Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக பெற்றதாக சூச்சி மீது குற்றச்சாட்டு – மியான்மரில் தற்போதைய நிலவரம் என்ன?

11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக பெற்றதாக சூச்சி மீது குற்றச்சாட்டு – மியான்மரில் தற்போதைய நிலவரம் என்ன?
, வெள்ளி, 12 மார்ச் 2021 (09:31 IST)
மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூச்சி 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாகப் பெற்றதாக மியான்மர் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
 
கடந்த 2021 பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்த பின், சூச்சி மீது ராணுவம் கூறிய குற்றச்சாட்டுகளிலேயே இது மிகப் பெரியது மற்றும் கடுமையானது.
 
இதுவரை சூச்சி சட்ட விரோதமாக பணம் மற்றும் தங்கத்தைப் பெற்றதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சூச்சி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
 
மியான்மரில் ராணுவம் "மனிததன்மைக்கு எதிரான குற்றங்களைச்" செய்து வருகிறது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆய்வாளர் ஒருவர் குற்றஞ்சுமத்தி இருக்கிறார்.
 
"மியான்மர் தற்போது கொலைகார, சட்ட விரோதமான ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தொடர்ந்து மற்றவர்களைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்ற குற்றங்களைச் செய்து வருகிறார்கள்," என ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையிடம் தெரிவித்தார் ஐநாவின் தாமஸ் ஆண்ட்ரூவ்ஸ்.
 
அவரது கூற்றை ஆம்னெஸ்டி மனித உரிமைகள் குழுவும் உறுதிப்படுத்துகிறது.
 
மியான்மர் தலைவர்கள் மற்றும் மியான்மர் ராணுவத்துக்குச் சொந்தமான மியான்மர் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என ஆண்ட்ரூவ் கூறினார். இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரைத் தொடவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே அமெரிக்கா 10 ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர்கள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது தடை விதித்திருப்பது நினைவுகூரத்தக்கது. இதில் தற்போதைய பொறுப்பு அதிபரும் அடக்கம்.
 
மியான்மரில் தற்போதைய போராட்ட நிலவரம் என்ன?
நேற்று (மார்ச் 11, வியாழக்கிழமை) மியான்மர் ராணுவத்தால் மேலும் 7 பேர் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக, இந்த கொலையை நேரில் கண்டவர்கள் கூறினர். ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70-ஐ கடந்துவிட்டது.
 
இந்த ஏழு பேரில் ஆறு பேர் மியாயிங் நகரத்தில் கொல்லப்பட்டனர்.
 
"நாங்கள் அமைதியாக போராடிக் கொண்டிருந்தோம்" என ஒரு சுகாதாரப் பணியாளர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறினார். "அவர்கள் இப்படிச் செய்வார்கள் என என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.
 
மீதமுள்ள ஒருவர் யங்கூனின் வடக்கு டாகோன் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளார். 25 வயதான சிட் மின் து தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.
 
"இந்த சூழல் ஒரு முடிவுக்கு வரும் வரை யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்கள் என் மகனோடு மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார்கள்" என சிட் மின் து-வின் தாய் நின் மலர் ஆங் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
 
"ராணுவம் கூடுமானவரை கட்டுப்பாடுகளைத் தான் செயல்படுத்தி வருகிறது, போராட்டக்காரர்கள் தான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்," என போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார் ஒரு மூத்த ராணுவ அதிகாரி.
 
புதிய குற்றச்சாட்டு
 
ஆங் சான் சூச்சி 6 லட்சம் அமெரிக்க டாலரை ரொக்கப் பணமாகவும், 11 கிலோ தங்கத்தையும் தன்னிடமிருந்து சட்ட விரோதமாகப் பெற்றதாக, யங்கூனின் முன்னாள் முதல்வர் ப்யோ மெயின் தெய்ன் கூறியதாக மியான்மர் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சா மின் துன் கூறினார். மேலும் இது குறித்து ஊழலுக்கு எதிரான கமிட்டி விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்தக் குற்றச்சாட்டை தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆய் மா மா மயோ மறுத்திருக்கிறார்.
 
"அப்பாவி இளைஞர்கள் பொதுவெளியில் கொல்லப்படும் போது, அரசியல்வாதிகள் மீது அவதூறு கூறுவது மற்றும் கட்சியை நசுக்கும் முயற்சிகளை மேற்கொள்வது சகஜமானது," என ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார் ஆய் மா மா மயோ.
 
தற்போது ராணுவத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் மற்றும் பல்வேறு கேபினெட் அமைச்சர்கள் மீது, ஜெனரல் சா மின் துன் ஊழல் குற்றங்களை சுமத்தியுள்ளார்.
 
மியான்மரில் என்ன பிரச்னை?
மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்தது.
 
அத்தேர்தலில் எந்த வித முறைகேடுகளும் நடக்கவில்லை என சர்வதேச சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள் மியான்மர் ராணுவத்துடன் முரண்படும் விதத்தில் கூறினர்.
 
கடந்த ஐந்து வாரங்களாக ஆங் சான் சூச்சி எங்கோ பெயர் குறிப்பிடாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், சட்ட விரோதமாக சில ரேடியோ கருவிகளை வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
 
சூச்சி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது மற்றும் ராணுவம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மியான்மரின் சாலைகளில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
மியான்மர் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, ஐ.நா., மற்றும் அமெரிக்கா போன்ற சில நாடுகள் கண்டித்திருக்கிறன.
 
இந்த விமர்சனங்களை எல்லாம் மியான்மர் ராணுவம் நிராகரித்து இருக்கிறது. மாறாக கலவரத்துக்கு ஆங் சான் சூச்சி தான் காரணம் என அவர் மீது பழி சுமத்தி இருக்கிறது.
 
மியான்மர் - சில குறிப்புகள்
மியான்மர், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.
 
2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
 
2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இரண்டாக பிரியும் பாமக வாக்குகள்!