Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தி வழக்கு: இதுதான் இறுதி தீர்ப்பா? - சில சந்தேகங்களும், விளக்கமும்

Advertiesment
அயோத்தி வழக்கு: இதுதான் இறுதி தீர்ப்பா? - சில சந்தேகங்களும், விளக்கமும்
, சனி, 9 நவம்பர் 2019 (18:37 IST)
இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில், பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.
சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
 
இது தொடர்பாக பிபிசி தமிழின் செய்தியாளர் மு. நியாஸ் அகமது, மூத்த சட்டவிவகார செய்தியாளர் ஜெ.வெங்கடேசனிடம் உரையாடினார்.
 
அதன் தொகுப்பு.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல முடியுமா?
 
“மேல்முறையீடு செல்ல முடியாது. சீராய்வு மனு வேண்டுமானால் போடலாம். உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தால், அதுதான் முடிவு. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. ஆனால் சீராய்வு மனு போடலாம். ஆனால், இந்த சீராய்வு மனுக்களில் நூற்றில் 99 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
 
சீராய்வு மனு எப்போது தாக்கல் செய்யப்படலாம் என்றால், ஒரு வழக்கில் சில அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றால், சில அம்சங்களை தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தால் மட்டும்தான் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால், இந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, தொல்பொருள் ஆய்வின் அறிக்கைகள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆராய்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், சீராய்வு மனு தாக்கல் செய்தால் கூட உச்சநீதிமன்றம் மனுவை நிராகரிக்கலாம்.”
 
இந்த தீர்ப்பில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என எதைக் கூறுவீர்கள்?
 
"அயோத்தியா - ராமர் பிறந்த இடம். அங்கு கோயில் கட்ட வேண்டுமென்பதுதான் இந்துக்களின் முக்கியமான கோரிக்கை. எந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும்? 2.07 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட வேண்டும். ஏனென்றால் அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எங்களது நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடம் எங்களுக்குதான் (இந்துக்கள்) சொந்தமானது. அந்த இடத்தை கொடுத்துவிட்டீர்கள் என்றால், அந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்பதுதான் இந்துகளின் வாதம். அதில் பல்வேறுதரப்பு இந்துக்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.
 
குறிப்பாக, ராமரின் சிலையும் சட்டப்படியான நபர்தான் என்று உச்சநீதிமன்றம் சொல்லி, அந்த 2.07 ஏக்கர் நிலம் ராமருக்குதான் சொந்தம். அதற்கு வேறுயாரும் உரிமை கோர முடியாது. அந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்டலாமென தீர்ப்பில் சொல்லி இருக்கிறார்கள் .
 
மத்திய அரசு 67 ஏக்கரை 1993 ஆண்டிலேயே கையகப்படுத்திவிட்டார்கள். இப்போது இந்த நிலம் வந்து மத்திய அரசிடம்தான் இருக்கிறது. எனவே இந்த ஒட்டுமொத்தமாக 67 ஏக்கர் நிலம் உள்ள இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கி 1992ஆம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பிராய்சித்தமாக அவர்களுக்கும் ஒரு மசூதியை கட்டித்தர வேண்டும் அதற்கான ஒரு வாரியத்தை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
 
அதுபோல, ராமர் கோயில் கட்டுவதற்கும் ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டுமென தீர்ப்பில் சொல்லி இருக்கிறார்கள். இதனை மூன்று மாதத்திற்குள் செய்ய வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார்கள்."
 
"சுன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்குரைஞர் ஜாஃபர்யாப் ஜிலானி தீர்ப்பை மதிக்கிறோம் ஆனால் திருப்தி அடையவில்லை என்று கூறியுள்ளார். அது குறித்து?"
 
"நீதிமன்றத்தில் இந்த வழக்கை இரண்டு காலக்கட்டங்களாக பார்த்தார்கள். 1528ஆம் ஆண்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. 1885 சமயத்தில் ஒரு கிளர்ச்சி வந்தது. அந்த சமயத்தில் இரண்டு தரப்பும் அந்த நிலத்திற்கு உரிமை கோரியது.
 
இந்த இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் அங்கு தொடர்ந்து தொழுகை நடத்தியதற்கான எந்தவிதமான ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை. 1885 ஆண்டிலிருந்து இந்தப் பிரச்சனை இருந்த போது அத பிரச்சனைக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் 1935 ஆம் ஆண்டு மீண்டும் பிரச்சனை தலை தூக்கியது. அபோது என்ன சொல்லப்பட்டது என்றால், முஸ்லிம்கள் ஒரு பக்கம் தொழுகை நடத்திக்கொள்ளலாம், இந்துக்கள் ராமரை வழிபடலாம் என ஒரு தீர்வு எட்டப்பட்டது.
 
இப்படியான சூழலில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த 70 ஆண்டு காலகட்டத்தில் முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்தவில்லை.
 
இவை எல்லாம் வாதமாக வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அயோத்தியாவில் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கை. இந்த மத நம்பிக்கையில் உச்ச நீதிமன்றம் குறுக்கீடு செய்ய முடியாது. மேலும் தொல்லியல் துறை கொடுத்த ஆவணங்களில், 12ஆம் நூற்றாண்டில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்த வழிபாடுதலம் இருந்தது என குறிப்பிடப்பட்டது. ஆனால், அது இந்து கோயிலா என தெரியாது. இந்துக்கள் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பு அங்கு இருந்துள்ளது. அதனை இடித்துதான் பாபர் மசூதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசூதி வெற்று இடத்தில் கட்டப்படவில்லை என்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளது. அதனால் முழுமையான உரிமையை இஸ்லாமிய தரப்பு கோர முடியாது. ஆனால், இந்துகளின் நம்பிக்கையின் அடிப்படையிலும், மத உணர்வின் அடிப்படையிலும் இந்த இடம் ராமருக்குதான் சொந்தமென இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது."
 
ஒரு வேளை சீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்?
 
"சாதாரணமாக சீராய்வு மனுவை சேம்பரில்தான் விசாரிப்பார்கள். உதாரணத்துக்கு சீராய்வு மனுவில், மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது பல்வேறு தரப்பும் எங்களை இந்த வழக்கில் விசாரிக்கவில்லை என்று கூறினார்கள். அதனால் அந்த வழக்கில் சீராய்வு மனு மறு வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதுபோல, இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில், இந்த அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என்று தரவுகளுடன் நிறுவினால், மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படலாம். ஆனால், மறு விசாரணைக்கு குறைந்த வாய்ப்பே உண்டு. ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி, அந்த பகுதி முறையாக விசாரிக்கப்படவில்லை என்று நிறுவினால், அவை மட்டும் மீண்டும் விசாரிக்கப்படலாம். முழுமையான விசாரணைக்கான வாய்ப்பு குறைவு".

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக கரூரில் பா.ம.க ஆலோசனை கூட்டம்