Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேசில் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பாரத் பயோடெக்

Advertiesment
Brazilian companies
, சனி, 24 ஜூலை 2021 (23:35 IST)
பிரேசிலில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக எழுந்த சர்ச்சையால் விசாரணையை எதிர்கொண்டுள்ள ஆளும் அரசு நிர்வாகத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராடிய பொதுமக்கள்.
 
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி, உற்பத்தியும் செய்யும் கோவேக்சின் தடுப்பூசி கொள்முதல் விவகாரம், பிரேசில் நாட்டில் அரசியல் சர்ச்சையாக தீவிரம் அடைந்திருக்கிறது.
 
இதன் காரணமாக, அந்த நாட்டில் மருந்து தயாரிக்க இரண்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
உலக அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் ஏற்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்த நிலையில், பிரேசில் உள்ளது. அமெரிக்காவில் 3.44 கோடி, இந்தியாவில் 3.12 கோடி, பிரேசிலில் 1.96 கோடி என்றவாறு பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. இதில் அதிக உயிரிழப்புகள் பதிவான நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 5.48 லட்சம் உயிரிழப்புகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் ஆரம்பத்தில் மெத்தனம் காட்டிய பிரேசில் அரசு, பிறகு அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் ஹைரதாபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவேக்சினை தங்கள் நாட்டில் விநியோகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரேசிலின் பிரெகிசா மெடிகாமென்டோஸ், என்விக்ஸியா மருந்தக நிறுவனம் ஆகியவை பாரத் பயெடெக்குடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்து கொண்டன.
 
ஊக்கம் கொடுத்த இந்திய அரசு
 
இந்தியாவின் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒத்துழைப்புடன் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்தை மேம்படுத்தியிருப்பதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. இதேவேளை அந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே விநியோகம் செய்ய ஆளும் நரேந்திர மோதி அரசு ஊக்குவித்து வருகிறது.
 
இந்த நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மருந்துக்கு உலகின் சில நாடுகள் இன்னும் ஒப்புதல் வழங்காதபோதும், அந்த தடுப்பூசி மருந்தை பெற சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில்தான் பிரேசிலின் இரண்டு நிறுவனங்கள் பாரத் பயோடெக்குடன் ஒப்பந்தம் செய்தன.
 
அந்த ஒப்பந்தத்தின்படி பிரேசில் நிறுவனங்களுக்கு 320 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2,375 கோடி) மதிப்பிலான 2 கோடி டோஸ் மருந்துகளை பாரத் பயோடெக் நிறுவனம் வழங்க வேண்டும். தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான ஒத்துழைப்பு நடவடிக்கை, அரசு நிர்வாகத்திடம் உரிமம் பெறுதல், விநியோகம் செய்தல், காப்பீடு, மூன்றாம் கட்ட தடுப்பூசி தயாரிப்பின்போது மருத்துவ நிலையிலான பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்.
 
கொரோனா கோவாக்சின்
 
இந்த நிலையில், இந்த தடுப்பூசி மருந்துக்கான விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் ஆளும் பிரேசில் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்ததாக அந்த நாட்டில் அரசியல் சர்ச்சை வெடித்தது.
 
இந்த தடுப்பூசி மருந்து டோஸ் விலையை, உலக நாடுகளுக்கு டோஸ் ஒன்றுக்கு 15 டாலர்கள் முதல் 20 டாலர்கள் வரையிலான கட்டணத்தில் பாரத் பயோடெக் நிர்ணயித்துள்ளது. இதில் பிரேசில் நாட்டுக்கு ஒரு டோஸ் மருந்து 15 டாலர்கள் என்ற அளவில் அரசு நிர்ணயித்தது.
 
ஆனால், இந்த மருந்துகளை வழங்குவதற்கான எந்த முன்பணத்தையும் இதுவரை தாங்கள் பெறவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட விஷயத்தில் ஆளும் பிரேசில் அரசின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்ததாக அந்த நாட்டில் சர்ச்சை வெடித்தது. கடந்த சில வாரங்களாக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவும் காரணமானது.
 
கொரோனா கோவாக்சின்
 
கோவேக்சின் தடுப்பூசி மருந்து கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக ஆளும் அதிபரின் நிர்வாகத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
 
இந்தியாவில் அனைத்து வித மருந்து தயாரிப்புக்கும் இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் (டிஜிசிஐ)அனுமதியைப் பெறுவதைப் போல, பிரேசில் நாட்டில் தடுப்பூசி மருந்தை வழங்க பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு ஏஜென்சியான ANVISA என்ற அமைப்பின் ஒப்புதல் அவசியம். அந்த ஒப்பதலை முறைப்படி பெறுவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டு கடந்த ஜூன் 4ஆம் தேதி அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை பிரேசில் சுகாதாரத்துறையிடம் இருந்து தாங்கள் பெற்றதாக பாரத் பயோடெக் கடந்த மாதம் தெரிவித்தது.
 
தகவல் முரண்பாடு சர்ச்சை

ஆனால் பிரேசில் அதிகாரிகளோ, கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளின்கீழ் கோவேக்சின் தடுப்பூசி மருந்தை விநியோக பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்ய பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு ஏஜென்சி அனுமதி வழங்கியதாக அளித்த தகவலை, அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை ஜூன் 4ஆம் தேதி பெற்று விட்டதாக கோவேக்சின் நிறுவனம் கோரியதாக தெரிவித்தனர்.
 
இந்த முரண்பட்ட தகவல்களை சுட்டிக்காட்டிய பிரேசில் சுகாதாரத்துறை அதிகாரி ரிகார்டோ மிராண்டா, குறிப்பிட்ட அந்த தடுப்பூசி மருந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 'சந்தேகக்குரிய விலையை' ஏற்றுக் கொள்ள தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் பிரேசில் நாட்டில் தீவிர அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த சூழ்நிலையில், பிரேசில் நாட்டில் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்த பிறகே அந்த நாட்டுக்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது. இந்த விஷயத்தில் தமது தரப்பில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்தது.
 
சர்வதேச அளவிலான தமது ஒப்பந்தங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் உயரிய நெறிகள், நேர்மை மற்றும் விதிகளுக்கு கீழ்படிவதை அவை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
 
பிரேசிலில் இரண்டு தனியார் மருந்தக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டாலும், கோவேக்சின் மருந்துக்கான ஒப்புதலை அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை அமைப்பான ANVISA-விடம் இருந்து பெறும் முயற்சிகள் தொடரும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்!