Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (20:54 IST)
சந்திரயான்-3 திட்டம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுக்கு பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியாவை தடம் பதிக்கச் செய்த சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் விஞ்சி புதிய பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
 
சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோ நிர்ணயித்த இலக்குகளை எல்லாம் ஏற்கனவே எட்டிவிட்டது. பிரக்யான் ரோவரில் அனைத்து கருவிகளும் அணைத்து வைக்கப்பட்டு உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விக்ரம் லேண்டர் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு புதிய பாய்ச்சலைக் கொடுத்துள்ளது.
 
அதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல்களை பகிர்ந்துள்ளது.
 
அதன்படி, ”சந்திரயான்-3 திட்டத்தின் இலக்குகளையெல்லாம் விக்ரம் லேண்டர் விஞ்சியுள்ளது. அந்த லேண்டரை தவளை போல் தாவிக் குதிக்கச் செய்யும் பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
 
கட்டளை கிடைத்ததும், அது என்ஜின்களை இயக்கி எதிர்பார்த்தபடியே 40 செ.மீ. உயரே எழுந்தது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் அது பாதுகாப்பாக தரையிறங்கியது.
 
இதன் முக்கியத்துவம் என்ன? விக்ரம் லேண்டரை மீண்டும் மேலேழச் செய்தது எதிர்காலத்தில் அங்கே ஆய்வு செய்து விட்டு பூமிக்கு திரும்புவதற்கும், மனிதர்களை அனுப்புவதற்கும் உத்வேகம் அளிக்கிறது.
 
அதில் உள்ள அனைத்து சாதனங்களும் நன்றாக இருக்கின்றன. சிறப்பாக செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு அதில் உள்ள ChaSTE, ILSA கருவிகள் மீண்டும் உள்ளே இழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன.” என்று இஸ்ரோ கூறியுள்ளது.
 
விக்ரம் லேண்டரைக் கொண்டு இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ள புதிய பரிசோதனை, அதன் முக்கியத்துவம் குறித்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.
 
விக்ரம் லேண்டரை தாவிக் குதிக்கச் செய்தது எப்படி என்பது குறித்துப் பேசிய அவர், "நாம் பூமியில் பந்தை மேல்நோக்கி விட்டெறிந்தால் அது சற்று தொலைவில் எவ்வாறு தரையில் விழுமோ அதுபோன்றதொரு நிகழ்வை நிலவில் இஸ்ரோ செய்துள்ளது. அதாவது, மேல்நோக்கி வீசப்பட்ட பந்து புவி ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி பரவளையப் பாதையில் எப்படி விழுகிறதோ அதேபோல், விக்ரம் லேண்டரும் தவளை போல் தாவிக் குதித்துள்ளது. இதில் நாம் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டிய 3 விஷயங்கள் இருக்கின்றன." என்று கூறினார்.
 
"முதலாவதாக, இந்த செயல்முறை முழுக்கமுழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தானியங்கி முறையில் நடந்துள்ளது. இஸ்ரோவில் இருந்து கட்டளை வந்தவுடன், விக்ரம் லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்க அதில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்களையே தற்போதும் இஸ்ரோ பயன்படுத்தியுள்ளது. லேண்டரின் 4 கால்களிலும் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்களை இயக்கி 40 செ.மீ. அளவுக்கு நிலவின் தரைப் பரப்பில் இருந்து விக்ரம் லேண்டர் மேலேழுந்துள்ளது. பின்னர் நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக, பூமியைப் போன்றே பரவளையப் பாதையில் பயணித்து, அதாவது இஸ்ரோ குறிப்பிட்டது போல் தவளைபோல் அது தாவிக் குதித்துள்ளது.
 
 
இரண்டாவதாக, லேண்டரை நகர்த்த குறிப்பிட்ட கோணத்தில் அதனை மேலேழும்பச் செய்ய வேண்டும். அத்துடன், லேண்டர் மீண்டும் தரையிறங்குகையில் அதன் கால்கள் சரியாக தரையில் காலூன்ற வேண்டும். இவை அனைத்தையும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக செய்து, இஸ்ரோவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
மூன்றாவதாக, பூமியில் இருந்து பல லட்சம் கி.மீ. தூரம் பயணித்து நிலவை அடைந்ததும், தரையிறங்கிய ஒரே இடத்தில் மட்டுமின்றி, லேண்டரை நகர்த்தி வேறொரு இடத்திலும் ஆய்வு செய்ய முடியும் என்பதற்கான சாத்தியங்களை இஸ்ரோவுக்கு இது அளித்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் லேண்டர்களை இருவேறு இடங்களில் ஆய்வு செய்ய பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் கூடுதல் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருக்கும்." என்று அவர் விளக்கம் அளித்தார்.
 
விக்ரம் லேண்டர் நகர்ந்ததன் முக்கியத்துவம் என்ன?
 
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தாவிக் குதித்திருப்பது விண்வெளி ஆராய்ச்சியைப் பொருத்தவரை இஸ்ரோவுக்கு எந்த அளவுக்கு உதவும் என்று கேட்டதற்கு, "சந்திரயான்-3 திட்டத்தைப் பொருத்தவரை நிலவில் என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்பதை அங்கிருந்தபடியே பிரக்யான் ரோவர் மூலம் மண்ணை அகழ்ந்து ஆய்வு செய்கிறது. அங்கிருந்து மண், கல் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டம் இல்லை. அதற்கு இஸ்ரோ இன்னும் தயாராகவில்லை.
 
சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்துள்ளளன. இஸ்ரோவாலும் அதனை சாதிக்க முடியும் என்பதற்கான சாத்தியங்களை இந்த நிகழ்வு வலுப்படுத்தியுள்ளது என்று கூறலாம். இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய பாடங்கள், படிப்பினைகளைப் பெற்றிருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
 
பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா?
 
விக்ரம் லேண்டரும், உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் அந்த இடத்தில் சூரிய ஒளி பட்டதும் மீண்டும் இயங்கத் தொடங்குமா என்று அவரிடம் கேள்வியை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த வெங்கடேஸ்வரன், "சந்திரயான்-3 திட்டத்தின்படி விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டின் ஆயுட்காலம் 14 நாட்கள்தான். தற்போதைய நிலையில் அவை இரண்டுமே தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன.
 
இதையடுத்து, எஞ்சியிருக்கும் அவற்றின் ஆயுட்காலத்தில் இஸ்ரோ அடுத்தக்கட்ட விண்வெளி ஆய்வுக்கான பரிசோதனை முயற்சிகளை முடிந்தவரை செய்து பார்க்கலாம் என்றே இதனை செய்துள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் அந்த இடத்தில் சூரிய ஒளி வந்த பிறகு பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குவதற்கு மிகச்சிறிய வாய்ப்பே இருப்பதாக இஸ்ரோவே கூறியுள்ளது. ஒருவேளை அவை தொடர்ந்து இயங்கினாலும் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே இயங்கும். அதுவே சாதனைதான். ஏனென்றால் ஆயுளைத் தாண்டியும் செயல்புரிவது அதிகம்தானே. கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பை இஸ்ரோ பயன்படுத்திக் கொள்ளும்." என்று அவர் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments