Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரயான்-3: நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் கண்டுபிடிப்பு - மனிதன் சுவாசிக்க முடியுமா?

Pragyan Rover
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (20:00 IST)
சந்திரயான்-3 திட்டத்தின் முதலிரு இலக்குகளை ஏற்கனவே எட்டிவிட்ட இஸ்ரோ, மூன்றாவது இலக்கில் அடுத்தக்கட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது. தற்போது விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை முதன்முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
 
நிலாவில் பிரக்யான் ரோவர் படம்பிடித்த விக்ரம் லேண்டரின் முழுமையான புகைப்படத்தை முதல்முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
 
நிலாவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் உள்ளதா என்பது இன்னும் தெரிய வரவில்லை.
 
இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? நிலவில் குடியேற்றங்கள் அல்லது விண்வெளி தளம் அமைப்பதற்கான மனித குலத்தின் கனவை நனவாக்க இது உதவுமா? அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?
 
விண்வெளி ஆராய்ச்சியில் ஆகஸ்ட் 23-ம் தேதி இஸ்ரோ சரித்திர சாதனை படைத்தது. அன்றைய தினம், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றை விஞ்சி, நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியாவை தடம் பதிக்கச் செய்தது இஸ்ரோ.
 
அன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் கால் பதித்த விக்ரம் லேண்டரும், அதில் இருந்து நிலாவில் தரையிறங்கி ஊர்ந்து சென்ற பிரக்யான் ரோவரும் கச்சிதமாக தங்களது பணியை செவ்வனே செய்து வருவதை இஸ்ரோ ஏற்கனவே உறுதி செய்தது.
 
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகளை அடைந்துவிட்டதாகவும், மூன்றாவது இலக்கை நோக்கி நடை போடுவதாகவும் இஸ்ரோ கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது இலக்கை எட்டுவது குறித்த புதிய தகவல்களை இஸ்ரோ அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
 
விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE கருவியில் இருந்து முதல் கட்ட தரவுகளை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.
 
ChaSTE கருவி சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள, தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையை அளவிடுகிறது.
 
அதில் உள்ள வெப்பநிலையை அளவிடும் சாதனம் மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ. அடியில் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. அதில் வெப்பநிலையை அளவிடும் 10 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நேற்று(ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது.
 
பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, தற்போது ரோவர் புதிய பாதையில் சீராகப் பயணிப்பதாக இஸ்ரோ தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக சந்திரயான்-3 திட்டத்தின் மூன்று இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல, நிலாவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை குறித்து விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE என்ற கருவி அனுப்பிய தகவல்களையும் இஸ்ரோ பகிர்ந்திருந்தது.
 
இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளது. அதன்படி, நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தும் பிரக்யான் ரோவரில் உள்ள லேசரில் செயல்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி அங்கே கந்தகம் இருபபதை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, நிலவின் மேற்பரப்பில் தென் துருவத்திற்கு அருகே கந்தகம் இருப்பதை உறுதி செய்த முதல் அறிவியல் ஆய்வு இதுவாகும்.
 
அத்துடன், எதிர்பார்க்கப்பட்டபடியே அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனிசு, சிலிகான், ஆக்சிஜன் ஆகியவை இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை கண்டறியும் ஆய்வு தொடர்ந்து நடப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
 
 
நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள தனிமங்கள் தொடர்பான சந்திரயான்-3 விண்கலம் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.
 
"நிலவில் ஆக்சிஜன், கந்தகம், இரும்பு உள்ளிட்ட தனிமங்களின் இருப்பை சந்திரயான்-3 விண்கலம் உறுதிப்படுத்தியுள்ளது. பிரக்யான் ரோவர் மண்ணை அகழ்ந்து ஆய்வு செய்து இதனை உறுதி செய்திருக்கிறது. அதற்காக அந்த தனிமங்கள் நிலவில் அப்படியே தனித்து இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அந்த தனிமங்கள் நிலவில் எந்த வடிவிலும் இருக்கலாம்.
 
அதாவது, ஆக்சிஜன் என்பது ஆக்சைடு வடிவத்திலோ அல்லது வேறு ஏதேனும் ரூபத்திலோ இருக்கலாம். அதேபோல்தான், இரும்பு, கந்தகம் போன்ற பிற தனிமங்களும் இருக்கக் கூடும். அது குறித்து கிடைத்துள்ள தரவுகளை இஸ்ரோ இனி வரும் நாட்களில் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.
 
ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன. அதுவும் கூட, ஹைட்ராக்சைடு போன்ற ஏதோ ஒரு வடிவில் இருக்கக் கூடும். அடுத்து வரும் நாட்களில் அதுகுறித்த தகவல்கள் பிரக்யான் ரோவருக்கு கிடைக்கக் கூடும்." என்று அவர் கூறினார்.
 
 
தற்போதைய கண்டுபிடிப்புகள் நிலவில் குடியேறுவது, விண்வெளி ஆராய்ச்சிக்கான தளமாக நிலவை உருவாக்குவது போன்ற மனித குலத்தின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு உதவக் கூடும் என்று அவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், "நிலவில் ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை இரண்டும் இருந்தாலும் அவை எந்த வடிவில் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
 
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம் நிலவில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக் கூறியுள்ளது. அது நிரூபணமானால், ஏதோ ஒரு வடிவில் தண்ணீர் கிடைத்தால் அது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும். மனித குலத்திற்கே ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
 
ஏனெனில், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரண்டையும் பிரித்து நாம் சுவாசிக்க, நமது விண்கலன்களுக்கு எரிபொருளாக என பல விதங்களிலும் அவற்றைப் பயன்படுத்தலாம். அந்த நிலையை எட்டினால்தான், நிலவில் மனித குடியேற்றங்கள் அல்லது விண்வெளித்தளம் அமைப்பது சாத்தியமாகும். தற்போதைய நிலையில் அதுகுறித்து ஏதும் உறுதியாக கூற முடியாது." என்று தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ஒழிப்போம்.- அமைச்சர் உதயநிதி