Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனா

அமெரிக்காவின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனா
, வெள்ளி, 5 ஜூன் 2020 (10:29 IST)
அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் புருவங்களை உயர்த்தியுள்ள நிலையில், அதை சீனா மட்டும் வேறுபட்ட பார்வையில் ஆர்வத்துடன் உற்றுநோக்கி வருகிறது.

கடந்தாண்டு ஹாங்காங்கில் நடந்த ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்களின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது  அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது சீனா.
 
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டம் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் சீன ஊடகங்கள், அங்கு நிலவும்  அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
 
அதுமட்டுமின்றி, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீன அரசு, அமெரிக்காவில் உள்ள இன வேறுபாடு மற்றும் அநீதியைக் கண்டித்து மற்ற  நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்பதுடன், இதன் மூலம் சர்வதேச அளவில் ஒரு பொறுப்புள்ள உலகளாவிய தலைவராக தன்னை சித்தரிக்க முயற்சிக்கிறது.
 
சீன செய்தி ஊடகங்களின் பகடி - 'ஓர் அழகான காட்சி'
 
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, அமெரிக்காவின் உள்நாட்டு அமைதியின்மையை "ஃபெலோசியின் அழகிய நிலப்பரப்பு" என்று தனது செய்தியில்  குறிப்பிட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி ஃபெலோசி, ஹாங்காங் போராட்டங்களை "பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப்பதாக" கூறியதை இந்த செய்தியில் நினைவுகூர்கிறது அந்த ஊடகம்.
 
மற்றொரு சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின், அமெரிக்க அரசியல்வாதிகள் இப்போது "தங்கள் சொந்த  ஜன்னல்களிலிருந்து இந்த அழகிய காட்சியை அனுபவிக்க முடியும்" என்று தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
 
சீனாவால் "பயங்கரவாதத்தின் அறிகுறிகளைக் காட்டும் கலகக்காரர்கள்" என்று வகைப்படுத்தப்பட்ட ஹாங்காங் போராட்டக்காரர்களை ஆதரித்த ஃபெலோசி  உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை சீனா நீண்டகாலமாக கண்டித்துள்ளது.
 
ஹாங்காங் சீன பிரதேசமாக இருந்தாலும், அங்கு 'ஒரு நாடு; இரு அமைப்பு முறை' எனும் கோட்பாட்டின்கீழ், சில தன்னாட்சி அதிகாரங்களை ஹாங்காங்  பெற்றுள்ளது.
 
99 ஆண்டுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997இல் சீனாவுடன் இணைந்தது.
 
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொது விவகாரங்களுக்கான மில்லர் மையத்தின் மூத்த பேராசிரியரான அய்ன் கோகாஸ், அமெரிக்காவும் சீனாவும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளால் தூண்டப்பட்ட உறுதியற்ற தன்மையை உள்நாட்டில் எதிர்கொண்டு வருவதாக கூறுகிறார்.
 
சீனா தனது சொந்த தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடுத்து நிலைக்கு கொண்டு செல்வதற்கு, தற்போது அமெரிக்காவில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை  பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
 
அமெரிக்காவின் "இரட்டை நிலைப்பாடு"அமெரிக்கா தனது உள்நாட்டில் நிலவரம் அசாதாரணமான சூழ்நிலையில், 'இரட்டை நிலைப்பாட்டை' கடைப்பிடிப்பதாக சீனா  மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
"அமெரிக்காவில் நடக்கும் கலவரத்தை, அங்குள்ள உள்ளூர் அரசாங்கங்கள் எப்படி கையாளுகின்றன என்பதை பாருங்கள். ஆனால், இதே மாதிரி ஹாங்காங்கில்  நடைபெற்ற போராட்டத்தின்போது, அமெரிக்கா எடுத்த நிலைப்பாடு குறித்து நமக்கு தெரியும்," என்று கூறுகிறார் ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவரான கேரி லாம்.
 
சீனா மற்றும் ஹாங்காங்கின் தலைவர்கள் கூறும் இதுபோன்ற கூற்றுகளை சமூக ஊடகங்களில் பகிரும் சீனர்கள், அமெரிக்காவை "இரட்டை நிலைப்பாடு கொண்ட  நாடு" என்று விமர்சித்து வருகின்றனர்.
 
குறிப்பாக, அமெரிக்க அரசு போராட்டங்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தேவைக்கு அதிகமான காவல்துறையினரை குவிப்பது, போராட்டக்காரர்கள் மற்றும்  நிகழ்விடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட ஜனநாயகத்துக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாக சீன  ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
 
ஜார்ஜியா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் மரியா ரெப்னிகோவா, அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த சீன அரசு ஊடகங்களின் தீவிரம்  முன்னெப்போதுமில்லாத ஒன்று என்று கூறுகிறார்.
 
"இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் சீன ஊடகங்கள் அதை உருவாக்கவில்லை" என்று பேராசிரியர் ரெப்னிகோவா கூறுகிறார். எனினும்,  அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களின் கோர முகத்தை காட்டும் சீன ஊடகங்கள், அதை ஹாங்காங் காவல்துறையினரின் இயல்புக்கு மாறான பக்கத்துடன் ஒப்பிடுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

webdunia
இனவெறிக்கு கண்டனம் தெரிவிக்கும் சீனா
 
உள்நாட்டு அமைதியின்மையை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனா, உலக அரங்கில் தன்னை மிகவும் பொறுப்பான நாடாக நிலைநாட்டிக்கொள்ள முயற்சிக்கிறது.
 
அமெரிக்காவில் நிலவி வரும் இனவெறி மற்றும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட  அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பதிவிட்ட ட்வீட்களை சீன அரசு அதிகாரிகள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
 
"என்னால் மூச்சுவிட இயலவில்லை" என்று ட்வீட் செய்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், ஹாங்காங் விவகாரத்தை சீனா  கையாள்வது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் முன்வைத்த விமர்சனங்களின் திரைப்பிடிப்புகளை பதிவிட்டிருந்தார்.
 
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலின்போது, தெற்கு சீன நகரமான குவாங்சோவில் ஆஃப்ரிக்காவை சேர்ந்தவர்களிடம் பாகுபாடு காட்டப்பட்டதாகவும்,  அவர்கள் விதிகளுக்கு புறம்பாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மன்னிப்பு ஏதும் கேட்காத சீன அரசு, இதில் 'சில தவறான புரிதல்கள்' உள்ளதாக மட்டும் விளக்கமளித்தது.
 
மேலும், சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறை முகாம்களில் ஆயிரக்கணக்கான உய்குர் மற்றும் பிற முஸ்லிம்  சிறுபான்மையினரை அந்த நாட்டு அரசு தடுத்து வைத்திருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபுதாபி வரை பறக்கும் அம்பானியின் வெற்றிக்கொடி: ஜியோ மீது அடுத்த முதலீடு!