அமெரிக்காவில், பில் கேட்ஸ், பராக் ஒபாமா, எலான் மஸ்க் போன்றோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன.
இதுகுறித்து எஃப்.பி.ஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. அமெரிக்க செனட்டின் வர்த்தக கமிட்டி, ட்விட்டர் நிறுவனம் இதுகுறித்து ஜூலை 23ஆம் தேதியன்று விளக்கம் தர வேண்டும் என கோரியுள்ளது.
மேலும் பல அமெரிக்க அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் ஜோஷ் ஹாவ்லெ, அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடை அனுப்புமாறு கோரப்பட்டது.
"எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்" என பில் கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன. இதற்கு பதில் நடவடிக்கையாக `வெரிஃவைட்` கணக்குகள் எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது ட்விட்டர் நிறுவனம்.
கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்வீட்டுகள் காரணமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் இந்திய மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய். இந்த ட்விட்டர் கணக்குகள் மில்லியன் கணக்கான பின்தொடர்வோரைக் கொண்டுள்ளவை.