மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த தீர்ப்புடன் தான் மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பில் எந்த சட்ட மற்றும் அரசியலமைப்பு குறைபாடுகளும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லுபடி காலம் போன்ற முக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடைய பிரச்சனைகளை முடிவு செய்ய, தலைமை நீதிபதியால் அமைக்கப்படும் பொருத்தமான அமர்வு முன்பு மனுக்களை வைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட 52 நாள் கால அவகாசம் நியாயமற்றது அல்ல என்றும், அதை இப்போது நீட்டிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 1978ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசமாக 3 நாட்கள் வழங்கப்பட்டது. பின்னர் மேலும் 5 நாட்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் சார்பில் நீதிபதிகள் கவாய் மற்றும் நாகரத்னா ஆகியோர் தீர்ப்பை வாசித்தனர். நீதிபதி கவாய் தனது தீர்ப்பில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் அரசின் முடிவு எடுக்கும் செயல்முறை குறைபாடுடையது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
எனினும், நீதிபதி கவாயின் தீர்ப்புடன் தான் மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில்,”இந்திய ரிசர்வ் வங்கி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் பாதுகாப்புச் சுவர். பொருளாதார, நிதி சார்ந்த முடிவுகள் சிறந்தவையா என்பதை இந்த நீதிமன்றம் ஆராய முடியாது. பிரிவு 26(2)ன் பொருள், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நன்மை தீமைகளை ஆராய்வது அல்ல." என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிவு 26(2)ன் படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான முன்மொழிவு ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிடமிருந்து வெளிவர வேண்டும் என்றும் எந்த பரிசீலனையும் மேற்கொள்ளாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்டது என்றும் குறிப்பிட்ட அவர் , சட்டம் மூலமாகவே பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரகசியம் தேவை என மத்திய அரசு கருதியிருந்தால் அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம் இல்லாமல் ஜனநாயகம் தழைத்தோங்க முடியாது. எனவே, இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது என்று நாகரத்னா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஆர்பிஐ சட்டப்பிரிவு 26(2) கூறுவது என்ன?
மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசிதழில் அறிவிப்பின் மூலம், பொது பயன்பாட்டிற்கு எந்த ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்கலாம். இருப்பினும், அத்தகைய நோட்டுகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசம் வரை செல்லுபடியாகும்.
2019ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாட்டு மக்களிடம் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இதனிடையே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதிலும் இருந்து 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதி, அப்துல் நசீர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்றம் , கடந்த டிசம்பர் 22ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில்தான் இன்று 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பையும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.