Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உறுதியானதாக அறிவிப்பு

Advertiesment
புதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உறுதியானதாக அறிவிப்பு
, செவ்வாய், 9 மார்ச் 2021 (17:47 IST)
புதுச்சேரியில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைவது இன்று (மார்ச் 9, செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, மற்றும் ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.  இந்த நிலையில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் - திமுக கட்சிகளுக்கு இடையே மற்றும் தேசிய  ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு மாத காலமாக  நடைபெற்று வந்தது.
 
இதில் மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை  கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியில்  இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்ற வருகிறது.
 
முன்னதாக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே நிலைப்பாடு புதுச்சேரியிலும் பின்பற்றப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைவது கேள்விக்குறியாகப்  பார்க்கப்பட்ட நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.
 
முன்னதாக, "கூட்டணி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் பல குழப்பங்கள் நீடித்து வந்தன. மேலும் புதுச்சேரி மாநில நலன் கருதியும்,  மாநிலத்தின் தன்மையைக் காப்பாற்றக் காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இருக்கும் மதச்சார்பற்ற கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ரங்கசாமி தலைமை ஏற்க வேண்டும்," என ரங்கசாமிக்குக் காரைக்கால் பிராந்திய திமுக அமைப்பாளர் நாஜிம் அழைப்பு விடுத்திருந்தார்.
 
அமித் ஷா நேரடி தலையீடு
 
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து என்.ஆர்.காங்கிரஸ் இந்த தேர்தலைச் சந்திக்கும் என கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,  முதல்வர் வேட்பாளர் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறித் தனித்துப்  போட்டியிட வேண்டுமென என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தலைவர் ரங்கசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பாஜக மேலிடப்  பொறுப்பாளர்கள் தங்கள் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசி மூலமாக ரங்கசாமியுடன் பேசி கூட்டணிக்கு வருமாறும், தங்களது கோரிக்கையை  ஏற்பதாகவும் தகவல் வெளியாகியது. இந்த தகவலை அக்கட்சி நிர்வாகிகளும் உறுதி செய்தனர். இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி, கட்சி  நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் பாஜகவுடனான கூட்டணி தொடர்வது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
இதன்பிறகு பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதிப் பங்கீடு குறித்து தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று  (திங்கள்கிழமை) நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
 
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி
 
இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அதிக இடங்கள் கேட்கப்படுவதால் கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பதாகப் புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர்  நிர்மல்குமார் சுரானா தெரிவித்திருந்தார்.
 
குறிப்பாக, "முதலில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கேட்கப்பட்டது. ஆனால் 20  தொகுதிகளுக்கு உடன்படாத காரணத்தினால் இறுதியாக 18 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.‌ ஆனால் பாஜக தரப்பில் முதலில் 14 தொகுதிகள் ஒதுக்கீடு  செய்வதாகக் கூறி வந்த நிலையில் படிப்படியாக 16 வரை வந்துள்ளனர்," எனப் பெயர் குறிப்பிட விரும்பாத என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி‌ தெரிவித்தார்.
 
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியாக அவர் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "இந்த என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைவர் என்.ரங்கசாமி என்பதால், அவரே முதல்வர்  வேட்பாளராக இருப்பார்," என நிர்வாகி தெரிவித்தார்.
 
பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு
இந்த நிலையில் இன்று பிற்பகல் தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் பாஜக - அதிமுக மற்றும் என்.ஆர்.  காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இதில் பாஜக - அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் இணைந்து இந்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்க  இருக்கிறோம். இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை தொகுதிகள் போட்டியிட இருக்கின்றனர்‌ என்பதும் முடிவு  செய்யப்பட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக - அதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன," என்றார் அவர்.
 
யார் முதல்வர் வேட்பாளர்?
 
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருப்பதாக சுரானா தெரிவித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, "நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக  இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
 
இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தேர்ந்தெடுக்கப்படும் ‌சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முதல்வர் வேட்பாளர் யார் என தெரிவிப்பார்கள்," என்று நிர்மல் குமார் சுரானா கூறினார்.
 
இதனிடையை தொகுதி உடன்படிக்கை கையெழுத்திடும் போது முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்ககோரி அவரது கட்சியினர் கூச்சலிட்டனர். மேலும் ரங்கசாமியை முதல்வர் என கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் தினத்தில்... மாணவிகள் மீது ஏ.பி.வி.பி தாக்குதல்