Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (14:47 IST)
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

1528: மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்படுகிறது.

1853: இந்த இடத்தில் முதல் முறையாக மதக் கலவரம் ஏற்படுகிறது.

1859: இந்த பிரச்சனையில் தலையிட்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் மசூதியின் உள் மண்டபத்தை முஸ்லிம்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தவும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யவும் வழிவகை செய்தனர். இதை அமல்படுத்தும் வகையில் அங்கே அவர்கள் வேலியை அமைத்தனர்.

1949: ராமர் சிலைகள் மசூதிக்குள் கொண்டுவந்து வைக்கப்படுகின்றன. இதை இந்துக்கள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பும் சிவில் வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கின்றனர். இவ்விடயத்தில் தலையிட்ட இந்திய அரசு சம்மந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து அந்த இடத்தின் கதவுகளை மூடுகிறது.
webdunia

1984: இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இந்த இடத்தை விடுவித்து அங்கு ராமருக்கு கோயிலை கட்டப் போவதாக அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய தலைவரான எல்.கே. அத்வானி ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டார்.

1986: மாவட்ட நீதிபதி சர்சைக்குரிய கட்டிடத்தின் பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் அங்கு இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக முஸ்லிம்கள் பாப்ரி மசூதி நடவடிக்கை குழுவை ஆரம்பித்தனர்.
webdunia

1989: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, சர்ச்சைக்குரிய மசூதிக்கு அடுத்த பகுதியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டியது.

1990: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மசூதியின் சில பகுதிகளை நாசம் செய்தனர். இதன் பிறகு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

1991: அயோத்தி அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஐனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

1992: பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்களால் மசூதி இடித்துத் தள்ளப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற மத மோதல்களின் காரணமாக சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

1998: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்த நிலையில், மீண்டும் ராமர் கோயில் பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கையிலெடுக்கிறது. அன்றைய பிரதமர் வாஜ்பேயி, நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா தலைமையில் அயோத்யா பிரிவை ஆரம்பிக்கிறார்.

2002: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் நடக்கும் போது, அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து உறுதியான உத்திரவாதங்களை அளிக்க பாரதிய ஜனதா கட்சி மறுக்கிறது.

2003: இந்த வழக்கில் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்கிறார். நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் வாஜ்பேயி நம்பிக்கை வெளியிட்டார். மசூதி இடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இருந்தும் அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.
webdunia

2005: சர்ச்சைக்குரிய இடத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் தாக்குகின்றனர். பாதுகாப்புப் படையினர் திரும்ப தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2009: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபர்ஹான் கமிஷனின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. மசூதி உடைக்கப்பட்டதற்காக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மீது அது குற்றஞ்சாட்டுகிறது.

2010: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லாவுக்கும் (குழந்தை வடிவில் ராமர் கடவுள்), இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா எனும் துறவிகள் குழுவின் அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2019: இந்திய உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு ராமர் கோயிலை நிறுவ மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை நிறுவவும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்!