Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.டி. ரெய்டால் கதி கலங்கும் வேட்பாளர்கள் - கள நிலவரத்தால் பதறும் "உடன்பிறப்புகள்"

Advertiesment
ஐ.டி. ரெய்டால் கதி கலங்கும் வேட்பாளர்கள் - கள நிலவரத்தால் பதறும்
, சனி, 27 மார்ச் 2021 (07:26 IST)
திருவண்ணாமலை தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலு, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி வீடு, கரூர் பைனான்ஸியர்கள் வீடு என வருமான வரித்துறை சோதனை நீண்டு கொண்டிருக்கிறது. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக கையாளப்படும் ஆயுதம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார்கள். வருமான வரித்துறை, ஆளுங்கட்சியின் ஆயுதமாக கையாளப்படுகிறதா?
 
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு வெகுசில நாள்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தமுறை வெற்றி பெற்றே ஆக வேண்டிய முனைப்பில் தி.மு.க இருப்பதால், மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பத்தாண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் பூத் கமிட்டி உள்பட அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பலரும் உற்சாகத்துடன் தேர்தல் வேலை பார்த்து வருவதைக் கவனிக்க முடிகிறது. இந்த உற்சாகம் தி.மு.க முகாமில் சற்று குறைந்தே காணப்படுவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் வேதனைப்படுகின்றனர்.
 
முடங்கிய "உடன்பிறப்புகள்"
 
அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றபோது, `தொகுதிக்கு 10 கோடி செலவு செய்வேன்'; `5 கோடியை செலவு செய்வேன்' என வாக்குறுதி கொடுத்தவர்கள் எல்லாம் சீட் கிடைத்த பிறகு, பி.எல்.ஏ எனப்படும் பூத் கமிட்டிகளுக்கு முதல் சுற்றுப் பணத்தைச் செலவு செய்ததோடு முடித்துக் கொண்டனர். இதனால் கொதித்துப் போய் உடன்பிறப்புகள் சிலர் கேள்வி எழுப்பியபோது, ` அறிவாலயத்தில் இருந்து பதில் வரவில்லை. தலைவர் பிரசாரத்துக்கு வரவுள்ளார். பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என சமாதானம் செய்து வருகின்றனர்.
 
தி.மு.க வேட்பாளர்கள் செலவு செய்யத் தயங்குவதன் பின்னணியில் ஐ.டி ரெய்டு, பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் திருவண்ணாமலை வேட்பாளர் எ.வ.வேலுவை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய சோதனை முடிவுக்கு வந்துவிட்டது. இதில், வேலுவுக்குச் சொந்தமான கல்லூரி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு உள்பட 16 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனையானது, கரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் வரையில் நீண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்த எ.வ.வேலு, `என் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை' என்றார்.
 
தி.மு.கவுக்குப் பணம் தரலாமா?
 
இதுதவிர, கரூரில் உள்ள குளோபல் நிதி நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. இதுதவிர, திருச்சி மாவட்டத்தில் மொராய்ஸ் சிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் மொராய்ஸ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர் ம.நீ.ம வேட்பாளருக்கு மிகவும் நெருங்கியவர் எனக் கூறப்படுகிறது. திருப்பூரிலும், ம.நீ.ம மாநில பொருளாளர் சந்திரசேகரின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக, பா.ஜ.க மீது சில அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தின. இதற்குப் பதில் அளித்த பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, `தகவலின்பேரிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் இந்தச் சோதனைக்கு அச்சப்பட வேண்டும்' என்றார்.
 
அதேநேரம், வருமான வரித்துறையின் சோதனைகளால் தி.மு.க நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` தி.மு.கவால் செலவே செய்ய முடியாத அளவுக்கு முடக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் வசிக்கும் தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்களிடம் சென்று, `தி.மு.கவுக்குப் பணம் தரக் கூடாது' என அதிகாரிகளை வைத்து மிரட்டும் வேலைகளைச் செய்கின்றனர். அதையும் மீறி பணம் கொடுக்கப்பட்டால், அதனை முடக்கும் வேலைகள் நடக்கின்றன" எனக் கொந்தளிக்கிறார்.
 
செலவு செய்யத் தயக்கம் ஏன்?
 
தொடர்ந்து இதுகுறித்து விவரித்தவர், `` ஒரு தொகுதிக்கு 250 பூத்துகள் உள்ளன. இந்த பூத்துகளில் தேர்தல் வேலை பார்ப்பவர்களுக்கு சரியான முறையில் பணத்தை விநியோகிக்க முடியவில்லை. அதேநேரம், அ.தி.மு.க தரப்பில் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் விநியோகம் நடந்து வருகிறது. அவர்களில் பலரும் வாக்காளர்களை குளிர்விக்கும் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து வருகின்றனர். எங்கள் கட்சியில் ஒரு தொகுதிக்கு 1 லட்சம் ஓட்டு என்ற கணக்கை வைத்து பணத்தைச் செலவு செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால், தலைமையில் இருந்து எந்த உத்தரவும் வராததால், வேட்பாளர்கள் பலரும் செலவு செய்யவே அச்சப்படுகின்றனர்.
 
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகளும் தி.மு.கவுக்குச் சாதகமாக உள்ளதால் பலரும் செலவு செய்யாமல் அமைதியாக உள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோன்ற கருத்துக்கணிப்புகள்தான் வெளியானது. எனவே, `கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும். ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்' என 25 ஆம் தேதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய மடலில் ஸ்டாலின் அலெர்ட் கொடுத்தார்" என்றவர், எ.வ.வேலுவை குறிவைத்து நடந்த சோதனையின் பின்னணியை விவரித்தார்.
 
காட்டிக் கொடுத்தது யார்?
 
`` கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது துரைமுருகனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தமுறை எ.வ.வேலுவை இலக்காக வைத்துச் செயல்பட்டனர். அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவரை முரசொலியில் கட்டம் கட்டினார்கள். அந்த நபர் எ.வ.வேலுவுக்கு எதிராகப் பகிரங்கமாக சவால்விட்டார். அந்த நபர் எந்தக் கட்சிக்கும் செல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஒருகாலத்தில் வேலுவுக்கு ஆல் இன் ஆலாக அந்த நபர் இருந்தார். அவர் மூலமாக வருமான வரித்துறைக்கு தகவல் சென்றிருக்குமோ என்ற சந்தேகமும் கட்சித் தலைமைக்கு இருக்கிறது. உள்கட்சி மோதலில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் வேலைகள் நடப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
 
கடந்தமுறை தனது வீட்டில் நடந்த ரெய்டு குறித்துக் கட்சிக் கூட்டத்திலேயே துரைமுருகன் வேதனையைப் பதிவு செய்தார். அவர் பேசும்போது, `சொந்தக் கட்சிக்குள்ளேயே இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா?' என்றார். இந்தமுறை போட்டியிட சீட் கிடைக்காத பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கோபத்தைப் பல்வேறு வழிகளில் காட்டுகின்றனர். `10 வருடமாகக் களத்தில் வேலை பார்த்தோம். நமக்குக் கொடுக்காமல் வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்கள்' என வெளிப்படையாகவே சிலர் பேசுகின்றனர். இந்தத் தேர்தலில் ஸ்டாலின் ஆதரவு அலை அடித்தால் மட்டுமே வேட்பாளர்கள் பலரும் கரையேறுவார்கள்" என்கிறார்கள் ஆதங்கத்துடன்.
 
தி.மு.கவுக்கு அச்சுறுத்தலா?
 
`தி.மு.கவை அச்சுறுத்துவதற்காக இந்தச் சோதனைகள் நடைபெறுகிறதா?' என தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அரசியல் கட்சிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குவதுதான் பா.ஜ.கவின் வேலை. வருமான வரித்றை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை வைத்துத்தான் பா.ஜ.க இயங்கிக் கொண்டிருக்கிறது. `தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியமைக்கும்' என்ற தகவல் வந்து கொண்டிருக்கும் சூழலில், இப்படிப்பட்ட வேலையைச் செய்கின்றனர். இதைப் பற்றி எங்களுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை" என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், `` எ.வ.வேலு சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரிடம் பணம் இருக்கத்தான் செய்யும். மக்கள் நீதி மய்யம் ஆதரவாளர் வீட்டில் ரெய்டு நடத்திய பிறகு, பா.ஜ.கவை கமல் விமர்சிக்காமல் இருக்கிறார். அதுபோன்று நாங்கள் பயந்து போகிறவர்கள் கிடையாது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
 
இதற்கு முன்பு ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். பல கோடிகள் பிடிபட்டதாக செய்தியைப் பரப்பினார்கள். இறுதியில் என்ன ஆனது? இதை அச்சுறுத்தக்கூடிய ஒன்றாகச் செய்கிறார்கள். வருமான வரித்துறைக்கு முறையான கணக்குகளைத் தெரிவித்துவிட்டால், விவகாரம் முடிவுக்கு வந்துவிடும். இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.
 
குறிப்பிட்ட கட்சியை இலக்கு வைக்கிறதா தேர்தல் ஆணையம்?
 
இதற்கிடையே, ஐ.டி. ரெய்டு மூலம் தேர்தல் ஆணையம் சில கட்சிகளை இலக்கு வைத்து அச்சுறுத்துகிறதா என ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "வருமான வரித்துறை ரெய்டு மூலம் அச்சுறுத்தல் நடக்கிறது என சொல்வதே தவறானது. ஒரு இடத்தில் பணம் இருக்கிறது என முறையாக தகவல் கிடைத்தால் மட்டுமே, அதை உறுதிப்படுத்தி வருமான வரித்துறை சோதனையில் ஈடுபடும். அந்த இடத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால், அதற்குரிய முறையான விளக்கமோ ஆவணமோ கொடுத்தால் எந்தவித சிக்கலும் இருக்கப்போவதில்லை. அப்படி சில இடங்களில் இல்லாமல் இருப்பதுதான் பிரச்னையே," என்று அவர் கூறினார்.
 
"காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால் கூட அதில் ஒருவித அச்சுறுத்தல் இருப்பதாக கருதலாம். ஆனால், வருமான வரித்துறை முறையாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினால் அதை எப்படி அச்சுறுத்தலாக பார்க்க முடியும்," என்று பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். "இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை 3 கட்சிகள் அழைத்தன: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!