Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன், பா.ரஞ்சித் இடையே முரண்பாடுகள் அதிகரிக்கிறதா? காரணங்கள் என்ன?

Prasanth Karthick
திங்கள், 22 ஜூலை 2024 (13:25 IST)

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது, அந்த படுகொலையை கண்டிப்பது போன்றவை விடுதலைச் சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.


 

யாரோடும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர், அதே சமயத்தில் எந்தவொரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்நிலையில் வைத்து அணுகியது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
 

சனிக்கிழமை அன்று, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி' நிகழ்வைக் குறிப்பிட்டுதான் திருமாவளவன் பேசியதாக விமர்சனங்களும் எழுந்தன.
 

இந்த பேரணியின் போது பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், "எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். அவருக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் நிற்க மாட்டோம். அவர் எங்களுடைய குரல்" எனக் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளில் சிலவற்றுக்குள் முரண்பாடுகள் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

'விசிகவுக்கு எதிரான அவதூறுகள்'


 

வெள்ளிக்கிழமை (20.07.2024) அன்று தனது முகநூல் பக்கத்தில், நேரலையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "கூலியைப் பெற்றுக் கொண்டு, சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற, அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
 

விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும் நிலையில், அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்றும் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தினார் திருமாவளவன்.


 

சனிக்கிழமை (21.07.2024) அன்று நீலம் பண்பாட்டு மையத்தின் பேரணி நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக திருமாவளவன் இவ்வாறு பேசினார்.
 

ஆனால், திருமாவளவன் நீலம் பண்பாட்டு மையத்தைக் குறித்து பேசவில்லை என்றும், தங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும் கூறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி.
 

"ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் நீதி வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படியிருக்க, உண்மையில் சில சக்திகள் கூலி வாங்கிக்கொண்டு இந்த விஷயத்தை திமுகவுக்கு விசிகவுக்கும் எதிராக திருப்ப முயல்கிறார்கள். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. அவர்களைதான் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார்" என்கிறார்.
 

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, விசிக தலைவர் திருமாவளவன் அதனை மறுத்து, "கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை" என்று தெரிவித்தார்.
 

இதைச் சுட்டிக்காட்டிய ஆதிமொழி, "நாங்கள் கண்மூடித்தனமாக திமுகவுக்கு ஆதரவளிப்பவர்கள் அல்லர். மக்களுக்கான பணி என்பது வேறு, தேர்தல் அரசியல் என்பது வேறு என்பதில் தெளிவாக உள்ளோம். தொடக்கத்திலிருந்தே இந்த படுகொலை வழக்கில் நீதிக்காக தீவிரமாக பணியாற்றுவது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்" என்று கூறினார்.
 

பல வருடங்களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நிற்கும் அமைப்பு என்ற முறையில், ஆம்ஸ்ட்ராங் தொடர்பான நிகழ்வுகள் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதில் தவறு இல்லை என்றும் அவர் கூறினார்.
 

'நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள்'


 

சென்னை எழும்பூரில், சனிக்கிழமையன்று நடைபெற்ற 'ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணியில்' பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் பி-டீம் என்று சொல்கின்றனர். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். பாஜகவிற்கு எப்போதும் நேர் எதிரானவர்கள் நாங்கள்” எனக் கூறினார்.
 

திமுகவை மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளையும் தான் விமர்சிப்பதாக கூறிய அவர், "அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றியுள்ளன. அதிமுக, திமுகவுக்குதான் நாங்கள் மாற்றி மாற்றி வாக்கு செலுத்தியுள்ளோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு செய்தது என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.


 

இது பணத்திற்காக கூடிய கூட்டம் அல்ல என்பதைக் குறிப்பிட்ட பா. ரஞ்சித், பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
 

இந்தப் பேரணியின் முடிவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லாத பட்சத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும், தமிழகத்தின் தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், ஆம்ஸ்ட்ராங் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை விசாரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

இந்த பேரணி குறித்து பேசிய நீலம் பண்பாட்டு மையத்தின் வாசுகி பாஸ்கர், "பொதுவாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலில், இயக்கங்களுக்கும் தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சிகளுக்கும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி சில சிக்கல்கள் எங்களுக்கும் விசிகவுக்கும் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தலைவர் திருமாவளவனை ஒரு முன்னோடியாகத்தான் பார்க்கிறோம்" என்றார்.
 

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருப்பதன் அர்த்தம், நீலம் பண்பாட்டு மையம் தேர்தலில் களம் காணப்போகிறது என்பது அல்ல என்கிறார் வாசுகி பாஸ்கர்.
 

"அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கை 'ரவுடி' என்று சொன்னார்கள். தலித் ஒருவரை 'ரவுடி' என குற்றம் சுமத்தினால் அதை இந்த சமூகம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். இதை மாற்ற தான் நீலம் பண்பாட்டு மையம் போராடி வருகிறது. இப்போதைக்கு தேர்தல் அரசியலில் நுழையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்கள் பின்னால் எந்தக் கட்சியும் இல்லை. மக்களை அணிதிரள சொல்வது, அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கத்தான்" என்று கூறினார் வாசுகி பாஸ்கர்.
 

'திருமாவளவன் செய்தது சரியே'


 

பல வருடங்களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் களத்தில் நிற்கும் ஒரு தலைவர் என்ற முறையில் திருமாளவன் இந்த விஷயத்தை அணுகுவது சரியே என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.
 

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே அரசுக்கும் காவல்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருபவர் திருமாவளவன். அவர் இதுபோல பல சூழ்நிலைகளை கையாண்டவர் என்பதால், எது நடைமுறையில் சாத்தியம் என அவருக்கு தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் ரஞ்சித் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறார்." என்று கூறுகிறார் அவர்.
 

"தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை என ரஞ்சித் கூறுகிறார், திமுகவின் உறுப்பினர்களை விமர்சிக்கிறார். அதேவேளையில் திருமாவளவனுக்கு எதிராக நிற்கவில்லை என்றும் கூறுகிறார். அப்படியென்றால் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியே வர வேண்டும் என்று பா.ரஞ்சித் எதிர்பார்க்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
 

இப்படிப்பட்ட திமுக எதிர்ப்பு கருத்துகள் நீலம் பண்பாட்டு மையத்தின் பேரணியில் வெளிப்படும் எனக் கணித்ததால்தான் திருமாவளவன் அதைப் புறக்கணித்துவிட்டார் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments