Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்றத்தில் பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை - மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர்

Advertiesment
Australian PM
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:52 IST)
நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர் அலுவலம் ஒன்றில் உடன் பணிபுரியும் மூத்த ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் அரசியல் ஆலோசகரிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு தனது வேலை பறிபோகும் என்று அஞ்சியதாக கூறும் பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்ற அந்த பெண் அதிகாரி, இதுதொடர்பாக தனது மேலதிகாரிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
 
26 வயதாகும் பிரிட்டானி ஹிக்கின்ஸ், நேற்று (பிப்ரவரி 15, திங்கட்கிழமை) இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி, ஆஸ்திரேலியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
 
இந்த நிலையில், ஹிக்கின்ஸின் புகார் கையாளப்பட்டது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
 
மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
பெண் அதிகாரியின் குற்றச்சாட்டுகளை கேட்டு தான் "நொறுங்கிவிட்டதாக" கூறிய மோரிசன், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தை ஆய்வுக்குட்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
"இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கவே கூடாது. நாடாளுமன்றத்தில் பணிபுரியும் எந்தவொரு இளம் பெண்ணும் பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
 
இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 16, செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிட்டானியின் குற்றச்சாட்டு, நம் அனைவரையும் விழித்தெழ வைப்பதற்கான அழைப்பு போன்றது என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
 
என்ன நடந்தது?
 
"2019ஆம் ஆண்டு ஒருநாள், நான் இரவுநேரத்தில் வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது நாடாளுமன்றத்தில் உடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் என்னை காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறினார். ஆனால், மாறாக அவர் காரை நாடாளுமன்றத்துக்கு ஓட்டிச் சென்றார்" என்று பேட்டியொன்றில் பிரிட்டானி தெரிவித்துள்ளார்.
 
தான் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் தூங்கியதாகவும் கூறிய அவர், தான் கண்விழித்தபோது, அந்த மூத்த அதிகாரி பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதை பார்த்ததாகவும் கூறினார்.
 
"நான் உடனே அழத்தொடங்கிவிட்டேன்… உடனே நிறுத்துங்கள் என்று அவரிடம் கூறினேன்" என்று நெட்ஒர்க் டென் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து சம்பவ இடத்தை விட்டு அந்த மூத்த அதிகாரி சென்றுவிட்டதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தை விட்டு தான் வெளியே சென்றபோது அங்கிருந்த காவலாளிகள் யாரும் தனக்கு உதவவில்லை என்றும் பிரிட்டானி தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவத்திற்கு அடுத்த சில நாட்களில், இதை அமைச்சரின் அலுவலகம் "சமாளிக்க" முற்படுவதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.
 
இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தால் தான் ஆதரவு கொடுப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் இது தனது பணிவாழ்க்கைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் என்று கருதியதால் தவிர்த்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த மூத்த அதிகாரி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டகாக பிரிட்டானி தனது தொலைக்காட்சி பேட்டியின்போது மேலும் கூறினார்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மோரிசன் அமைச்சரவையில் உள்ள மற்றொரு அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பிறகு அந்த துறையிலிருந்தே விலகிவிட்டார்.
 
நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்த சம்பவம் பெண்களின் பணிப்பாதுகாப்பு குறித்த விவாதத்தை ஆஸ்திரேலிய முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் இல்லை… முதல்வர் அறிவிப்பு!