சென்னை நகரத்தின் நடுவில் சிக்கிக்கொண்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நீர்த்தேக்கமாக மாற்றவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் பெரும் அழிவை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
சதுப்புநிலத்தை நீர்த்தேக்கமாக மாற்றினால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை வெள்ளக்காடாகுவதை தடுக்கமுடியாது என்றும், தற்போது அங்கு உள்ள பறவைகள், விலங்குகள், அரியவகை தாவரங்களின் வாழ்விடமாக உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக்க முயல்வது அதன் பல்லுயிரின வளத்துக்கு சமாதி கட்டுவதற்கு ஒப்பானது என்கிறார்கள்.
2002 முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பற்றிய ஆய்வுகளை நடத்திவருவதோடு, கரண்ட் சயின்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் பள்ளிக்கரணை பற்றிய ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டவர் கேர் எர்த் (CARE EARTH) அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெயஸ்ரீ.
''சென்னை நகரத்தின் முக்கியமான வெள்ளநீர் வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது. முந்தைய காலங்களில் நில அபகரிப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை. சதுப்புநிலத்தின் ஒரு பகுதியை குப்பைமேடாக மாற்றினார்கள். அதோடு வெள்ளநீர் செல்லும் பாதையாக கண்ணகி நகர், செம்மஞ்சேரி இருந்தது. நகரத்தில் இருந்து அகற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இருப்பிடங்கள் அமைக்க அந்த பகுதியில் அரசே அடுக்குமாடி கட்டியது. அப்போதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. அதனை பொருட்படுத்தவில்லை என்பதால் தற்போது அந்த பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள நீர் தேங்குகிறது. தற்போது மேலும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நீர்தேக்கமாக மாற்றிவிட்டால், கடுமையான பாதிப்பை சென்னை சந்திப்பதில் சந்தேகம் இல்லை,'' என்கிறார் ஜெயஸ்ரீ.
பள்ளிக்கரணை சதுப்புநிலமாக ஏன் தொடரவேண்டும் என விளக்கிய அவர், ''சென்னை நகரத்தின் சுமார் 50க்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்களுக்கு வடிகாலாக இருப்பது பள்ளிக்கரணை என்பதால், இந்த இடத்தை நீர்தேக்கமாக மாற்றிவிட்டால், 2015ல் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் அதிக பாதிப்பை நாம் சந்திக்கவேண்டும்,'' என்கிறார்.
பள்ளிக்கரணையின் வளம் குறித்த ஆவணங்களை தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியுள்ளதை நினைவுகூர்ந்த ஜெயஸ்ரீ, தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள நீர்த்தேக்கம் என்ற திட்டத்திற்கு அறிவியல் பூர்வமான ஆய்வுகள் எப்போது நடத்தப்பட்டன என்று தெரிவிப்பதோடு அந்த ஆய்வை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டால் அதன் உண்மைத்தன்மை வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.
சதுப்புநிலத்தை நீர்த்தேக்கமாக மாற்றுவது சமாதி கட்டுவதற்கு சமம் என வாதிடுகிறது சுற்றுசூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. ஒரு காலத்தில் 6,000 ஹெக்டேருக்கு மேல் பரந்து விரிந்து பல்லுயிரின வளத்தின் உச்சமாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், அரசின் அலட்சியத்தாலும் தனியாரின் ஆக்கிரமிப்பாலும் இன்று வெறும் 600 ஹெக்டேர்களாகச் சுருங்கிப்போயிருக்கிறது என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் விமர்சித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டடுள்ள 2017 ம் ஆண்டு சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு சட்டவிதிகள் படி, பள்ளிக்கரணை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என கோருகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். ''பள்ளிக்கரணை மனிதரால் அமைக்கப்பட்ட ஏரியோ, நீர்நிலையோ அல்ல. மாறாக ஒரு செழிப்பு மிக்க வாழிடம். 65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையான பாம்புகள், 10 வகையான பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையான பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையான தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையான தாவரங்கள் என மொத்தம் 625க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்களுக்கு வாழிடமாக பள்ளிக்கரணை உள்ளது,'' என பட்டியலிடுகிறார் சுந்தர்ராஜன்.
மேலும் அவர், இந்தியாவின் மாசுபட்ட பெருநகரங்களிலொன்றின் அதிக மாசுபட்ட நீர்நிலையில் குறிப்பாகத் தினமும் 5,000 மெட்ரிக் டன்களுக்குமேல் மாநகராட்சிக் கழிவுகள் கொட்டப்படும் பள்ளிக்கரணையில் இவ்வுயிர்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா என கேள்வி எழுப்புகிறார். ''எந்த ஒரு உயிரியல் பூங்காவிலும்கூட இத்தனை அதிகப் பல்லுயிரின வளத்தைப் பார்க்க இயலாது. அதுமட்டுமின்றி சென்னையின் பெரும் நிலப்பரப்புக்கு வெள்ள வடிகாலாகவும் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் ஆதாரமாகவும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் திகழ்ந்து வருகிறது. இந்தியா முழுதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரின வளமிக்க 94 சதுப்புநிலங்களில் தமிழகத்தின் 3 இடங்களில் ஒன்றாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சிறப்பு பெறுகிறது. ஆழப்படுத்தி, காம்பவுண்ட் சுவர் எழுப்பி, மதகுகள் அமைத்துத் தண்ணீர் நிரப்ப பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னை கார்ப்பரேஷனின் தண்ணீர்த் தொட்டியல்ல. அது மனிதரால் அமைக்கப்பட்ட ஏரியோ நீர்நிலையோ அல்ல, பலவகையான உயிரினங்களின் வாழிடம்,'' என்கிறார்.
ஒரு சில பறவைகளின் தவிர்க்கமுடியாத வாழிடமாக பள்ளிக்கரனை விளங்குகிறது என்று கூறும் சுந்தர்ராஜன், ''அளவில் பெரிய உள்ளூர்ப் பறவையான சங்குவளை நாரை (Painted Stork) மற்றும் வலசைப் பறவையான பூநாரைகள் (Flamingo) போன்றவை நீந்த இயலாதவை; ஆழம் குறைவான நீரில் மட்டுமே வாழும் தகவமைப்பு பெற்றவை. சதுப்புநிலத்தை ஆழப்படுத்துவது இவ்வுயிரினங்களின் அழிவுக்கே வழிவகுக்கும். இதுபோன்ற எண்ணற்ற இந்த வாழிடத்துக்கேயான தகவமைப்பு பெற்ற உயிரினங்களின் இருப்பை தூர்வாரி ஆழப்படுத்துதல் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும்,'' என்கிறார்.