Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகா ஹிஜாப் மாணவி: அல் – கய்தா வெளியிட்ட வீடியோவில் என்ன பேசப்பட்டது?

கர்நாடகா ஹிஜாப் மாணவி: அல் – கய்தா வெளியிட்ட வீடியோவில் என்ன பேசப்பட்டது?
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (14:07 IST)
கர்நாடகாவில் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு நடுவே, தனி ஆளாக ஹிஜாப் அணிந்துகொண்டு, அல்லாஹூ அக்பர் என முழக்கமிட்டபடி மாணவி முஸ்கான் கான் சென்றார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
 
தற்போது, அல்-கய்தா அமைப்பின் தலைவர் அய்மன் ஸவாஹிரி, அதைக் குறிப்பிட்டு மாணவி முஸ்கானை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 8 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவில், கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் தடையை எதிர்த்து கல்லூரிக்கு முன்பாக ஹிஜாப் அணிந்து வந்து முழக்கமிட்ட இஸ்லாமிய மாணவி முஸ்கான் கானை "நமது முஜாஹிப் சகோதரி" என்று குறிப்பிட்டு, அவர் செய்தது "துணிச்சலான சாதனை" எனப் பாராட்டியுள்ளார். இது கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ஹிஜாப் விவகாரத்தில் கண்ணுக்குப் புலப்படாத சிலரின் பங்கு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே தான் கூறி வருவதாகவும் நடந்துவரும் சம்பவங்களை மாநில உள்துறை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்தபோது கர்நாடக உயர்நீதிமன்றமும் இதே கருத்தைக் கூறியிருந்தது எனக் குறிப்பிட்டவர், "அல்-கய்தாவை சேர்ந்தவரின் காணொளி மூலம் இது உறுதியாகியுள்ளது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் உண்மை தெரியவரும்," எனத் தெரிவித்துள்ளார்.
 
"எங்கள் நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம்"
அய்மன் ஸவாஹிரியின் வீடியோ குறித்து முஸ்கான் கானின் தந்தை முகமது ஹுசைன் பிடிஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "எங்களுக்கு அந்த வீடியோ பற்றி எதுவும் தெரியாது. அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. இன்றுதான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அவர் அரபு மொழியில் ஏதோ பேசினார். நாங்கள் அனைவரும் இங்கு அன்புடனும் நம்பிக்கையுடனும் சகோதரர்களைப் போல வாழ்கிறோம்" என்றார்.
 
அய்மன் ஸ்வாஹிரி முஸ்கான் கானை பாராட்டியது குறித்துக் கேட்டபோது, "அது தேவையற்ற பிரச்னை. எங்கள் நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எங்களை பற்றி அவர் பேச தேவையில்லை. இது தவறு, பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி," என்று கூறினார்.
 
இதற்கு முன்னதாக, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாத பிஸ்வா சர்மா, "கல்வி நிறுவனங்களில் சீருடை அணிவதன் அவசியத்தை அல்-கய்தா ஒருபோதும் புரிந்துகொள்ளாது.
 
ஹிஜாப் உட்பட, சீருடையைத் தவிர வேறு எதையும் மாணவர்கள் அணிவது ஏற்புடையதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீங்கள் ஹிஜாப் அணிந்தால், நாங்கள் வேறு ஒன்றை அணிவோம். பிறகு, பள்ளிகளும் கல்லூரிகளும் மதம் சார்ந்த ஆடைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கான இடமாக மாறிவிடும். அப்படியிருக்கையில் பள்ளிகளோ கல்லூரிகளோ எப்படி ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியும்?
 
அதனால் தான் சீருடை ஏற்படுத்தப்பட்டது. அல்-கய்தா அதை ஒருபோதும் புரிந்துகொள்ளாது. ஆனால், இந்திய இஸ்லாமியர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள்." என்றார்
 
அல் - கய்தாவின் தலைவர் அய்மன் ஸ்வாஹிரி
 
அல்-கய்தா அமைப்பின் தலைவர் அய்மன் ஸ்வாஹிரி உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக இந்தப் புதிய வீடியோ உள்ளது. மே 2, 2011 அன்று, அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஸ்வாஹிரி அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
இவர் பல ஆண்டுகாளாக ஒசாமா பின்லேடனின் துணை அதிகாரியாகப் பணியாற்றினார். 9/11 தாக்குதலின் மூளையாக இவர் இருந்ததாக நம்பப்படுகிறது. 2020-ஆம் ஆண்டின் இறுதியில், அல்-கய்தா தலைவர் அய்மன் ஸ்வாஹிரி இறந்துவிட்டார் அல்லது நோய்வாய்ப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடும் நெருக்கடி; பணக்காரர்களுக்கு 25% வரி உயர்வு! – வருவாய் ஈட்ட இலங்கை திட்டம்!