Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:25 IST)
கார் விபத்து ஒன்றில் பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் குழந்தை வாடகைத் தாய் மூலம் பிறந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
2013ஆம் ஆண்டு உயிரிழந்த அந்தத் தம்பதிகள் செயற்கை கருவூட்டல் மூலம் உண்டாக்கிய தங்கள் கருக்கள் பலவற்றையும் உறைநிலையில் சேமித்து வைத்திருந்தனர்.
 
அவர்கள் விபத்தில் இறந்தபின் அந்தத் தம்பதிகளின் பெற்றோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்தக் கருக்களை பயன்படுத்த அனுமதி பெற்றனர். லாவோஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வாடகைத் தாய் ஒருவர் அந்தக் கரு ஒன்றின் மூலம் ஒரு ஆண் குழந்தையை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றெடுத்ததாக ’தி பெய்ஜிங்’ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதற்கு முன்பு இத்தகைய சம்பவம் சீனாவில் நடந்ததில்லை என்பதால், அந்தத் தம்பதிகள் எவ்வாறு சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது குறித்தும் அந்த நாளிதழ் விவரித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் அந்தக் கருக்கள் நாஞ்சிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரி குளிரில் ஒரு திரவநிலை நைட்ரஜன் புட்டியில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
 
அந்தத் தம்பதிகளின் பெற்றோருக்கு அந்த கருக்கள் மீதான உரிமை இருப்பதாக நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு அந்தக் கருக்களைப் பெறுவதற்கான உரிமை கிடைத்தபின்னும் சிக்கல் தீரவில்லை. வேறு ஒரு மருத்துவமனையில் அந்தக் கருக்களை சேமித்து வைப்பதற்கான வசதி இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டினால் மட்டுமே நாஞ்சிங் மருத்துவமனையில் இருந்து அவற்றைக் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உருவானது.
 
கருத்தரிக்க வைக்கப்படாத அந்தக் கருக்களை சேமித்து வைப்பதற்கு வேறு ஒரு மருத்துவமனையைக் கண்டறிவதில் இறந்த தம்பதியின் பெற்றோருக்கு சிரமம் உண்டானது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது சீனாவில் சட்டவிரோதமானது என்பதால், சீனாவுக்கு வெளியே வாடகைத் தாய் ஒருவரைத் தேடுவதே அவர்களுக்கு ஒரே வாய்ப்பாக இருந்தது.
 
தொழில் ரீதியிலான வாடகைத் தாய் முறை சட்டபூர்வமாக இருக்கும் லாவோஸ் நாட்டில் அந்தப் பிறக்கப்போகும் குழந்தையின் தாத்தா - பாட்டிகள் ஒரு வாடகைத் தாயைக் கண்டறிந்தனர்.அந்தக் கருக்களைச் சேமிக்கும் திரவநிலை நைட்ரஜன் புட்டியை ஏற்றுக்கொள்ள விமான நிறுவனங்கள் எதுவும் முன்வராததால், அதை சாலை மார்க்கமாக அவர்கள் லாவோஸ் கொண்டு சென்றனர்.
 
அங்கு ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தப்பட்ட அந்த கரு மூலம், சீனாவில் டிசம்பர் 2017இல் ஆண் குழந்தை பிறந்தது.தியான்சியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தையின் குடியுரிமையில் பிரச்சனை எழுந்தது. லாவோஸ் நாட்டிலிருந்து சுற்றுலா விசா மூலம் சீனா வந்திருந்தார் அந்த வாடகைத் தாய்.
 
அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை என்பதால், அக்குழந்தையின் தாத்தா - பாட்டிகள் அவர்களது டி.என்.ஏ மாதிரிகளைக் கொடுத்து அது தங்கள் பேரக்குழந்தைதான் என்றும், அக்குழந்தையின் பெற்றோர் சீனக் குடிமக்கள் என்றும் நிரூபிக்க வேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments