானுக்காக உருவாக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியது.
Y721 என்று பெயரிடப்பட்ட இந்க் படகு, உலகின் மிகப்பெரிய படகாக இருக்கும் என்றும் இது, பல நவீன மற்றும் ஆடம்பரமான அம்சங்களை கொண்டுள்ளது என்றும் போட் இன்டர்நேஷனல் கூறுகிறது.
ஃபோர்ப்ஸின் மதிப்பீட்டின்படி, ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு தற்போது 175 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். அவர் உலகின் மூன்றாவது பணக்காரர் ஆவார். அமேசான் நிறுவனம் தவிர, 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் மற்றும் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் 'ப்ளூ ஆரிஜின்' நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளரும் ஆவார் இவர்.