Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவித்த மலேசிய தமிழ் படம் 'பரமபதம்'

ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவித்த மலேசிய தமிழ் படம் 'பரமபதம்'
, வியாழன், 24 டிசம்பர் 2020 (10:33 IST)
ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உலக அளவில் கவுரவமிக்கதாகக் கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதுப் போட்டியில் மலேசியா சார்பாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளது 'பரமதம்' திரைப்படம்.
 
24 வயதான இளைஞர் விக்னேஷ் பிரபு, தன் சகோதரர் தனேஷ் பிரபுவுடன் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்.
 
கடந்த ஆண்டே வெளியீட்டிற்கு தயாராகிவிட்ட போதிலும், கோலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட இறக்குமதி படங்களின் தொடர் வெளியீடுகள், கொரோனா விவகாரம் ஆகிய காரணங்களால் இப்படம் இன்னும் மலேசியாவில் திரை காணவில்லை.
 
எனினும் 18 அனைத்துலக விருதுகள் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மலேசிய சாதனைப் புத்தகத்திலும் ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது, 'பரமபதம்' திரைப்படம்.
 
"மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஒன்று, 'கோல்டன் குளோப்' விருதுக்கு போட்டியிட தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
 
" 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான விருதுக்கு 77 நாடுகளில் இருந்து, சுமார் 300 படங்கள் விண்ணப்பித்திருந்தன. எனினும் 139 படங்கள் மட்டுமே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அவற்றுள் 'பரமபதம்' படமும் ஒன்று என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை 'சூரரைப் போற்று', 'அசுரன்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களும் விருதுப் போட்டியில் உள்ளன" என்கிறார் விக்னேஷ் பிரபு.
 
"மலேசியாவில் உருவான ஒரு தமிழ்த் திரைப்படம் உலகளவில் 18 விருதுகளை இதற்கு முன் பெற்றதில்லை. அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று இச்சாதனையைப் புரிந்திருக்கிறது 'பரமபதம்'."
 
"மலேசியாவில் தமிழில் உருவான முதல் ஃபேன்டெசி (Fantasy) வகைப் படம் இதுதான். மேலும் 'கேம் போர்ட்' (Game board) விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான முதல் மலேசிய படமும் கூட. '3டி அனிமேஷன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ள முதல் மலேசிய தமிழ்த் திரைப்படம் என்றும் குறிப்பிடலாம். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் பணியாற்றிய நிறுவனம் தான் எங்களுக்கான காட்சிகளையும் உருவாக்கித் தந்துள்ளது.
 
"இப்படி பல 'முதல்'களுக்கு வித்திட்டுள்ளது 'பரமபதம்'. இதன் மூலம் மலேசிய தமிழ்த்திரையுலகம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதாக நம்புகிறேன்," என்கிறார் விக்னேஷ் பிரபு.
 
பரமபதம்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் (Trailer) பார்த்து இயக்குநர் பாக்யராஜ் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்ததாக குறிப்பிடுபவர், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல இயக்குநர் தார்ஸ்டென் ஸ்கேட் (Thorsten schade) தெரிவித்த பாராட்டும் பெருமை அளிப்பதாகக் கூறுகிறார்.
 
"தார்ஸ்டென் ஸ்கேட் உலகின் தலைசிறந்த குறும்பட இயக்குநர். இப்போது திரைத்துறையிலும் காலெடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கிய 'த இன்விடேஷன்' ('The Invitation') என்ற குறும்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி இதுவரை 48 அனைத்துலக விருதுகளைப் பெற்றுள்ளது.
 
"அவர் 'பரமபதம்' டிரெய்லரை பார்த்து பாராட்டி உள்ளார். அது தொடர்பாகு சிறு காணொளிப்பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டிருப்பதை எங்கள் படைப்புக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாக கருதுகிறோம்," என்று சொல்லும் விக்னேஷ் பிரபு, மிக விரைவில் மலேசிய தமிழ்ப் படங்கள் கோலிவுட் படங்களுக்கு இணையாக உருவாகும் என்றும், நிறைய இளைஞர்கள் திரையுலகுக்கு பல்வேறு திறமைகளுடன் வந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.
 
மலேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவருடன் விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு.
 
"வெளிநாட்டுக் கலைஞர்களும் பாராட்டும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம் என்பதே முன்னேற்றத்துக்கான அறிகுறி தான். கோலிவுட் திரைப்படங்கள் அதிகளவில் வந்து குவிவதால் மலேசிய உள்நாட்டுப் படைப்புகளுக்கு போதிய திரையரங்குகள், ஊடக வெளிச்சம் கிடைப்பது கடினமான உள்ளது. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் பிரச்னை.
 
"எனவே கோலிவுட் படங்களுக்கு இணையான படைப்புகளை தந்தால் மட்டுமே மலேசிய தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறோம். அதை மனதிற்கொண்டே 'பரமபதம்' உருவாகி உள்ளது.
 
"நான்கு நாட்களில் நான்கு நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் திடீர் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய போராட்டங்களை 'பரமபதம்' விளையாட்டின் மூலம் விவரிப்பதுதான் இப்படத்தின் கதைக்களம்," என்கிறார் விக்னேஷ் பிரபு.
 
பாலன்ராஜ், எம்.ஜெகதீஷ் இசையமைத்துள்ள இப்படத்துக்கான பாடல்களை ஃபீனிக்ஸ் தாசன், டாக்டர். லட்சா பிரபு, பாலன்ராஜ், வின்ஸ் ஆகியோர் எழுதியுள்ளனர்.
 
ஜெகதீஷ்வரன் ஒளிப்பதிவைக் கவனிக்க, லட்சா பிரபு ராஜகோபால், சக்ரவர்த்தி ராஜகோபால் தயாரித்துள்ளனர்.
 
மலேசியாவில் தற்போது கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனவே, திரையரங்குகள் அடுத்த ஆண்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அனேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரமபதம் படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை திரையரங்குகளை திறக்க கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், ஓடிடியில் படத்தை திரையிடும் வாய்ப்பை படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாப் 10 எம்.பி-க்கள்: காங், திமுகவுக்கு இடம்; அதிமுகவில் இருந்து ஒருத்தர காணல...