Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜீ.வீ.கே குரூப் தலைவர் ஜீ.வீ.கே ரெட்டி, மகன் 705 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு

Advertiesment
ஜீ.வீ.கே குரூப் தலைவர் ஜீ.வீ.கே ரெட்டி, மகன் 705 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு
, வியாழன், 2 ஜூலை 2020 (14:51 IST)
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ஜீ.வீ.கே. குரூப்பின் தலைவர் ஜீ.வீ.கே. ரெட்டி மற்றும் அவரது மகன் ஜீ.வீ. சஞ்சை ரெட்டி ஆகியோர் 705 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) வழக்குப்பதிவு செய்துள்ளது என்று பிடிஐ முகமை முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, தங்கள் கூட்டாண்மை நிறுவனம் மூலம் இவர்கள் மோசடி செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது.

ஜீ.வீ.கே. ரெட்டி, ஜீ.வீ. சஞ்சீவி ரெட்டி மட்டுமல்லாது ஒன்பது பிற தனியார் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் அறியப்படாத இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜீ.வீ.கே. ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் முதல் குற்றவாளியாகவும், மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ள இந்த வழக்கில் ரெட்டி மற்றும் அவரது மகன் மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குற்ற நோக்குடன் சதித் திட்டம் தீட்டுதல், மோசடி செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் உற்பத்தி, விமான நிலையங்கள் மேலாண்மை, நெடுஞ்சாலைகள் அமைப்பு, நட்சத்திர விடுதிகள் என ஜீ.வீ.கே. குழுமம் பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறது.

மும்பை விமான நிலைய பணம் - சிபிஐ குற்றச்சாட்டு என்ன?

ஜீ.வீ.கே. ரெட்டியின் மகன் ஜீ.வீ. சஞ்சை ரெட்டி மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் (எம்.ஐ.ஏ.எல்) எனும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வருகிறார்.
webdunia

இந்த நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் ஜீ.வீ.கே. ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் கூட்டாண்மை நிறுவனமாகும்.

ஜீ.வீ.கே. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அடையாளம் காணப்படாத இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆகியோர் உதவியுடன் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் 705 கோடி ரூபாயை முறைகேடாக தங்கள் வசப்படுத்திக் கொண்டனர் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி கூறுகிறது.

2017 -18ஆம் நிதியாண்டில் மட்டும் ஒன்பது நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படாத போலி ஒப்பந்தங்கள் மூலம் ஜீ.வீ.கே. குழுமம் 310 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ தெரிவிக்கிறது.

இதுமட்டுமல்லாமல் மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இருப்பு நிதியிலிருந்து 395 கோடி ரூபாய் பணத்தை ஜீ.வீ.கே. குழுமத்தின் வேறு நிறுவனங்களுக்கு முறைகேடாக திசைதிருப்பி விட்டதாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது.

மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு உண்டான செலவுகளை அதிகப்படுத்திக் காட்டியும், இந்த நிறுவனத்துடன் தொடர்பில்லாத ஜீ.வீ.கே. குழுமத்தின் வேறு நிறுவனங்களுக்கும் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடை மாற்றியும், அதன் மூலம் ஜீ.வீ.கே. குழுமம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு இழப்பை உண்டாக்கி உள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஈட்டிய லாபத்தை குறைத்துக் காட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள் - என்ன நடக்கிறது போட்ஸ்வானாவில்?