Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: உதவிக்கரம் நீட்டும் அபுதாபி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:31 IST)
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், மூன்றே நாட்களில் அதானி குழுமம் 5.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இக்கட்டான நிலையில் இருக்கும் அதானி குழுமத்திற்கு அபுதாபியில் இருந்து நேசக்கரங்கள் நீண்டுள்ளன.

அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது முதலே இந்திய பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம் செலுத்துகிறது.
உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்த கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் ஒட்டுமொத்தமாக சரிவைச் சந்தித்தது பங்குச்சந்தை செயல்பாடுகளிலும் எதிரொலித்தது. 

பணக்காரர்கள் வரிசையில் 8வது இடத்திற்கு சரிவு

பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வணிகத்தைத் தொடங்குவதும், சிறிது நேரத்திலேயே அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் சரிவை சந்திப்பதும் கடந்த சில நாட்களாக வாடிக்கையாகிவிட்டது.

அதானி குழுமம் மட்டுமின்றி, கௌதம் அதானிக்கு சொந்தமான மற்ற நிறுவனங்களான ஏ.சி.சி. லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், என்.டி.டி.வி. லிமிடெட் ஆகியவையும் பங்குச்சந்தையின் இந்தப் போக்கில் இருந்து தப்பவில்லை. 

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் வணிகம் நடந்த ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய மூன்றே நாட்களில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.31 லட்சம் கோடி சரிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. அதானிக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களின் இழப்பையும் கணக்கில் கொண்டால், அவரது தொழில், வர்த்தக சாம்ராஜ்யத்தின் மதிப்பில் ரூ.5.6 லட்சம் கோடி ரூபாய் வீழ்ந்திருக்கிறது.

அதானி குழுமத்தின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், அதில் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்துள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் கணிசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கும் கீழே அவர் சரிந்துவிட்டதாக ப்ளூம்பெர்க் பட்டியல் கூறுகிறது. 11-வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானி தற்போதைய நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை மற்றொரு இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் இழப்பார் என்று அது கணித்துள்ளது.

இந்தியா மீதான தாக்குதல் இது - அதானி குழுமம்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து அதானி குழுமம் 413 பக்க விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான  தாக்குதல்" என்று அதானி குழுமம் சாடியிருந்தது. 

மேலும் அந்த அறிக்கையில், "ஷார்ட் செல்லர் என்று ஒப்புக் கொண்டுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், நிதிச் சந்தையில் பொய்யான தோற்றத்தை உருவாக்கி எண்ணற்ற முதலீட்டாளர்களை நஷ்டப்படுத்தி அதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று அதானி குழுமம் குற்றம் சாட்டியிருந்தது. 

"திட்டமிட்டு கொள்ளை" என ஹிண்டன்பர்க் பதிலடி

அதானி குழுமத்திற்கு உடனே பதிலளித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், நாங்கள் எழுப்பியிருந்த 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்று கூறியது.

"இந்தியாவை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கையில் அந்நிறுவனம் தன் மீது தேசிய கொடியைப் போர்த்திக் கொண்டுள்ளது," என்பது போன்ற கடுமையான வார்த்தைகளையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பயன்படுத்தியிருந்தது. 

அதானி குழுமம் விரிவான விளக்க அறிக்கை வெளியிட்ட பின்னரும்கூட பங்குச்சந்தையில் அதன் பங்குகள் சரிவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதானி குழுமத்தின் விளக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்கவில்லை என்பதையே நேற்றைய (திங்கட்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகமும் தெளிவுபடுத்தியது. நேற்று மட்டும் அதானி குழுமம் தன் சந்தை மூலதன மதிப்பில் ரூ.1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது.

அதானி குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்தது மட்டுமின்றி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட கூடுதல் பங்குகளும் முதலீட்டாளர்களின் வரவேற்பைப் பெறவில்லை.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட, சுமார் 4.4 கோடி பங்குகளை வெளியிட்டுள்ள நிலையில், நேற்றைய பங்குச்சந்தை வர்த்தக முடிவில் வெறும் 3 சதவீத பங்குகளை வாங்க மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

அபுதாபியில் இருந்து நீளும் நேசக்கரங்கள்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் நேரிட்ட சரிவை தடுத்த நிறுத்த அதானி குழுமம் பலவாறான உத்திகளைக் கைக்கொண்டு வரும் சூழலில்தான், அபுதாபியில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. 

அபுதாபி அரச குடும்பத்திற்கு நெருக்கமான இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி ரூ.3,260 கோடி ரூபாயை அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
"அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வலுவான அடிப்படை மீது எங்களுக்குள்ள நம்பிக்கையின் பேரில்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் வந்தது.

நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதாயம் தரும் வாய்ப்புகளையும் பார்க்கிறோம்," என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சயீது பசார் ஷூயிப்  தெரிவித்துள்ளார். 

இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி, அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். இந்நிறுவனம் அதானி குழுமத்தில் ஏற்கெனவே கடந்த ஆண்டு ரூ.20,425 கோடியை முதலீடு செய்திருக்கிறது.

தற்போது, அதானி எண்டர்பிரைசஸில் மேலும் முதலீடு செய்வதன் மூலம் அதானி குழுமத்தில் தனக்குள்ள பங்குகளை அந்நிறுவனம் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. 

பங்குச்சந்தையில் அதானி பங்குகள் இன்றும் சரிவு

ஐ.ஹெச்.சி. போன்ற உலகளவில் பெரிய நிறுவனத்தின் முதலீட்டை ஈர்த்துள்ள போதிலும், இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் இடையே இழந்துவிட்ட நம்பிக்கையை அதானி குழுமத்தால் மீட்க முடியவில்லை. இன்றைய வர்த்தக நிலவரமும் அதானி குழுமத்திற்கு சாதகமாக இல்லை. 

ஐ.ஹெச்.சி. முதலீடு செய்தி எதிரொலியாக, பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியபோது அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் சற்று ஏற்றம் கண்டன. அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர் ஆகிய அதானி குழுமத்திற்கு உட்பட்ட பிற நிறுவன பங்குகளும் தொடர்ந்து குறைந்தே வந்தன. 

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கிடைத்த ஏற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதானி குழுமத்தின் மீதான பங்குச்சந்தையின் போக்கில் அந்நிறுவன பங்குகளும் பின்னர் கீழே இறங்கிவிட்டன. 

அதிகபட்சமாக அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 10 சதவீதம் சரிவு கண்டன. ஒரு கட்டத்தில் அதானி வில்மர் பங்குகள் 5 சதவீதமும், அதானி பவர் பங்குகள் 4.99 சதவீதமும், அதானி கிரீன் பங்குகள் 3.6 சதவீதமும் மதிப்பு குறைந்திருந்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments