Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத் பந்த் இன்று: அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம்

பாரத் பந்த் இன்று: அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம்
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:56 IST)
இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் என்னும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்  இன்று நடக்கிறது.

இந்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதை அடுத்து விவசாயிகள் போராட்டக் குழவினருக்கும் அரசுக்கும் இடையே நடந்த 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
 
அதைத் தொடர்ந்து தான், இன்று (8 டிசம்பர்) இந்த வேலை நிறுத்தம் நடத்துவதாக அறிவிப்பு விடுக்கப்பட்டது.
 
கடந்த 12 நாட்களாக, விவசாயிகள், கிட்டத்தட்ட டெல்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளையும் முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். விவசாயிகளின் வேலை  நிறுத்த அறிவிப்புக்கு குறைந்தபட்சம், 15 எதிர்கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கி இருக்கின்றன.
 
புதிய வேளான் மசோதாக்கள், விவசாயத் துறையில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க அனுமதிக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை பாதிக்காது  என ஆளும் பாஜக தரப்பில் கூறுகிறார்கள்.
 
ஆனால் விவசாயிகள் இந்த விளக்கங்களில் திருப்தி அடையவில்லை. டெல்லியை நோக்கிச் சென்ற விவசாயிகள், எல்லைப் பகுதிகளில் தடுப்புக்களாலும்,  காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் பலரும் பஞ்சாப் மற்றும் ஹரியானா  மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல பணம் படைத்த விவசாயச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
 
ஒரு கட்டத்தில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட பிறகும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளிலேயே தொடர்ந்து  போராடிக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு புதிய வேளான் மசோதாக்களைத் திரும்பப் பெறும் வரை, எல்லைப் பகுதியிலேயே தொடர்ந்து போராட  இருப்பதாகக் கூறுகிறார்கள்.

webdunia
அப்போதில் இருந்து, விவசாயிகளின் போராட்ட களங்கள், கூடாரங்களாக மாறிவிட்டன. ஒட்டுமொத்த குடும்பமும், அதே இடத்தில் சமைப்பது, சாப்பிடுவது,  உறங்குவது என எல்லா அன்றாட வேலைகளையும் செய்து வருகிறார்கள்.
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் கொரோனா  நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கடந்த சில மாதங்களில், டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிகக் கடுமையாக அதிகரித்து  வருகிறது.
 
வயதான பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, இந்த கடும் குளிர் காலத்திலும் அவர்கள் மீது நீரை பீய்ச்சி அடிப்பது  போன்ற படங்கள், இந்திய பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளியினர்களுக்கு, விவசாயிகள் மீது ஒரு கரிசனம் கலந்த அனுதாபத்தை  ஏற்படுத்தி இருக்கிறது.
 
விவசாயிகள் மசோதா என்ன சொல்கிறது?
 
இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதாக்கள், விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை மற்றும் சேமிப்பு போன்றவைகள் தொடர்பான  விதிகளை தளர்த்துகிறது. அந்த விதிகள் தான் இந்திய விவசாயிகளை கடந்த பல தசாப்தங்களாக, தடையற்ற திறந்த வெளிச் சந்தையில் இருந்து பாதுகாத்தது.
 
இந்த புதிய வேளான் மசோதாக்கள், தனியார் விவசாயப் பொருட்களை வாங்கிக் குவித்து வைக்கவும், எதிர்காலத்தில் விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது. இதை  அரசு அனுமதித்து இருக்கும் முகவர்கள் மட்டுமே இதற்கு முன்பு செய்ய முடியும்.
 
அதோடு ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்வது தொடர்பாகவும் விதிகளை வகுக்கிறது. இந்த புதிய வேளான் மசோதாக்கள். இந்த ஒப்பந்த அடிப்படையிலான  விவசாயத்தில், விவசாய விளைபொருட்களை வாங்க இருப்பவர் கூறுவது போல, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்.
 
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, சந்தை விலைக்கு திறந்த வெளியில் சூப்பர் மார்கெட் செயின்கள், ஆன்லைன் நிறுவனங்கள் என தனியாரிடம்  விற்கலாம் என்பது தான் இந்த புதிய வேளான் மசோதாக்களில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மாற்றம்.
 
இத்தனை நாட்களாக, விவசாயிகள் தங்களின் விளை பொருட்களின் பெரும் பகுதியை, அரசு கட்டுப்படுத்தும் மொத்த விலைச் சந்தைகள் அல்லது மண்டிகளில்,  உறுதி செய்யப்பட்ட அடிப்படை விலையில் விற்று வருகிறார்கள்.
 
இந்த சந்தைகள், விவசாயிகளைக் கொண்ட குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பெரும் நிலக்கிழார்கள், வர்த்தகர்கள், கமிஷன் முகவர்கள் போன்றவர்கள், தரகர்  போல செயல்பட்டு விளை பொருட்களை விற்றுக் கொடுக்க உதவுகிறார்கள்.
 
விவசாயிகள் ஏன் கோபப்படுகிறார்கள்?
 
அரசு கொண்டு வந்திருக்கும் விவசாய மசோதாக்களை எதார்த்தத்தில் எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தெளிவாக இல்லை என்பது தான் பிரச்சனை.
 
"பெரிய நிறுவனங்களை, விவசாய விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்காவிட்டாலோ அல்லது வாங்க அனுமதித்தாலோ, நாங்கள் எங்கள் நிலத்தை  இழப்போம், எங்கள் வருமானத்தை இழப்போம். நாங்கள் பெரு நிறுவனங்களை நம்பவில்லை. ஊழல் குறைவாகவும், அதிக கட்டுப்பாடுகளும் இருக்கும் நாடுகளில்  தான் திறந்த வெளிச் சந்தை சரிப்பட்டு வரும். நம் நாட்டுக்கு அது ஒத்துவராது" என்கிறார் விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக  இருக்கும் குர்னம் சிங் சருனி.
 
இந்த புதிய வேளான் மசோதாக்கள், மொத்த விலைச் சந்தை மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கான உறுதி செய்யப்பட்ட விலை போன்றவைகளை முடிவுக்கு  கொண்டு வந்துவிடும் என்கிற கவலையில் இருக்கிறார்கள். அதாவது, ஒரு தனியார் கூறும் விலை, விவசாயிக்கு ஒத்துவரவில்லை என்றால், அவர் மீண்டும்  மண்டிக்கு வர முடியாது.
 
மண்டி முறை தொடரும் என அரசு கூறுயிருக்கிறது. அதே போல அரசு, விவசாய விளை பொருட்களுக்கு தற்போது வழங்கும் அடிப்படை விலையும் தொடர்ந்து  வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறது. ஆனால் விவசாயிகள் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
 
"தொடக்கத்தில் தனியார் நிறுவனங்கள் நல்ல விலை தருவார்கள். விவசாயிகளும் இதனால் கவரப்படுவார்கள். அரசு மண்டிகள் எல்லாம் மூடப்பட்ட பின், சில  வருடங்களுக்குப் பிறகு, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்டத் தொடங்குவார்கள். அதனால் தான் நாங்கள் அச்சப்படுகிறோம்" என்கிறார் பஞ்சாபைச்  சேர்ந்த விவசாயி முல்தான் சிங் ரானா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கட்சியால் பாஜகவுக்கு பாதகம் இல்லை: இல கணேசன்!